உலகில் அதிகரித்துவரும் மக்கள் பெருக்கமும், நகரமயமாதலும், தொழிற்புரட்சி விளைவித்த சூழல் கேடுகளும் பல்லுயிர்களின் வளத்துக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. மனித இனம் பிழைத்திருக்க நாம் தந்திருக்கும் விலை இதுவரை 5 லட்சம் உயிரினங்கள் என்கிறது, சூழலியல் சேவைகளின் அறிவியல் கொள்கைகளுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு. இந்தப் போக்கு நீடிக்குமானால், மனித நலத்துக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே, ‘பல்லுயிர்ப் பாதுகாப்பு’ குறித்த விழிப்புணர்வு விவாதங்களும் கருத்தரங்குகளும் உலக அளவில் நடைபெற்றுவருகின்றன. அவற்றின் நீட்சியாக, பல்லுயிர்களைக் காக்கவும் கண்காணிக்கவும் நவீன அறிவியல் உத்திகளைப் பயன்படுத்த உயிரியலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வழியில் அவர்களுக்கு உதவ வந்திருக்கிறது, ‘சூழல் மரபணுச் சங்கிலி’ (environmental DNA – eDNA). இதற்குள் செல்வதற்கு முன்னால் சில அடிப்படைகள்.

உயிரின் ரகசியம்

உலக உயிரினங்களை மனித இனமா, விலங்கா, புல்லா, பூண்டா என இனம்காண உடல் செல்களில் உள்ள மரபணுக்கள் (ஜீன்கள்) உதவுகின்றன. ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதனதன் மரபணுக்கள் தனித்தன்மையோடு இருக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அவை இருக்கும்; ‘மரபணுச் சங்கிலி’யில் (டிஎன்ஏ) புதைந்திருக்கும். ‘மரபிழை’யில் (குரோமோசோம்) குடியிருக்கும். இந்த மூன்றையும் தொகுத்தால் கிடைப்பது, ‘மரபணுத் தொகுதி’ (ஜீனோம்). மரபணுத் தொகுதி ஒரு ‘புத்தகம்’ என்றால், ‘குரோமோசோம்’கள் அதன் அத்தியாயங்கள்; ‘டிஎன்ஏ’க்கள் பாராக்கள்; ‘ஜீன்கள்’ எழுத்துகள். ஓர் உயிரினத்தின் ரகசியத்தைச் சொல்லும் ‘மரபணுத் தொகுதி’ புத்தகத்தைக் கண்டுபிடித்ததுதான் உயிரியல் ஆராய்ச்சிகளில் உச்சம் தொட்ட மைல்கல். அமெரிக்காவின் தலைமையில் 6 நாடுகள் ஒன்றிணைந்து, ‘மனித மரபணுத் தொகுப்புத் திட்டம்’ (The Human Genome Project) எனும் பெயரில் 1990-ல் தொடங்கப்பட்டு 2003-ல் முடிவடைந்தது. இதன் நீட்சியாக மரபணுப் பகுப்பாய்வுப் பணிகள் (Genome sequencing) தொடங்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மனித இனத்தின் கலப்பு, பரவல் குறித்து மட்டுமல்லாமல், பரந்துபட்ட பல்லுயிர்களின் தொடக்கம், உயிரின விரிவாக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றையும் சித்திரப்படுத்த முடிந்தது.

சூழல் மரபணுவின் மகிமை

இதுவரை, பல்லுயிர்களை இனம்காண, அவற்றின் மாதிரிகளைச் சேகரிக்க அனுபவமிக்க சூழலியலர்களும், வகைப்பாட்டியலர்களும் (Taxonomists) தேவைப்பட்டனர். இவர்களால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே மாதிரிகளைச் சேகரிக்க முடிந்தது. அதிலும் சொற்பமாகவே சேகரிக்க முடிந்தது. இதற்குப் பல வாரங்கள், மாதங்கள்கூட ஆகலாம். செலவும் அதிகம். உதாரணமாக, சுரங்கத் தொழில்களால் மீன்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கணிக்க, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கு வர்ஜீனியா நீர்நிலைகளில் நான்கில் மட்டுமே மாதிரிகளை எடுத்து ஆய்வுசெய்ததால், இந்த ஆய்வு முடிவுகளை உலகம் முழுமைக்குமான முடிவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் உயிரினத்திலிருந்து மரபணுக்களை நேரடியாகப் பெறும் பழைய முறைகளில் இம்மாதிரியான குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தற்போது இந்தக் குறைகளைக் களையும் கருவியாக வந்திருக்கிறது, சூழல் மரபணுத் தொழில்நுட்பம்.

