தெற்காசியாவின் இரண்டு பெரு நகரங்களான மும்பை மற்றும் கராச்சி ஆகியவை தாக்தே சூறாவளியின் பாதையில் உள்ளன.

தாக்தே சூறாவளி உருவாக்கம் மே 14 காலை. படம்: Earth NullSchool/ Down To Earth

2021 ஆம் ஆண்டின் முதல் சூறாவளி இங்கே உருவாகலாம், அது ஒரு புயலாகக் கூட  இருக்கலாம். தாக்தே சூறாவளியானது  மே 16 அளவில் அரேபிய கடலில் உருவாக வாய்ப்புள்ளது. இது மிகக்குறுகிய காலத்தில் சடுதியாக தீவிரமடைந்து கணிப்புகளை கடினமாக்கும் வல்லமை உள்ளதனால், எதிர்வுகூறல் கண்காணிப்பு அமைப்பானது  மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.

புயலின் தற்போதைய பண்புகள் விரைவான தீவிரத்தை குறிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department- IMD) சூறாவளி குறித்த தனது சமீபத்திய குறிப்பில், மே 13 காலையில் தென்கிழக்கு அரேபிய கடலில் லட்சத்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில்  குறைந்த அழுத்த பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

IMD யானது , மே 14 மதியம் வெளியிட்ட அதன் சமீபத்திய சூறாவளி குறிப்பில், அதே நாளின் அதிகாலையில் ஓர் தாழமுக்கம்  ஏற்பட்டுள்ளது என்று கூறியது. கேரளாவின் கண்ணூருக்கு மேற்கு-தென்மேற்கே 360 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தாழமுக்கமானது, மே 14 மாலைக்குள் ஆழமான தாழமுக்கமாக விரிந்து மே 15 காலையில்  ஒரு சூறாவளியாக  தீவிரமடைய வாய்ப்புள்ளதை உணர்த்தியது.

சூறாவளியின் பாதை மே 14 மாலை வரை வடக்கு-வடக்கு கிழக்கு திசையிலும், அதன் பின்னர் வடக்கு வடமேற்கு திசையிலும் குஜராத் கடற்கரையை நோக்கி செல்லும் என்று ஐஎம்டி தனது காலநிலை முன்னறிவிப்பில் எதிர்வுகூறியுள்ளது.

மே 15 மாலைக்குள் சூறாவளி கடுமையான சூறாவளியாகவும், மே 16 மாலைக்கு மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன் கூடிய மிகக் கடுமையான சூறாவளியாகவும் மாறக்கூடும் என்று வானிலை நிறுவனம் கணித்துள்ளது. மே 13 அன்று, ஐ.எம்.டி. மே 16 சூறாவளி உருவாகும் என்று கணித்துள்ளது. சூறாவளியானது  மே 18 காலைக்குள் குஜராத் கடற்கரையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அரேபிய கடலின் அசாதாரண வெப்பமயமாதல் காரணமாக இந்த சூழ்நிலை விரைவாகவும், நிச்சயமற்றதாகவும் மாறி வருகிறது, இது புவி வெப்பமடைதலின் விளைவாக மனித நடவடிக்கைகளிலிருந்து பச்சைவீட்டு  வாயுக்கள் வெளியேற்றப்படுவதன் விளைவாக இருக்கலாம்.

இரண்டு வெவ்வேறு  இணையத்தளங்களில் (Earth Nullschool and Windy) காட்சிப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் சுற்றுச்சூழல் முன்கணிப்பு மையங்களின் சர்வதேச எதிர்வுகூறல் அமையத்தின் தரவானது,  ஏற்கனவே ஒரு தாழமுக்கம்  உருவாகியுள்ளது என்பதையும், மே 14 மாலைக்குள் தாக்தே  சூறாவளி உருவாகக்கூடும் என்பதையும் காட்டுகிறது.

இது IMD  எதிர்வுகூறிய காலக்கெடுவை விட மிகவும் முன்னால் இருக்கும் அதேவேளை, மிக விரைவாக தீவிரமடைந்து இந்தியாவின் மேற்கு கடலோர மாநிலங்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்துவதையும் குறிக்கிறது.

IMD யின் தற்போதைய எதிர்வுகூறலான  மே 16 ஐ விட சூறாவளி உருவாக்கம் வெள்ளிக்கிழமை (மே 14) அல்லது சனிக்கிழமை (மே 15) நிகழக்கூடும் என்று IMBமின் வானிலை நிலையம்  தெரிவித்துள்ளது.

