கடந்த ஆண்டு (2020) சர்வதேச காற்றாலை சக்தி கவுன்சிலினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம்,உலகின் காற்றாலை மூலமான சக்தி உருவாக்கத்திறன் 53 சதவீதத்தினால் உயர்ந்துள்ளது. மொத்தமாக 93 ஜிகா வாட்ஸ் (GW) திறன் காற்றாலை சக்தி நிலையங்கள் கடந்த ஆண்டில் மட்டும் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வளர்ச்சி 2050 க்குள் உலகம் ஒரு ‘நிகர பூஜ்ஜிய’ உமிழ்வு நிலையை அடைய போதுமானதாக இல்லை என்று அறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய காற்றாலை அறிக்கை-2021 இன் படி, உலகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 180 ஜிகாவாட் புதிய காற்றாலை ஆற்றல் திறனை நிறுவ வேண்டும். இதற்கு அடுத்த தசாப்தத்தில் மூன்று மடங்கு வேகமாக வளர்ச்சி தேவைப்படும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் சாதனை வளர்ச்சியானது, உலகின் இரண்டு பெரிய காற்றாலை சந்தைகளான  சீனாவிலும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட  புதிய காற்றாலைகளின் எழுச்சியால் முன்னெடுக்கப்பட்டது.

இரு நாடுகளும் புதிதாக நிறுவப்பட்ட காற்றாலைகளின்  75 சதவீதத்தை உள்ளடக்கியதுடன், உலகின் மொத்த காற்றாலை ஆற்றல் திறனில் பாதிக்கும் மேலானவையை கொண்டுள்ளன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை உற்பத்தி திறன் 86.9 ஜிகா வாட்ஸாக இருப்பதுடன் வெளிநாடுகளில் நிறுவப்பட்டிருப்பவற்றில் அவற்றின் உற்பத்தி 6.1 ஜிகா வாட்ஸாக காணப்படுகிறது.

தற்போது, உலகின் மொத்த காற்றாலை ஆற்றல் 743 ஜிகாவாட்ஸ்  ஆகும். இது ஆண்டுதோறும் 1.1 பில்லியன் தொன்களுக்கு மேல் CO2 உமிழ்வைத் தவிர்க்க உதவியது, மற்றும் இது ஒரு வருடத்தில் தென் அமெரிக்கா வெளியேற்றும் கார்பனின் அளவிற்கு சமம் என்று அறிக்கை கூறுகிறது.

ஆப்பிரிக்காவிலும், ‘மத்திய கிழக்கிலும்’ புதிய உள்நாட்டு காற்றாலைகளின் நிறுவல்கள் 2019 ஆம் ஆண்டில் இருந்ததைப்போலவே 8.2 ஜிகாவாட்ஸாகவே இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் 30 அன்று உலக வங்கி குழுவின் உறுப்பினரான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (ஐஎஃப்சி/IFC ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டத்தின் எரிசக்தி தேவையை 250 மடங்கு அதிகப்படுத்தக்கூடிய 59,000 ஜிகாவாட்ஸ்  தொழில்நுட்ப காற்றாலை வளம்  ஆபிரிக்காவில் உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தொற்றுநோய் காரணமாக, காற்றாலை மின் திட்டங்கள் உலகம் முழுவதும் தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று  GWEC அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2019 உடன் ஒப்பிடும்போது புதிய காற்றாலைகளின்  நிறுவல்கள் சற்று குறைந்துவிட்டன. இதற்குப் பிரதான காரணம்:  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான  உள்நாட்டு காற்றாலைகளை கொண்டுள்ள நாடுகளான ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் ஜெர்மனி போன்றவற்றில் காணப்பட்ட மந்தகதியான செயல்பாடுகளேயாகும்.

மேலும் இவ்வறிக்கையின்படி, 32.2 ஜிகாவாட்ஸ் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு அனைத்தும் உள்நாட்டு காற்றாலைகளிலிருந்து வந்தது: சீனா (24.6 ஜிகாவாட்ஸ் ), அமெரிக்கா (7.8 ஜிகாவாட்ஸ்) , லத்தீன் அமெரிக்கா (1 ஜிகாவாட்ஸ் ), ஐரோப்பா (72 மெகாவாட்ஸ்)

இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டு காற்றாலைகளைப் பொறுத்தவரை, 2020 ஒரு சவாலான ஆண்டாகும்.

தற்போது எதிர்நோக்கும் சவால்களான நில கையகப்படுத்தல், மின்சார விநியோக இணைப்பு மற்றும் அனுமதி பெறல் போன்ற சவால்களைத் தவிர,கொள்ளைநோயின் தாக்கமானது திட்ட கட்டுமானத்தில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.

மதுமிதா போலினால் (Madhumita Paul) மார்ச்  31ம் திகதி Down To Earth  இணையத்தளத்திற்கு “ Wind power capacity needs to grow at thrice the current speed to reach net zero: Report” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்