நீர், நிலம், காற்று, கடல், உலர்பனி, பனிக்கட்டி போன்றவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் தத்தம் செதில்கள், மூப்படைந்த தோல்கள், மலம், பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட உடல் கழிவுகளை வெளியிடுகின்றன. இந்தக் கழிவுகளில் அந்தந்த உயிரினத்தின் மரபணுச் சரடுகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள மரபணுக்கள் ‘சூழல் மரபணுக்கள்’ எனப்படுகின்றன.

இந்தக் கழிவு மாதிரிகளைச் சேகரிக்க, வல்லுநர்கள் உதவி தேவையில்லை என்பது முக்கியமான அம்சம். உதவியாளர்களே எளிதாகச் சேகரித்துவிடுவார்கள். ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் மாதிரிகளைச் சேகரிக்க முடியும். செலவும் சொற்பம். இந்த மாதிரிகளை ஆய்வகங்களில் பக்குவப்படுத்தி, செல்களைப் பிரித்தெடுத்து, மரபணுப் பகுப்பாய்வு செய்து, ஏற்கெனவே தயாரித்துள்ள மரபணுத் தொகுதியோடு ஒப்பீடு செய்து உயிரினங்களை இனம்காணலாம். ஓர் ஒப்பீட்டுக்குச் சொன்னால், நஞ்சருந்தி இறந்த ஒருவரின் உடலிலிருந்து நச்சுப் பொருளை எடுத்துப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் வாந்தியைப் பரிசோதித்து, இறப்புக்குக் காரணம் கண்டுபிடிக்கும் வழிமுறைபோலவே சூழல் மரபணுத் தொழில்நுட்பமும்.

1968-ல் அழிந்துபோனதாகக் கருதப்பட்ட பிரேசில் நாட்டின் தவளை இனம் மெகேலோஸியா பொகேன்ஸிஸ் (Megaelosia bocainensis) இன்னும் இருப்பதாகக் கடந்த ஆண்டில் இந்தத் தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டது. ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு ஆய்வாளர்கள் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் ஆமைகளுக்கு ஏற்படும் ஃபைப்ரோபேப்பிலோமாடோஸிஸ் (Fibropapillomatosis) வகை புற்றுநோய்க் கட்டிகளுக்கு வைரஸ்தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அண்மையில், கரோனா தொற்று காற்றில் பரவுகிறது என்பதை உறுதிசெய்ய சற்றே மாற்றியமைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் உதவியுள்ளது.

என்னென்ன நன்மைகள்?

சமீப காலமாக நன்னீர் உயிரிகள்தான் அதிவேகமாக அழிவைச் சந்திக்கின்றன. புள்ளிவிவரப்படி சொன்னால், இவற்றில் 4-ல் ஒன்று வீதம் அழிந்துவருகின்றன. அந்தச் சிறப்பினங்களைச் சூழல் மரபணுத் தொழில்நுட்பம் மூலம் சுலபமாகக் கண்டறிந்து, அவற்றின் அழிவுக்குக் காரணம் அறிந்து, பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைக்க முடியும். சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள எல்லாச் சிறப்பினங்களின் தொடக்கப் புள்ளிகளையும் புரிந்துகொண்டு, வரிசைப்படுத்தி ஆவணப்படுத்துவது எளிதாகிவிடும். புதிதாகத் தோன்றும் சிறப்பினங்களையும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களையும் கண்டுபிடித்துப் பாதுகாக்க முடியும். உயிரோடு உள்ள உயிரினங்களை மட்டுமில்லாமல் அழிந்துபோனவற்றையும் கண்டுபிடிப்பது இனிமேல் அதிகரிக்கும். மிகுந்த இடர்ப்பாடுள்ள இடங்களில் வாழும் உயிரினங்களை இதன் வழியில் அறிந்துகொள்வது சுலபம். விலங்கின ஆய்வுக்கூடங்கள் வழியாகத் தொற்றுக் கிருமிகள் தப்பி, மனிதருக்குப் பரவும் நிலைமை இதன் பலனால் ஒழியும். மனித ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் தரும் உயிரினங்களை இனம்கண்டு எச்சரிக்க முடியும். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அரிய உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இனி பெருகும். ‘உணவுச்சங்கிலி’யில் உள்ள சிக்கலான அம்சங்களைப் புரிந்துகொண்டு சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்று, ‘சூழல் மரபணு’ எனும் பாதுகாவலனோடு நாம் ஒவ்வொருவரும் இயற்கைப் பாதுகாப்புக்கு முன்னத்தி ஏர் பிடிக்க வேண்டும். அப்போதுதான் பல்லுயிர்களுக்கு 100% பாதுகாப்பு உறுதிப்படும். (நன்றி: இந்து தமிழ்)