இப்போது வரை, இது எங்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுடன் தொடர்புபட்டதாக இருந்தது ஆனால் அவை நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் ஒன்றாக அமையும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.
இடைவிடாத அலாரமணிச் சத்தத்திற்கு மத்தியில் காலை 6 மணிக்கு நான் எழுந்து அதனை அணைத்தேன். என் படுக்கையில் இருந்து எழுந்து, தரையில் கால் மிதித்தபோது அதன் ஈரப்பதம் என்னை சில்லிட வைத்தது. நனைந்த தளம் என் தூக்கத்தை விரட்டியது.
நான் கவனமாக வீட்டின் நடு மண்டபத்திற்கு சென்றேன், சுவரில் உள்ள மின்சாரப் புள்ளியிலிருந்து தண்ணீர் சொட்டுகிறதைக் கவனித்தேன். சுவரின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளத்தினால் ஈரமடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்த நான் உடனே, மேசையை நகர்த்தி, தரையைத் துடைத்து உலர்த்தத் தொடங்கினேன்.
நிலைமையை அறிந்து பக்கத்து வீட்டார் குடியிருக்கும் முதல் மாடிக்கு நான் விரைந்தேன், அவர்களும் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக இருந்தனர். அவர்களின் குடியிருப்பின் அனைத்து மூலைகளிலும் தண்ணீர் நுழைந்திருப்பதுபோல தோன்றியது, அதை உலர்த்துவதில் அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இவை அனைத்தும் இந்த ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை பெய்த கனமழை காரணமாக இருந்தது. இந்த ஆக்ரோஷமான கனமழை முழு நகரத்தையும் நாள் முழுவதும் வெள்ளக்காடாக மாற்றியிருந்தது.
அது பருவமழையோ அல்லது வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் உருவாகவில்லை. பிறகு என்ன காரணமாக இருக்க முடியும்? பருவநிலை மாற்றம்?? வழக்கமாக கோடைகாலத்தின் துவக்கமாக இருக்கும் பிப்ரவரி மாதத்தில் நடந்த இந்த பெருமழைக்கு இது சாத்தியமாக இருந்திருக்க முடியும்.
அதே காலகட்டத்தில், உத்தரகாண்டில் உள்ள ரிஷி கங்கை ஆற்றில் பனிப்பாறை உருகியதால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இது ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு பெரிய நீர்மின்சக்தி திட்டங்களைக் அடித்துச் சென்றது.
இது புவி வெப்பமடைதலால் ஏற்பட்டது என்று நிபுணர்களால் கூறப்பட்டது, அவர்கள் சீரற்ற வானிலை வடிவங்கள் பனியின் வெப்பத்தினால் உருகும் நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று கூறினர்.
இந்த நிகழ்வு- காலநிலை மாற்றம் பற்றி நாம் அண்மைக்காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். இந்த சொல் மிகவும் பிரபலமானது. இந்த மாற்றத்திற்கு என்ன வழிவகுக்கிறது என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது , அதாவது, இது இயற்கையா, அல்லது மானுடவியலலின் அடுத்த பரிணாமமா? பிந்தையது தரவரிசையில் முதலிடம் பிடித்தது. நாம் பதிலளிக்க முயலும் கேள்வி, அது எப்போது நிற்கும் … அல்லது அதை நிறுத்த நாம் என்ன செய்யலாம்?
உலகளாவிய பூகோள நிலைத்தன்மைப் பிரச்சினைகளில் பணியாற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானியான பேராசிரியர் ஜோஹன் ராக்ஸ்ட்ரோம் ( Johan Rockstrom), இது போன்ற பரந்த கேள்விகளை ஆராய்கிறார்: நமது கிரகங்களுக்கு எல்லைகள் உள்ளதா? அதை வரையறுக்க முடியுமா? பூமி சீர்குலைக்கிறதா? நிலைப்படுத்த என்ன ஆகும்? (அவரது TED பேச்சை இங்கே காண முடியும்)
அதை ஆராய்வதற்கு முன், பூமி எப்போது நிலைபெறுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பேராசிரியர், சமீபத்தில் வெளியிடப்பட்ட Netflix ஆவணப்படமான – எல்லைகளை உடைத்தல் (Breaking Boundaries) – இவை அனைத்தும் ஹோலோசீன் (Holocene ) சகாப்தத்தில் பூமியின் வெப்பநிலை நிலைபெற்றபோது வாழ்க்கை வடிவங்களின் இருப்புக்கு வழி வகுத்தது என்று விளக்குகிறது.
