கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, உடல் நலம் என்று பலவிதமான குழப்பங்களுக்கும் தீர்வுவைத்திருக்கிறார் சசிகலா. அந்தத் தீர்வு வழிகாட்டுதலாக மட்டும் நின்றுவிடுவதில்லை. இலக்கை அடையும்வரை உடனிருந்து உதவுகிறார். குறைந்தது பத்து லட்சம் பெண்களையாவது தற்சார்புடன் வாழும் வகையில் மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார்.

2014-ல் ஐ.நா. சார்பில் நடத்தப்பட்ட காலநிலை உச்சி மாநாடு சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. புவி மாசுபடுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தபோதிலும் நம் கையில் என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்தார். மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன என்பதைத் தேடி அறிந்தவர் அதிர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மொரீஷியஸில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி கருத்தரங்கும் சசிகலாவைப் பாதித்தது. “அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர் சொன்ன தகவல்கள் அதிரவைத்தன. அகழ்வாய்வின்போது 100 அடிக்குக் கீழே, யாரும் பயன்படுத்தாத மண்ணை வைத்துத்தான் பண்டைய வரலாற்றைக் கண்டுபிடிப்பார்களாம். ஆயிரம் வருடங்கள் கழித்து பூமியைத் தோண்டினால் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளும், எலெக்ட்ரானிக் கழிவுகளும்தான் இருக்குமாம். அதிலும் 40 சதவீதக் கழிவுகள் நாப்கின்களாக இருக்கும் என்றார். இதுதான் என்னைச் சிந்திக்கவைத்தது” என்கிறார் சசிகலா.

சூழலுக்குக் கேடு

“ஒரு பெண் தன் வாழ்நாளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். ஒரு நாப்கின் மக்குவதற்கு 300 முதல் 800 ஆண்டுகள் வரை ஆகும். நாப்கின்களில் இருக்கும் ரசாயனப் பொருட்களால் பெண்களின் உடல் நலமும் பாதிப்படையக்கூடும். இப்படி உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிற நாப்கினுக்குப் பதில் மாதவிடாய் கப்களைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது” என்று சொல்லும் சசிகலா, அதற்கான விழிப்புணர்வைக் கிராமங்களில் இருந்தே தொடங்கினார்.

மாதவிடாய் நாட்களின் சுகாதாரம் குறித்து நகர்ப்புற மக்களுக்கே போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த நிலையில் மேல் தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியவை என்று நம்பப்படும் மாதவிடாய் குப்பிகள் குறித்து மக்களிடம் பேசுவது சவாலாக இருந்தது என்கிறார் சசிகலா. “நம் சமூக அமைப்பின் பெரிய பின்னடைவு பெண் உடல் குறித்த புனிதம்தான். மாதவிடாய் கப்களைப் பயன்படுத்தினால் கன்னித்தன்மை போய்விடும் என்று பலரும் நம்புகிறார்கள். அந்த பயம் தேவையற்றது. ஒரு பெண் தன் வாழ்நாளில் நாப்கின் வாங்க கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறார்.

ஆனால், ஒரு மாதவிடாய் கப் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படும். செலவும் குறைவு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை. பத்து சதவீதப் பெண்கள் மாதவிடாய் கப்களைப் பயன்படுத்தினாலே சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் சசிகலா. 2016 முதல் செயல்பட்டுவரும் இவர், பெண்களைத் தொழில்முனைவோராக்கும் நோக்கத்துடன் ‘ஃபைவ் மில்லியன் வுமன்’ என்கிற அமைப்பை 2019-ல் ஏற்படுத்தினார்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு

பத்து லட்சம் பெண்களுக்கு எப்படி வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர முடியும் என்றால் புன்னகைக்கிறார். “ஒவ்வொருவருக்கும் அவரது திறமைக்கு ஏற்ற வேலையை உருவாக்கித்தர வேண்டும். ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு வங்கிக் கடனுடதவி பெற்று அவற்றை வாங்கித் தந்தால் அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். சமையல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதையே தொழிலாகச் செய்யச் சொல்வோம்” என்கிறார். 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்ததைத் தொடர்ந்து அதையும் கையில் எடுத்திருக்கிறார் சசிகலா. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வேலைகளையும் செய்துவருகிறார்.

