ந. அற்புதம்
கிளிநொச்சி மாவட்டம கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள சீன நாட்டவர்களின் கடலட்டைப் பண்ணை எவரின் அனுமதியுடன் இயங்குகின்றது என்ற மிகப் பெரும் கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
2016ஆம் ஆண்டு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குய் லன் (Oui lan) என்னும் சீன இலங்கை கூட்டு நிறுவனம் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ஆம் திகதி தனியார் கம்பனியாக பதியப்பட்ட நிறுவனமே இந்த அத்துமீறிய பண்ணையை அமைத்துச் செயல்படுகின்றமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் நீர்கொழும்பில் உள்ளது.
இந்த நிறுவனத்திற்கு பதிவு செய்யப்பட்ட பூநகரியை சேர்ந்த விநாயகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 2021-03-03 அன்று தம்மால் கடல் அட்டைப் பண்ணை அமைக்க இரண்டு ஏக்கருக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு எழுதிய கடிதம் தற்போது இந்த நிறுவனத்தின் வசம் உள்ளது. அதில் தலைவர் செயலாளர் ஒப்பமிட்டுள்ளனர்.
இதேநேரம் பூநகரியில் வசிக்கும் எமக்கே பண்ணைகளிற்கான இடங்கள் கோரும் சமயம் பல விதிமுறைகள் தெரிவிக்கப்படுவதனால் அவற்றினை பெறுவதற்காக இரு மாதங்களாக முயற்சித்தும் அவற்றை எம்மால் பெற முடியாமல் இருப்பதோடு வெளியில் பயணிப்பதற்கும் பயணத்தடை காரணமாக இருந்தபோதும் இதே தடை காலத்தில் சீனாக்காரன் மட்டும் பண்ணையே அமைத்து விட்டான் என்கின்றனர் உள்ளூர் மீனவர்கள்.
ஸ்ரனீஸ்லஸ் செலஸ் ரீன் என்னும் சட்டத்தரணியின் கடிதத் தலைப்பில் 2021ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்த நிறுவனத்திற்கும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கும் இடையே ஓர் வர்த்தக உடன்படிக்கை செய்வதற்காக எழுதப்பட்ட வரைபு வழங்கியுள்ளபோதிலும் அதில் எந்த தரப்பும் இதுவரை ஒப்பமிடவில்லை.
இதேநேரம் கடல் அட்டைப் பண்ணை அமைக்க கடற்றொழிலாளர் சங்கம் வழங்கிய கடிதத்தில் அப்பகுதியில் இதற்கு உகந்த நிலம் உண்டு என கிராமசேவகரும் பிரதேச செயலாளரும் ஒப்பமிடப்பட்டுள்ளது.
உண்மையில் கடல் அட்டைப் பண்ணை ஒன்றை அமைப்பதானால் உள்ளூர் அமைப்பு ஒன்றின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் . (அது பெறப்பட்டுள்ளது) . அவ்வாறு பெறப்படும் ஒப்புதலை கிராம சேவகர் பிரதேச செயலாளர் சிபார்சு செய்ய வேண்டும். (அவையும் இடம்பெற்றுள்ளது) . இதற்கு அப்பால் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் சிபார்சு பெறப்பட வேண்டும். (அந்த சிபார்சு பெறப்படவில்லை.) இவற்றின் பின்பு கடல் சூழலிலயல் பாதுகாப்பு அதிகார சபையிடமும் அனுமதி பெறப்பட வேண்டும். ( இதுவும் பெறப்படவில்லை)
நெக்டா என்னும் குறுஞ் சொல்லில் அழைக்கப்படும் கடற்றொழில் உயிரிணங்கள் வளர்ப்பு அதிகார சபை அமைப்பே இதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்க முடியும். அது வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் தற்போது வரையில் இந்த பண்ணை சட்ட விரோதமாகவே செயல்படுகின்றமை உறுதி செய்யப்படுகின்றது.
இது தொடர்பில் வழங்கிய சிபார்சு தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் பி.எஸ்.கிருஸ்னேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
உள்ளூர் சங்கம் ஒன்று தம்மால் மேற்கொள்வதாக கோரியதன் அடிப்படையில் கிராம சேவகர் செய்த சிபார்சை எமது திட்டப் பணிப்பாளர் கரிசணை செலுத்தி எனது சிபார்சை பெறுபாறு அறிவுறுத்திய கடிதம் அவர்கள் வசம் உள்ளதே அன்றி வெளியார் தொடர்பிலோ அல்லது நிறுவனம் தொடர்பிலோ இதுவரை எம்மிடம் பிரஸ்தாபிக்கவில்லை என்பதோடு இதற்கான அனுமதி என்னால் இதுவரை வழங்கப்படவில்லை. திட்டப் பணிப்பாளரின் சிபார்சைகூட இனி கரிசணை செலுத்துவதானால் அது கம்பனிகள் சட்டத்தின் கீழேயே ஆராயப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தப் பண்ணை அமைப்புத் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை தொடர்பு கொண்டு உங்கள் சிபார்சு பெறப்பட்டதா என வினாவியபோது சிபார்சு தொடர்பில் இதுவரை எவருமே அனுகவே இல்லை என்ற பதிலே கிட்டியது.