மற்ற எல்லா வகையான உயிரினங்களுடன், மனிதர்களும் வந்தனர், அவர்கள் வாழ்ந்து பூமியின் ஸ்திரத்தன்மையை அனுபவித்தது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த பேராசையை திருப்திப்படுத்தவும் அதன் வளங்களையும் பயன்படுத்திக் கொண்டனர். இது நமது கிரகத்தின் எல்லைகளைத் தாண்டி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
இப்போது, நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம்: கிரக எல்லை என்றால் என்னவென்று?
கிரக எல்லை என்பது 2009 ஆம் ஆண்டில் 18 ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு புதுமையான கருத்து. அந்த ஆராய்ச்சிக்கட்டுரையின்படி, ஒன்பது கிரக எல்லைகள் உள்ளன, அவை பின்வருமாறு:
- பருவநிலை மாற்றம்
- உயிர்க்கோள ஒருமைப்பாட்டில் மாற்றம் (பல்லுயிர் இழப்பு மற்றும் இனங்கள் அழிவு)
- அடுக்கு மண்டல ஓசோன் குறைவு
- பெருங்கடல் அமிலமயமாக்கல்
- உயிர் வேதியியல் ஓட்டங்கள் (பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் சுழற்சிகள்)
- நில அமைப்பு மாற்றம் (உதாரணமாக காடழிப்பு)
- நன்னீர் பயன்பாடு
- வளிமண்டல ஏரோசல் ஏற்றுதல் (காலநிலை மற்றும் உயிரினங்களை பாதிக்கும் வளிமண்டலத்தில் உள்ள நுண்ணிய துகள்கள்)
- புதிய கனிமப்பொருட்களின் அறிமுகம் ( கரிம மாசுபடுத்திகள், கதிரியக்க பொருட்கள், நானோ பொருட்கள் மற்றும் நுண்ணிய பிளாஸ்டிக்)
நமது கிரக பூமியின் நிலைத்தன்மை, பேராசிரியர் ஆவணப்படத்தில் கூறுவது போல், முக்கியமாக இந்த ஒன்பது செயல்முறைகள் காரணமாகும். இந்த கூறுகள் காரணமாகத்தான் நமது கிரகம் அப்படியே உள்ளது. இதில் ஏற்படும் எந்த மாற்றமும் நமது கிரகத்தை பெரிதும் பாதிக்கும்.
“ஒன்பது கிரக எல்லைகளில் நான்கு: காலநிலை மாற்றம், உயிர்க்கோள ஒருமைப்பாடு இழப்பு, நில அமைப்பு மாற்றம், மாற்றப்பட்ட உயிர் வேதியியல் சுழற்சிகள் (பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன்), சாதகமற்ற மனித நடவடிக்கைகளால் முனைப்புள்ளியை கடந்துவிட்டது” என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகின்றனர், ” இவற்றில் இரண்டு-காலநிலை மாற்றம் மற்றும் உயிர்க்கோள ஒருமைப்பாடு, முக்கிய எல்லைகளாகும். இந்த இரண்டின் எந்த மாற்றமும் பூமி அமைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.
“கிரக எல்லைகள் மனித சமுதாயங்கள் எவ்வாறு உருவாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை ஆனால் மனிதகுலத்திற்கான பாதுகாப்பான இயக்க இடத்தை வரையறுப்பதன் மூலம் முடிவெடுப்பவர்களுக்கு உதவ முடியும்” என்று ஆராய்ச்சிக்கட்டுரையின் இணை ஆசிரியரான கேத்ரின் ரிச்சர்ட்சன் கூறுகின்றார்.
இப்போது வரை, இது எங்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பானவையாக மட்டுமே இருந்து வந்துள்ளன . ஆனால் அவை நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் ஒன்றாக அமையும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். எதிர்காலத்தில் நாம் என்ன செய்தோம், என்ன செய்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கும் அனைத்து தனித்தனி செயல்முறைகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இவை அனைத்தும் இந்த ஆவணப்படமான “எல்லைகளை உடைத்தல் -Breaking Boundaries” இல் எளிமையான, ஆழமான தொனியில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
இது இப்போதாவது உலகத் தலைவர்களைச் செயல்படுத்தும் என்று நான் நம்புகிறேன்
Down To Earth இணையத்தளத்தில் கெளதமா ராஜவேலு – Gowthama Rajavelu இனால் ஜூலை 15ம் திகதி வெளியான “Climate crisis: Is Earth destabilising?” என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.