பண்டைய மனிதன், ஆரம்பகாலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்காக தனது கால்களை பயன்படுத்திய போதிலும் காலப்போக்கில், தனது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த விலங்குகளை சவாரி செய்வதற்கும், வண்டிகள் போன்ற போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துவதற்கும் பழகிக்கொண்டான்.

அதைத் தொடர்ந்து வந்த தொழில்துறை புரட்சியின் மூலம், போக்குவரத்தின் தேவை இயந்திரங்களாக பூர்த்தி செய்யப்பட்டு பல்வேறு வாகனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த இயந்திரங்களை இயக்க கடந்த காலங்களில் பல்வேறு எரிசக்தி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, இன்று உள்ள முதன்மை எரிசக்தி ஆதாரங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள்களாகும், அவை பச்சை வீட்டு (Green house) வாயுவான காபனீரொக்சைட்டினை (Co2) அதிக அளவில் வெளியிடுகின்றன.

இன்று போக்குவரத்து ஒரு அடிப்படை மனித தேவையாக மாறியுள்ளதோடு, வாகனங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால், பூமிப்பந்தைக்காப்பாற்ற காபனீரொக்சைட்டின் வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தச் செயல்முறையைத் தொடங்க நீங்கள் பல வழிமுறைகளை எடுக்கலாம்.

சைக்கிள்கள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது பல நாடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முக்கியமான ஒரு அங்கமாக கருதப்படுகிறது. பல்வேறு வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சைக்கிள் ஓட்டுவதும், தங்கள் மக்களுக்கு தாம் ஒரு முன்மாதிரியாக இருந்து இச்செயற்பாட்டை மேலும் ஊக்குவிப்பதை நாம் காண முடியும். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான மனிதனால் உருவாக்கப்பட்ட சைக்கிள் எந்த உமிழ்வையும் வெளியிடுவதில்லை, மாறாக சைக்கிள் ஓட்டுதல் உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியையும் வழங்குகிறது. எனவே, குறுகிய தூர பயணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சைக்கிள் ஓட்டுதல் சிறந்த வழி. சைக்கிளோட்டிகளுக்கென சிறப்பு பாதைகளை அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குறுகிய தூர பயணத்திற்கு சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்க முடியும்.

COVID -19 தொற்றுநோய் காலத்திலும் முகக்கவசம் அணிந்த சைக்கிளோட்டிகள் இருவர். படம் : Pixabay.com

ஆனால் வளர்ந்து வரும் நாடான நமது நாட்டிற்கான முதல் சாத்தியமான விடயம் பொது போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவதாகும். இது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு வெளியாகும் காபனீரொக்சைட்டின் அளவைக் குறைக்கும். மிகவும் செயல்திறன்மிக்க மற்றும் சுத்தமான பஸ் மற்றும் ரயில் சேவையை பராமரித்தல், குறைந்த உமிழ்வு மற்றும் எரிபொருள் திறன் கொண்ட பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களைப் பயன்படுத்துதல், மற்றும் தனியார் வாகனங்கலின் பாவனையை குறிப்பிட்ட அளவு குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் வெளியேற்றப்படும் காபனீரொக்சைட்டின் அளவினைக்குறைக்க முடியும்.

இன்னுமொரு சிறந்த வழிமுறை என்னவென்றால் குறைந்த உமிழ்வு மற்றும் எரிபொருள் திறன் கொண்ட வாகனங்களின் பயன்பாடு ஆகும். மின்சார வாகனங்கள், கலப்பு வாகனங்கள் மற்றும் சூரியசக்தி மற்றும் நீரில் இயங்கும் வாகனங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். அத்தகைய வாகனங்கள் மீதான வரிகளை குறைத்தல், மின்சார வாகனங்களுக்கு மீள்சக்தி நிரப்பும் நிலையங்களை உருவாக்குதல், அத்தகைய வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியான இடங்களை ஒதுக்குதல் மற்றும் வாகனங்கள் தரித்திருக்குமிடத்தில் சாதாரண வாகனத்திற்கு வசூலிக்கப்படும் தொகையை விட குறைவாக வசூலித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் உமிழ்வற்ற மற்றும் எரிபொருள் திறன் கொண்ட வாகனங்கலின் பாவனையை ஊக்குவிக்க முடியும்.

நிலைபேறான போக்குவரத்துக்கு பணியிடத்திற்கு சிறப்பு போக்குவரத்து, பணியிடத்தில் ஒரு வாகனத்தில் பலரின் வருகை மற்றும் அத்தகைய குழுவுடன் வருபவர்களுக்கு வசதியான தரிப்பிடங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். பணியிடங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான சிறப்பு பயணத் திட்டங்களையும் உருவாக்குவதன் மூலம் தனிநபர் எரிபொருள் பாவனையை குறிப்பிட்டஅளவு குறைக்க முடியும்.

தற்போதைய கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தும் போது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அயோத்யா கிரியெல்லவினால் BufferZone சிங்கள தளத்தில் “ මිහිතලය සුරැකීම සඳහා තිරසර ප්‍රවාහන ක්‍රම භාවිතයේ අවශ්‍යතාව” என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்