பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் பல ஆண்டுகளாக போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அவற்றுக்கே இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. பெருந்தோட்டங்கள் காடுகளாக மாறிவருவதால் காட்டு விலங்குகள் பெருந்தோட்டங்களுக்குள் புகுந்து கொண்டுள்ளன. கரும்புலி, சிறுத்தை என்பன உயிருடனும் இறந்தும் பிடிபட்ட சம்பவங்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றை விடவும் பாம்புக்கடி, அட்டைக்கடி என்பவற்றுடன் குளவித்தாக்குதல்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சிறுத்தை தாக்குதலை விடவும் அதிகமாக குளவித்தாக்குதல் சம்பவங்கள் பெருந்தோட்டங்களில் பதிவாகியுள்ளன. குளவிகள் கூட்டமாக தாக்குதலை நடத்துவதனால் ஒரே சந்தர்ப்பத்தில் பலர் பாதிக்கப்படும் நிலை அதிகம் காணப்படுகின்றது. இவ்வாறு சவால்கள் நிறைந்த தொழிலையே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
பெருந்தோட்டங்களில் காணப்படும் கரும்புலி, சிறுத்தைகள் தொடர்பாக கவனம் செலுத்துகின்ற வனஜீவராசிகள் திணைக்களம் குளவி கூடுகள் தொடர்பிலோ, பாதிப்புகள் தொடர்பிலோ கவனம் செலுத்துவதில்லை. தோட்ட நிர்வாகமும் அவற்றை கண்டு கொள்வதில்லை. பெருந்தோட்ட மக்களுக்கான அமைச்சுக்களோ அல்லது நிறுவனங்களோ இவற்றுக்கு பொறுப்பு கூறுவதும் இல்லை. அவ்வாறெனின் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தாக்கும் குளவிகளை தடுப்பதற்கு என்னதான் வழி இருக்கின்றது? அண்மையில் பெருந்தோட்டங்களில் குளவித்தாக்குதல் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, உடனடியாக அவற்றுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 23 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டதே தவிர வேறெந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பெருந்தோட்டங்களில் தொடர்ச்சியாக நிகழும் குளவிக்கொட்டு சம்பவங்கள் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேளையே பிரதமர் அலுவலகத்தினால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு குளவிக் கொட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி பெருந்தோட்ட அமைச்சிடம் (MPI/Admin/15/Right to Information) இவ்விடயம் தொடர்பில் வினவியபோது அவ்வாறு எவ்விதமான தகவல்களும் இல்லையெனவும் பெருந்தோட்டங்களில் குளவிக்கொட்டுகள் மூலமான பாதிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் அமைச்சிடம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேலைநேரங்களின் போது தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள் அல்லது மரணங்கள் சம்பவித்தால் நட்டஈடுகளை பெற்றுக்கொள்வதற்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தின் உதவியினை நாட முடியும். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த வரையறைக்குள் உள்வாங்கப்படாததால் அவர்களால் நட்டஈட்டை பெற்றுக்கொள்ள அரச உதவியினை நாட முடியாது. அது தோட்ட நிர்வாகங்களுடன் தீர்க்க வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளது. எனவே மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் தொழில் புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை யார் தான் பாதுகாப்பது?
குளவித்தாக்குதல்களின் மூலம் இதுவரையும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரணமடைந்தும் இருக்கின்றார்கள். இருந்தும் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடங்களிலுள்ள குளவிக்கூடுகளை அகற்றுவதற்கு எவரும் தயாராக இல்லை. குளவிக்கூடுகள் களைந்தால் அவற்றிடமிருந்து ஓடித்தப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தொழிலாளர்கள் பணிபுரியும் மலைமேடுகளில் இவை எவ்வாறு சாத்தியமாகும். தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் அதற்கு அண்மித்த பகுதிகளிலும் காணப்படும் குளவிக்கூடுகளை அங்கு வசிப்பவர்களே பாதுகாப்பாக அகற்றிக்கொள்ளும் நிலை இருக்கின்றது. அவர்களுக்கு நுட்பம் தெரியும். அதேபோல வேலைத்தளங்களில் காணப்படும் குளவிக்கூடுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு இவர்களை பணிக்கமர்த்தலாம். சில பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குளவித்தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை முழுநேரமும் தொழிலாளர்கள் அணிந்துகொண்டு தொழில் செய்யமுடியுமா?. ஏனெனில் குளவிக்கூடுகள் எப்போது களையுமென்பது தெரியாத நிலையில் எந்நாளும் பாதுகாப்பு உடையை அணியமுடியுமா? இவற்றை அணிந்துகொண்டு தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிக்கவோ, கொண்டு செல்லவோ முடியுமா? என ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது.