இது தொடர்பில் நெக்டா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால்
இதற்கான அனுமதி எம்மால் இதுவரை வழங்காத போதிலும் இதனை அந்தச் சங்கத்திடம் மட்டும் வழங்க வேண்டிய பணிகளை முன்னெடுக்கின்றோம் எனப் பதிலளிக்கின்றனர்.
ஆகமொத்தம் உரிய திணைக்களங்கள் அலுவலகங்களின் சிகார்சுகள் அனுமதிகள் இன்றி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி எமது நாட்டுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை எமது நாட்டவர்களைவிடவும் சீனர்கள் அறிந்து வைத்துள்ளதன் வெளிப்பாடாகவும் தெரிகின்றது.
இதேநேரம் ஒருதரப்பு செய்வோம், செய்விப்போம் எனக் கூறினாலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பு 1,760 கி.மீ. நீளமாக காணப்படும் நிலமையில் இன்றும் கடல் உணவு குறிப்பிட்டளவு ஏற்றுமதி செய்தாளும் அதிகளவில் இறக்குமதி செய்யும். நாடாக இலங்கை இருக்கின்றது.்
இலங்கையிலேயே அதிக கடல் உணவு உற்பத்தி செய்யும் முதலாவது மாவட்டமாக தற்போது புத்தளம் மாவட்டமே காணப்படுகின்றது. புத்தளம் மாவட்டம் முதலாவது மாவட்டமாக திகழ்வதற்கு இந்த மாவட்டத்தில் அதிக நீண்ட நாள் விசைப்படகுகள் காணப்படுவதே காரணமாக விளங்கும் அதே நேரம் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதி அதிக பங்களிப்பு வழங்குகின்றது.
இதேபோன்று இரண்டாவது மாவட்டமாக கம்பகா மாவட்டத்தின்
நீர்கொழும்பு பிரதேசம் காணப்படுகின்றது. இவ்வாறு இரண்டாவது இடத்தை கம்பகா மாவட்டம் பிடிக்க நிக்கோவிட்ட இறங்குதறையே முக்கிய காரணமாக காணப்படுகின்றது. அதாவது இங்கே அதிக படகுகள் வருவதே இந்த இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமாகின்றது.
இலங்கையின் மொத்த உற்பத்தியின் 33 வீதம் யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டும் பெற்றது.
1983 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை யாழ்ப்பாணக் குடாநாடு மட்டும் உற்பத்தி செய்துள்ளதனை நீரியல் வளத் திணைக்கள தரவுகள் உறுதி செய்கின்றன. இலங்கையின் மூன்றில் ஒரு பகுதிக் கடல் வடக்கில் உள்ளது. இதில் யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டும் 33.5 வீத உற்பத்தியை எட்டிய நிலமை காணப்பட்டது. இந்த உற்பத்தி வீழ்ச்சி கண்டதற்கு யுத்தம், தொடராக ஒரு இடத்தில் மீன்பிடித்தமையால் இனப்பெருக்க இடம் அழிவு, காலநிலை மாற்றம், மீன்பிடி அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை போன்றவை காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது அதிக கடல் கலங்கள் அழிக்கப்பட்டதும் பிரதான காரணமாகின்றது. 1983 ஆம் ஆண்டு ஆரம்பமான கடற் கலங்கள் அழிப்பு இறுதி யுத்த காலமான 2009 ஆம் ஆண்டு வரை நீண்டு அதிக கடற்கலங்கள் அழிக்கப்பட்டன.
1983ஆம் ஆண்டு கொக்குளாய், கொக்குத்தொடுவாய் முதல் மன்னார் வரையிலும் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலத்தில் வல்வெட்டித்துறை, திருகோணமலை வரைக்கும் படகுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. அதன் பின்பு 2ஆம் ஈழப்போரின் போது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார், கிளாலி என எங்குமே இந்த அவலம் இடம்பெற்றதோடு ஒட்டு மொத்த யாழ்ப்பாண இடப்பெயர்வின்போதும் இதே நிலமையே காணப்பட்டது.
இதற்கும் அப்பால் தமது உயிரைக்காக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மக்கள் பயணித்த படகுகள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டது. கிளாலிப் போக்குவரத்தில் அழிக்கப்பட்ட கடற்கலங்கள் நூற்றுக் கணக்கானவை.
