எக்ஸ்பிரஸ் பேர்ள் ( X-Press Pearl) சரக்குக்கப்பல் தீப்பரவல் அனார்த்தத்தினால் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான முதாலம் கட்ட மதிப்பீட்டு அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிர்காரசபை (Marine Environment Protection Authority-MEPA) பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்கு உள்ளாகி சுமார் ஐந்தரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதனால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இத்தகைய பின்னணியில், சூழலியல் பதிப்புக்கள் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக்கோரும் வகையில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ச்பிரல் பேர்ள் என்ற கொள்கலன் கடந்த மேமாதம் 2௦ம்திகதி கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் தீவிபத்திற்கு உள்ளானது. இலங்கை வரலாற்றை பொறுத்தமட்டில் இந்தச் சம்பவம் மிகமோசமான கடல்சார் விபத்தாக பதிவாகியுள்ளது.

குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் சூழலியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவதற்கும் இந்த அனார்த்தம் வழிவகுத்தது.

எனவே அக்கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் குறுங்கால, நடுத்தரகால மற்றும் நீண்டகால ரீதியில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரியவாறு மதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

மிகப்பாரியளவிலான இரசாயனப்பதார்த்தங்கள் அக்கப்பலில் ஏற்ரப்பட்டிருந்தமையினால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்காக மிகவும் ஆழமான கண்காணிப்புக்களையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளவேண்டியேற்படலாம்.

மேற்படி அனர்த்தத்தினால் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடற்சூழலியல் ரீதியிலும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கடல்சார் சூழல் அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட விசெடநிபுனர் குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகின்றன.

கடற்சூழலியல்சார் உயிர்பல்வகைமை, மீன்பிடித்துறையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியான தாக்கங்கள், எண்ணெய் மற்றும் இரசாயனப்பதார்த்தங்களின் கசிவினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கடல்சார் வளங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், சூழலியல் பாதிப்புக்கள், சுகாதாரத்தாக்கங்கள், நிலைபேறான தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் குறித்த விசேடநிபுணர் குழு அதன் மதிப்பீடுகளின்போது கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்பாதிப்புக்களுக்குக் காரணமான தரப்பினரிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டிய மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் விசேட நிபுணர் குழு ஈடுபட்டு வருகின்றது.

அவ்வறிக்கையின் பிரகாரம், அனார்த்தத்தின் பின்னரான கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை திட்டமிட்டிருக்கின்றது.

அதன்படி இம்மாத இறுதியில் முதலாவது மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் அனார்த்தத்தினால் சுற்றுச்சூழல், சமூகம், மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களின் நிதிசார் மதிப்பீடு அம்முதலாவது அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறையாக இதனை மாற்றியமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக பொதுமக்கள் அனைவரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனார்த்தம் தொடர்பில் தம்வசமுள்ள தகவல்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தரவுகள் பொதுமக்கள்சார் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படுவதுடன், அவை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள முதலாவது மதிப்பீட்டு அறிக்கையிலும் உள்ளடக்கப்படும். பொதுமக்களால் அனுப்பிவைக்கப்படும் தரவுகள் எழுத்துமூலமானதாகவோ அல்லது ஒளிப்பதிவு, காணொளிகள், ஆய்வறிக்கைகள் வடிவிலோ அமையலாம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பதாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனுப்பிவைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.