சட்டவிரோதமாக செயல்படும் தங்கச் சுரங்கங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான அகழ்வு படகுகள் அமேசானின் மதேரா நதியில் தங்க வேட்டைக்காக குவிந்துள்ளன.

பிரேசிலின் அமேசான் காடுகளில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தங்க வேட்டை செய்யபலர் முயன்றுள்ளனர். கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பது குறித்து உறுதியளித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான படகுகள் தங்கத்துக்காக அமேசான் நதிகளில் குவிந்துள்ளன. பம்புகள் பொருத்தப்பட்ட மிதவைப் படகுகள் நீண்ட மதேராநதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாகவும், இவை தங்கத்துக்காக ஆற்றுப்படுகைகளைச் சுரண்டி வெற்றிடமாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

300-க்கும் மேலான படகுகள் இரண்டு வாரங்களாக நதியில் மிதந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரேசிலின் கிரீன்பீஸ் செயற்பாட்டாளர் டேனிக்லி அகுயர் கூறியுள்ளார்

மேலும் வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சனோரா 2019-ல்பொறுப்பேற்றதிலிருந்து சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பு மிகவும் வலுவிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக அமேசான் காடுகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களையும் தங்கச் சுரங்க நடவடிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மதேரா நதி சுமார் 3,300 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த நதியில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு படகுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், சட்டவிரோத தங்க வேட்டையைத் தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. (நன்றி: இந்து தமிழ்)