2017 ஆம் ஆண்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையினை திறப்பதற்காக வருகைத்தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடியின் உரை நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது பாதுகாப்பு கருதி நோர்வூட் விளையாட்டு கட்டிடத்தொகுதியினை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குளவிக்கூடுகளை அகற்றும் செயற்பாடுகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி சமூக சலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் (MCEEID/RTI/2020/16) அடிப்படையில் தேனீ பாதுகாப்பு நிறுவனத்திடம் (CPC/K/YGP/240) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 30,000 ரூபா செலவில் தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஹட்டன் வலய பொலிஸ் பொறுப்பாளரினால் மாவட்ட செயலாளரிடம் பாதுகாப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு நோர்வூட் தொண்டமான் விளையாட்டு கட்டிடத் தொகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குளவிகளை அகற்றுவதற்கு கோராப்பட்டது. அதன்படி 02.05.2017 ஆம் திகதி தேனீ பாதுகாப்பு நிறுவனத்துடன் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அதற்கான நிதியினை மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் பெருந்தோட்டங்களில் குளவிக்கொட்டினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலான தகவல்கள் இல்லையென்றும், பெருந்தோட்டங்களில் குளவிக்கொட்டினால் பாதிக்கப்படுவோர் தொடர்பிலான தரவுகள் அமைச்சின் கீழ் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
எனவே தொடர்ந்தும் பெருந்தோட்டங்களிலுள்ள குளவிகளை அகற்றுவதற்கு இவ்வாறு தனியார் நிறுவனங்களின் உதவிகளை அமைச்சும் தோட்ட நிர்வாகமும் பெற்றுக்கொடுத்திருக்கலாமே ஏன் அதனை மேற்கொள்ளவில்லை. தோட்ட நிர்வாகங்கள் அதிக இலாபத்தை பெறுவதை நோக்காக கொண்டு மட்டுமே செயற்படுகின்றது. தொழிலாளர்களுடைய நலன்களை கவனத்தில் கொள்வதில்லை. அத்துடன் குளவிக்கொட்டினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பிலான விபரங்களை தோட்ட நிர்வாகங்களோ அல்லது அரச நிறுவனங்களோ திரட்டியிருக்கவில்லை என்பதுடன், மக்களின் பாதிப்புகள் தொடர்பில் எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால் குளவிக்கொட்டினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலான தரவுகளை நம்பகரமான ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கும் முயற்சியில் பின்வரும் தரவுகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதன்படி, 2015 மே – 2020 அக்டோபர் வரையான காலப்பகுதியில் குளவிக்கொட்டினால் 1066 பேர் காயமடைந்துள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 இல் 5 மாத காலப்பகுதியில் 54 பேர் காயமடைந்துள்ளனர். 2016 இல் 118 பேர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளார். 2017 இல் 155 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2018 இல் 82 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2019 இல் 419 பேர் காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். 2020 அக்டோபர் வரையில் 238 பேர் காயமடைந்துள்ளதுடன் ஐவர் உயிரிழந்துள்ளனர். (இவை ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை)
அதன்படி, 2015 மே – 2020 அக்டோபர் வரையான காலப்பகுதியில் குளவிக்கொட்டினால் மொத்தமாக பாதிக்கப்பட்ட 1078 பேரில் (உயிரிழந்தவர்களும் அடங்கும்) 178 பேர் ஆண்களாகவும் 743 பேர் பெண்களாகவும் காணப்படுகின்றனர். 146 பேர் தொடர்பான பாலின விபரம் ஊடகச் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பொகந்தலாவ, நோட்டன், டிக்கோயா, நோர்வூட், லிந்துலை, ஹட்டன், கலஹா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, தலவாக்கலை, பத்தனை, மஸ்கெலியா, புஸ்ஸலாவ, பசறை, பதுளை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். பெரும்பாலும் இவ்வாறான குளவித்தாக்குதல்களுக்கு கொழுந்து பறிப்பவர்களே அதிகம் ஆளாகின்றனர். ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே அதிகம் கொழுந்து பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் குளவித்தாக்குதலுக்கும் அதிகம் இலக்காகும் வாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு இருக்கின்றது.
