பழக்கியெடுக்கப்பட்டு வரும் யானைகளின் பாதுகாப்பினையும் அவற்றின் நல்வாழ்வினையும் உறுதி செய்யயும் முகமாக, அரசாங்கம் தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான வனசீவராசிகள் பாதுகாப்பு, மின்சாரவேலி தொடர்பான அமைச்சரான விமலவீர திசாநாயக்கவினால் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியின் பிரகாரம், யானையொன்றைச் சொந்தமாக வைத்திருக்கின்ற அல்லது அதன் கட்டுக்காப்பைக் கொண்டுள்ளவர்களுக்கு இறுக்கமான நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

அண்மைக்காலங்களில் சமய வழிப்பாட்டிடங்கள் மற்றும் தனியார் கைவசம் இருக்கும் யானைகள் கொடூரமாக நடாத்தப்படுவதை சித்திரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அரசின் விலங்குகளை பாதுகாப்பதற்கான தற்போதைய கொள்கைகளுக்கெதிராக பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகளில் முக்கியமான சில பின்வருமாறு :

  • ஒரு யானையைச் சொந்தமாக வைத்திருக்கின்ற அல்லது அதன கட்டுக்காப்பைக் கொண்டுள்ள அத்தகைய ஆள், பாகனானவர் தொழிலுக்கமர்த்தப்பட்டிருக்கையில் ஏதேனும் மதுபானத்தை அல்லது ஏதேனும் தீங்குவிளைவிக்கும் ஒளடதத்தை உட்கொள்ளாதிருப்பதனை உறுதிப்படுத்துதலும் வேண்டும்.

  • ஊர்வலமுட்பட, கலாசாரச் செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்ட வட்டமான முக்காலியுடனான தங்கப் பல்லக்கு மற்றும் தவிர்ந்த ஏதேனும் பாரம் ஒரு யானைமீது இடப்படுமிடத்து, யானையின்மீது தோதான கலணைவார் ஒன்று இடப்பட்டாலொழிய அத்தகைய பாரம் அத்தகைய யானையின்மீது இடப்படுதலாகாது. அத்தகைய யானை சுற்றுலாப் பயணத்துறையில் அல்லது அத்தகைய வேறு செயற்பாட்டில் பயன்படுத்தப்படும்போது, அத்தகைய யானையின்மீது நான்குக்கு மேற்பட்ட ஆட்கள் செல்வது அனுமதிக்கப்படுதலாகாது.

  • யானையொன்று ஏதேனும் வேலையில் ஈடுபடுவதற்குத் தகுதியற்றதென ஒரு விலங்கு மருத்துவர் அல்லது யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவர் தீர்மானிக்கும்போது, அத்தகைய யானை ஏதேனும் வேலையில், சேவையில் அல்லது வேறு கடமையில் பயன்படுத்தப்படுதலாகாது.

  • அவசியமற்ற வேதனையை அல்லது தாங்கொணாத் துன்பநிலையை விளைவிக்கின்ற ஏதேனும் தீங்கு விளைவிக்கும் ஒளடதம் அல்லது பொருள் அத்தகைய யானையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுதலாகாது என்பதுடன் ஏதேனும் மயக்கமூட்டும் ஒளடதம் ஊசி மூலம் யானைக்கு ஏற்றப்படின் அத்தகைய ஒளடதம் ஒரு விலங்கு மருத்துவரின்
    பணிப்புகளுடன் மட்டுமே ஏற்றப்படுதலும் வேண்டும்.

புதிதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை, அரசாமானியின் இந்த சுட்டியில் வாசிக்கலாம்.