“நிறமும் சுவையும்தான் சிறுதானிய உணவில் இருக்கும் பெரிய சவால். அதை மாற்றத்தான் போராட வேண்டியிருக்கிறது. மற்ற உணவு வகைகளைப் போல் சிறுதானியங்களிலும் சமைக்க முடியும் என்பதற்காக 300 வகையான சிறுதானிய உணவை அறிமுகப்படுத்தியுள்ளோம். குழந்தைகளைக் கவரும் வகையில் பேக்கரி வகைகளைக்கூடச் சிறுதானிய வகைகளில் செய்கிறோம். வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ப வெவ்வேறு வகையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறோம். உடனடி உணவும் உண்டு. தமிழகம் முழுவதும் சிறுதானிய உணவுக் குடில்களை அமைக்கும் திட்டமும் உண்டு” என்று சொல்லும் சசிகலா, சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்தே நேரடியாகக் கொள்முதல் செய்வதால் அவர்களும் பலனடைகிறார்கள் என்கிறார்.

அனைத்துக்கும் மாற்று உண்டு

கைவினைக் கலைகளில் ஆர்வம்கொண்ட இவர், 85 வகையான கைவினைக் கலைகளுக்குப் பயிற்சியளித்து, ஆர்வமுள்ளவர்கள் அதையே தொழிலாகத் தொடங்க வழிகாட்டுகிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களே, தன்னை உத்வேகத்துடன் இயங்க வைத்ததாகச் சொல்கிறார். கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் கபிஸ்தலத்தில் பிறந்த சசிகலா, வீட்டின் ஐந்தாவது பெண் குழந்தை. அப்பா ஆசிரியராக இருந்தபோதும் பள்ளிப் படிப்பு முடித்த மகளை உடனே திருமணம் செய்துவைத்துவிட்டார். தனக்கு மகன் பிறந்தபோது தன் தோழிகள் கல்லூரிப் புத்தகங்களோடு வந்து பார்த்ததை வேதனையோடு குறிப்பிடுகிறார் சசிகலா. கணவர் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட, கைவினைக் கலைகளையாவது கற்றுக்கொள்வோம் என்று தொடங்கிய பயணம்தான் இன்று இங்கே வந்தடைந்திருக்கிறது.

“அதற்கும்கூடப் போராட வேண்டியிருந்தது. சென்னை வந்துதான் கைவினைக் கலைகளுக் கான மூலப் பொருட்களை வாங்கிச் செல்வேன். என்னிடம் பயிற்சி பெற்ற பெண்களுக்கும் சேர்த்தே நானே வாங்கிவந்துவிடுவேன். அப்படிச் சிறு அளவில் தொடங்கி, படிப்படியாகப் பல தொழில்களைக் கற்றுக்கொண்டேன். 2008-ல் கணவர் இறந்துவிட, இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னைக்குக் குடியேறினோம். எட்டு இடங்களில் ஹாஸ்டல் நடத்தினேன். 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டேன். ஒருவழியாக அதிலிருந்து மீண்டு பெண்கள் அமைப்புகளுக்கும், குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் சுயதொழில் தொடங்குவது குறித்துத் திட்டம் போட்டுத் தந்தேன். பலரும் அதைச் சரியாகச் செயல்படுத்தாத நிலையில் நாமே செய்யலாம் என்றுதான் ‘ஃபைவ் மில்லியன் வுமன்’ அமைப்பைத் தொடங்கினேன்” என்கிறார் சசிகலா.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் விற்பனை குறித்தும் சந்தைப்படுத்துவது குறித்தும் கவலைப்படத் தேவையில்லை என்கிறார். இவரது திட்டத்தில் தொழில் முனைவோரும் வாடிக்கையாளரும் இவரது அமைப்பைச் சேர்ந்தவர்களே. தற்போது 300 பெண்கள் இவருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். சுயதொழில் பயிற்சி அளிக்க ‘தோழிகள்’ என்று பொருள்படும் வகையில் ‘டி ஷக்தி’ என்கிற அமைப்பையும் இவர் நடத்திவருகிறார்.

“டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவு வேண்டாம் என்று நாம் சொன்னால் அதற்குத் தகுந்த மாற்று உணவு நம்மிடம் இருக்க வேண்டும். அது எல்லாவற்றுக்கும் பொருந்தும். நாங்களும் தகுதியான ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டுதான் தீங்கு விளைவிக்கின்றவற்றை வேண்டாம் என்கிறோம். எங்களுடையது நீண்ட கால இலக்கு. ஆனால், அதை நிச்சயம் அடைவோம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சசிகலா. (நன்றி: இந்து தமிழ்)