அ .கோகில தர்ஷனி

“உலகிலிருந்து அழிவடைந்துவிட்டதாக சிவப்பு தரவுப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கைக்கே உரித்தான தாவரமான Crudia Zelanica தாவரமானது அதிவேக பாதை அமைப்பு நடவடிக்கைகளால் அழிவடையும் நிலைக்கு உள்ளாகும் நிலையில் காணப்பட்ட போது கம்பஹாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” “அழிவடைந்துள்ளதாக எண்ணப்பட்ட அரிய வகை தாவரமான கன புஸ்வெல் (Entada Scandenus) என சிங்கள மொழியில் அழைக்கப்படும் தாவரம் 172 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” இவை கடந்த நாட்களில் அடிக்கடி கேட்கக்கூடியதாகவும், பேசப்பட்டதுமான இரு விடயங்களாகும்.

சூழலியலாளர்கள் பலரும் சிவப்பு தரவுப் புத்தகம் தொடர்பில் நன்கு அறிந்துள்ளவர்களாக காணப்படுவதுடன் ஏனையவர்கள் அது என்னவென்று எண்ணுமளவிற்கேனும் அது தொடர்பில் அறியாதவர்களாக காணப்படுகின்றனர். எவ்வாறெனினும் சிவப்பு தரவுப் புத்தகம் என்பது எவ்வளவு முக்கியமானதாக காணப்படினும் அதில் பெயர் உள்ளடக்கப்படுவது கண்களை சிவக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

அழிவடைந்த நிலைக்கு தள்ளப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அவற்றிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் தன்மைகளின் அடிப்படையில் பட்டியலிடுவதற்காக சிவப்பு தரவுப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினை இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச ஒன்றியம் (IUCN – International Union for the Conservation of Nature and Natural Resources) உருவாக்கியுள்ளது. இதன் பிரதான நோக்கம் உலகில் பல்வேறுபட்ட சுற்றாடல் மற்றும் மனித செயற்பாடுகளால் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விலங்குள் மற்றும் தாவர சமூகத்தினை கணக்கெடுப்புக்கு உள்ளாக்கி அவற்றை அச்சுறுத்தல்களின் தன்மையின் அடிப்படையில் பட்டியல் படுத்தி குறித்த விலங்கு மற்றும் தாவரங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுத்தல் மற்றும் குறித்த தொகுதி தொடர்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல். 1988 ஆம் ஆண்டில் இலங்கையில் சிவப்பு தரவுப் புத்தகத்தின் ஆரம்ப அறிக்கை இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச ஒன்றியம் (IUCN) இன் இந்நாட்டு கிளையினால் வெளியிடப்பட்டது.

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தன்மையின் அடிப்படையில் IUCN அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்பது (090 உயிரியல் வகைப்படுத்தல்களுக்கு அமைவாக அவை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அழிவடைந்துள்ள – Extinct (EX), பரம்பரையினால் பரவல் இடம்பெறாத – Extinct in the Wild (EW), அழிவடையும் அச்சுறுத்தல் உக்கிரமாகக் காணப்படும் – Critically Endangered (CR), அழிவடையக்கூடுமான கூடிய அச்சுறுத்தல் காணப்படும் – Endangered (EN), ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய – Vulnerable Species (VU), அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய – Near Threatened (NT), குறைந்த அச்சுறுத்தல்கள் காணப்படும் Least Concern (LC), தரவுகள் தேவைப்படக்கூடிய – Data Deficient (DD), வகைப்படுத்தலுக்கு உள்ளாகாத – Not Evaluated (NE)

அழிவடைந்துள்ள – Extinct (EX)

ஏதேனுமொரு வகைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இறுதி உயிரினமும் அழிவடைந்து புதிய தலைமுறையினை உருவாக்குவதற்கான எந்தவொரு உயிரினமும் காணப்படாத நிலைக்கு சான்று பகரும் உயிரினங்கள் இவ்வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பரம்பரையினால் பரவல் இடம்பெறாத – Extinct in the Wild (EW)

இயற்கைச் சூழலில் அழிவடைந்துள்ள போதிலும் உருவாக்கப்பட்டும் நிலைமைகளின் கீழ் மாத்திரம் காணப்படக்கூடிய உயிரினங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அழிவடையும் அச்சுறுத்தல் உக்கிரமாகக் காணப்படும் – Critically Endangered (CR)

அண்மித்த எதிர்காலத்தில் பூமியிலிருந்து முற்றாக அழிவடையும் அச்சுறுத்தல் காணப்படும் உயிரினங்களின் தொகுதி

அழிவடையக்கூடுமான கூடிய அச்சுறுத்தல் காணப்படும் – Endangered (EN)

இயற்கைச் சூழலில் அழிவடைவதற்கான காரணிகள் அதிகமாக காணப்படுவதால் கூடிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள உயிரினங்கள் இவ்வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய – Vulnerable Species (VU)

உச்ச அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத போதிலும் அவற்றின் நிலைத்திருத்தலுக்கு அச்சுறுத்தலாக காணப்படும் காரணிகள் குறைவடையாது போனால் அல்லது அவற்றின் பெருக்கம் அதிகரிக்காதிருந்தால் எதிர்காலத்தில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் அதிகூடியளவில் காணப்படும் உயிரினங்கள் இவ்வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய – Near Threatened (NT)

பாதுகாப்பு வழிமுறைகளை எடுக்காமல் விடுமிடத்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக்கூடிய உயிரினங்கள் இவ்வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறைந்த அச்சுறுத்தல்கள் காணப்படும் Least Concern (LC),

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வகுதிகளுக்குள் உள்ளடக்கப்படாத கற்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள உயிரினங்கள் ஆகும். இவைகளின் பெருக்கம் காரணமாக இவை எதிர்காலத்தல் அழிந்துபோகும் அச்சுறுத்தலற்ற உயிரினங்கள் ஆகும்.

தரவுகள் தேவைப்படக்கூடிய – Data Deficient (DD)

போதியளவு தகவல்கள் காணப்படாத மற்றும் அடையாளம் காணும் பிரச்சினைகள் காணப்படும், பரவல் தொடர்பிலான தகவல்கள் காணப்படாத மற்றும் இதுவரை கற்கைகள் மேற்கொள்ளப்படாத வகுதிகள் இதில் உள்ளடங்கும்.

இலங்கையில் சிவப்பு தரவு அறிக்கை இறுதியாக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கைக்கே உரித்தான, தேசிய அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான 534 வகைகளில் 228 வகைகள் அதிகூடிய அளவில் அழிந்து போகக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. அவற்றுடன் இலங்கைக்குரிய ஊர்வனவற்றுல் 86% உம், பறவைகளில் 67% உம், ஈரூடகவாழிகள் 78% உம் சிவப்பு தரவுப் பட்டியலிள் இடம்பிடிக்கக்கூடும். மேலும் ஈரூடகவாழிகள் 19 தற்போதும் முற்றாக அழிவடைந்துவிட்டன.