சூறாவளியின் பாதைக்கான IMDயின் தற்போதைய கணிப்பு குஜராத் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைகளை நோக்கிய தற்போதைய நிலையில் இருந்து வடக்கு-வடக்கு மேற்கு திசையில் உள்ளது. சூறாவளி மேலும் வலுப்பெற்று மே 18 மாலைக்குள் குஜராத் கடற்கரையை அடையக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல வானிலை மாதிரிகள் சூறாவளியின் பாதை உண்மையில் கடற்கரைக்கு நெருக்கமாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ளன, அதாவது கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் மே 14 முதல் தொடங்கி வார இறுதிவரை  தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை நிலையம்  தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை கண்காணிப்பு நிறுவனமான IBMஇன் வானிலை நிலையமானது, இந்த சூறாவளி இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் மேற்கு கடற்கரை கண்ட மிக வலிமையான சூறாவளிகளில் ஒன்றாக இருக்கும் என்று கணித்துள்ளது. வார இறுதியில் தெற்காசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு பெரு நகரங்களான, மும்பை மற்றும் கராச்சி  சூறாவளியின் பாதையில் இருக்கும்.

புனேவின் இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியும், மாறிவரும் காலநிலையில் கடல் மற்றும் பனிக்கட்டி நீர்நிலைகள்  பற்றிய காலநிலை மாற்றத்தின் சிறப்பு அறிக்கையின் இடை-அரசு குழுவின் முதன்மை ஆசிரியருமான ரொக்ஸி மேத்யு கோல் Down To Earth தளத்திற்கு கூறியது என்னவென்றால்:

“அரேபிய கடலில் சூறாவளிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. காரணம் என்னவெனில்  வெப்பமயமாதல் காரணமாக ஒப்பீட்டளவில் குளிரான அரேபிய கடல் (வங்காள விரிகுடாவுடன் ஒப்பிடும்போது) சூறாவளி உருவாவதற்கு தீவிரமாக ஆதரவளிக்கக் கூடிய ஒரு சூடான நீர்நிலை  பிராந்தியமாக மாறியுள்ளது,”

ஐக்கிய அமெரிக்காவில்  உள்ள தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில்  உள்ள கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் வெப்ப மண்டலச்  சூறாவளிகளால் மாறிவரும் காலநிலையின் தாக்கத்தை புரிந்து கொள்ள தங்களிடையே சுமார் 90 மறுமதிப்பீடு  செய்யப்பட்ட கட்டுரைகளை பகுப்பாய்வு செய்தனர். வெப்ப மண்டலச் சூறாவளியானது சூறாவளி, புயல் மற்றும் கடும்புயல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு பெயராக இவ்வாய்வுகளில் கருதப்பட்டது.

2100 வாக்கில் உலகம் இரண்டு டிகிரி செல்சியஸால் வெப்பமடையும் பட்சத்தில் அதிகபட்ச சூறாவளி காற்றின் வேகத்தில் ஐந்து சதவீதம் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று அவர்கள் முடிவு செய்தனர். இந்த ஆய்வு மார்ச் 2021 இல் சயின்ஸ் ப்ரீஃப் ரிவியூவில் (Science Brief Review)இல்   வெளியிடப்பட்டது.

கோல் மேலும் கூறியது என்னவென்றால்:

“பெருங்கடல் வெப்பமயமாதல்  சில புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. சூடான கடல் நீர் அவைகளுக்கு எரிபொருள்  போன்று  செயல்படுவதால் சூறாவளிகள் இப்போது வேகமாக தீவிரமடைந்து வருகின்றன. ஃபானி மற்றும் அம்பன் போன்ற மிகக் கடுமையான சூறாவளிகள் சூடான கடல் நிலைமை காரணமாக 24 மணி நேரத்திற்குள் பலவீனமான நிலையில் இருந்து கடுமையான நிலைக்கு தீவிரமடைந்தன. அதிநவீன சூறாவளி மாதிரிகள் இவ்வாறான சடுதியான  தீவிரத்தை எடுக்க முடியவில்லை, ஏனெனில் அவை கடல் இயக்கவியலை துல்லியமாக உள்ளடக்கவில்லை,”

ஒரு சூறாவளியின் அதிகபட்ச நீடித்த காற்று 24 மணி நேரத்திற்குள் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் அதிகரிக்கும் போது அது  சடுதியாக தீவிரமடைகிறது.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் தாக்தேவுக்கும் பொருந்தும். “இது முன்னறிவிக்கப்பட்டதை விட குறைந்த தாழமுக்க  அமைப்பாக வளர்ந்தது. இப்போதைக்கு, மே 16 க்குள் இது ஒரு சூறாவளியாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் வளிமண்டல நிலைமைகள் இப்போது சாதகமாக இருப்பதால், அதற்கு முன்பே சூறாவளி உருவாவதற்கான வாய்ப்புகள் மற்றும் சடுதியான அதன்  தீவிரத்தை நிராகரிக்க முடியாது, ”என்று கோல் எச்சரித்தார்.

அக்சித் சங்கோம்லாவினால் (Akshit Sangomla) மே 14ம்  திகதி Down To Earth  இணையத்தளத்திற்கு “ Cyclone Tauktae can be among the ‘strongest’ on India’s west coast in 2 decades” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்