மேற்படி குளவித்தாக்குதல் தொடர்பான தரவுகளை தோட்ட நிர்வாகமே பதிவு செய்வது இல்லை. தோட்டப்பகுதிகளில் இடம்பெறும் எந்தவொரு அனர்த்தங்களையும் இவ்வாறு அவை பதிவு செய்வதில்லை. எவ்வித பாதிப்புக்களுமே மக்களுக்கு ஏற்படவில்லை என குறிப்பிடுவதே அதன் நோக்கம். தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்கள் மட்டுமல்லாது, அவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் கூட குளவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் சிகிச்சை பெறுகின்ற மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் குளவிக் கூடுகள் அகற்றப்படாமல் காணப்படுவதால் பணியாளர்களும் நோயாளர்களும் அதிகம் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோலவே அரச நிறுவனங்களினாலும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர இவ்வாறான விபத்துகள் பதிவு செய்யப்படவில்லை. குளவிக்கொட்டு தொடர்பிலான புள்ளிவிபரங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவியபோதும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ள அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 23 இல்,
• ஒவ்வொருவரும் வேலைசெய்யும் உரிமை, சுதந்திரமாக வேலை தேர்ந்தெடுக்கும் உரிமை, வேலையின்மையிலிருந்தான பாதுகாப்பு, நியாயமான சாதகமான தன்மையிலிருந்தான வேலை உரிமையை கொண்டுள்ளனர்.
• உறுப்புரை 25 (2) இல், தாய், குழந்தை , விசேடமான பாதுகாப்பு உதவியையும், தொழில் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள உரிமையுடையோர்.
• சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 07 ‘நியாயமான சம்பளத்துடனான ஆகக்குறைந்த சம்பளம், கௌரவமான வாழ்க்கைத் தராதரம், பாதுகாப்பான, சுகாதாரமான வேலைச் சூழல், தொழில் மேம்பாட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மட்டுப்படுத்தப்படும் வேலை நேரம், ஓய்வு கொடுப்பனவுடனான விடுமுறை என்பவற்றை ஒவ்வொருவரும் அனுபவிக்க உறுதிசெய்தல் வேண்டும்’ என கூறுகிறது. உறுப்புரை 8 தொழிற்சங்க உரிமைபற்றியும், உறுப்புரை 9 சமூகப் பாதுகாப்பு, சமூக காப்புறுதி என்பவற்றை அரசு ஏற்று அங்கீகரிப்பதாக கூறுகின்றது. உறுப்புரை 10 – குடும்பப் பாதுகாப்பு தாய், சேய், பாதுகாப்பு பற்றியும், உறுப்புரை 13 கல்வி உரிமை பற்றியும் கூறுகின்றது இவ்வுரிமைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளது.
இவ்வாறு தொழிலாளர்களுடைய பாதுகாப்புக்கும் பாதுகாப்பான தொழில் சூழலுக்கும் உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டங்கள் காணப்பட்டாலும் அவை மக்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதாக தெரியவில்லை. குறிப்பாக கட்டிட அபிவிருத்திகளுடன் மாத்திரம் மல்லுக்கட்டும் அரசியல் தலைமைகள் தொழிலாளர்களுடைய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது கிடையாது. புதிதாக ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு அளிப்பது சிறந்தது எனினும், இருப்பதை அமுல்படுத்துவது அதைவிட சிறந்ததாகும். எனவே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தொழில் சூழலை ஏற்படுத்துவதற்கு சகலரும் முயற்சிக்க வேண்டும்.
Comments are closed for this post.