இத்தனையும் தாண்டி 2020 ஆம் ஆண்டு இலங்கையின் கடல் உற்பத்தியின் மொத்த ஏற்றுமதியானது 21 ஆயிரத்து 298 மெற்றிக் தொன்னாக காணப்படும் அதே நேரம் இதன் பெறுமதியானது 39 ஆயிரத்து 874 மில்லியன் ரூபாவாக அதாவது 215 மில்லியன் டொலராக காணப்படுகின்றது. இதேநேரம் 2019ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 771 மெற்றிக் தொன்னும் 2018ஆம் ஆண்டு 27 ஆயிரத்து 998 மெற்றிக் தொன்னாகவும் காணப்பட்ட அதே நேரம் 2017 ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 593 மெற்றிக் தொன்னாக மட்டுமே காணப்பட்டது.
இதேநேரம் 2020ஆம் ஆண்டின் இறக்குமதியானது 85 ஆயிரத்து 809 மெற்றிக் தொன்னாகவும் இதன் பெறுமதி 35 ஆயிரத்து 504 மில்லியன் ரூபா அதாவது 191 மில்லியன் டொலராகவும் காணப்படுகின்றது. அதாவது நல்லின மீன், இறால், நண்டு, கடலட்டை போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் அதே காலம் அடைக்கப்பட்ட ரின் மீன் மற்றும் நெத்தலிக் கருவாடு போன்றன இறக்குமதி செய்யப்படுகின்றது.
இலங்கையின் வருடாந்த கடல் உற்பத்தியானது 62 கோடியே 50 லட்சம் கிலோ எனப்படுகின்றது. ( உற்பத்தி 5 லட்சத்து 25 ஆயிரம் தொன்.) இருப்பினும் இந்த அளவில் சிறு சந்தேகமும் உள்ளது. இலங்கையில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்வது கடலட்டை, அறக்குலா, பாரை, இறால், நண்டு ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதி உச்ச பசளை வீதியில் வீசப்படுகின்றது.
அன்றாட உணவிற்காக பெறப்படும் இறாலின் கோதானது அதி உச்ச பயனைத் தரும் மிகப்பெரும் பசளையாகும். இந்தியாவில் இறால் கோது தென்னைச் செய்கைக்காக நிலத்தின் கீழ் பயன்படுத்துவது மட்டுமன்றி தென்னை வட்டுக்குள்ளும் வீசப்படுகின்றது. எமது பிரதேசத்தில் கல்வி அறிவு உடையவர்கள்கூட அதனை வீதியில் வீசிவிட்டு இரசாயன உரத்தை வாங்கியே பயன்படுத்தவே முனைகின்றனர்.
ஆயிரம் கிலோ இறாலிற்கு 120 கிலோ ஓடு என்ற அடிப்படையில் ஒரு மாதம் 20 ஆயிரம் தொன் இறால் ஏற்றுமதியில் . கடந்த ஆண்டு பண்ணைகளில் இருந்து 8 ஆயிரம் தொன் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதாவது 80 லட்சம் கிலோ இறால் இதில் 8 லட்சம் கிலோ கோது வரும் . இதனை வெளியில் எடுத்தால் அதிக பசளை. இதில் புத்தளம் பகுதி விவசாயிகள் இதனை நன்கு பயன்படுத்துகின்றனர். வடக்கில் பசளையை அநியாயமாக கை விடப்படுகின்றது.
வடக்கு மாகாணம் கடல் பண்ணைகள் என்னும் பெயரில் பங்கிடப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 கி.மீற்றர் நீள கடல் உள்ளதோடு, மன்னாரில் 163 கி.மீ. நீளம் கடல் உள்ளதோடு , கிளிநொச்சியில் 125 கி.மீற்றரும், முல்லைத்தீவில் 76 கி.மீற்றருமாகவே வடக்கு மாகாணத்தில் 656 கி.மீற்றர் நீள கடல் உள்ளது. இதன் கரையோரங்களில் அதிக பண்ணைகளை அமைக்க தற்போதைய அரசு திட்டமிடுகின்றது. இதனால் ஏனைய நீண்டகால பாரம்பரிய தொரில்கள் எந்தளவிற்கு பாதுகாக்கப்படும் என்பது ஒரு கேள்விக் குறியாகவும. உள்ளது.
இவற்றில் அதிகமாக தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் கடலட்டை, இறால்ப் பண்ணை, பாசி வளர்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது மட்டுமன்றி கடலும் வழங்கப்படவுள்ளது. இதில்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வேலணையில் 2 ஆயிரத்து 150 ஏக்கரும், ஊர்காவற்றுறையில் 2 ஆயிரத்து 15 ஏக்கரும், நல்லூரில் 445 ஏக்கரும் வழங்கப்படவுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 260 ஏக்கர் பிரதேசம் வழங்கப்படவுள்ளது.
தரைக்கு அப்பால் கடலிலும் இடம் வழங்கப்படவுள்ளது.
நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் தரையில் இடம் வழங்கினாலும் 5வது பிரதேச செயலாளர் பிரிவான நெடுந்தீவுப் பிரதேசத்தில் கடலில் 400 ஏக்கர் பிரதேசம் பாசி வளர்ப்பிற்கு வழங்கக்படுகின்றது. இதன் அடிப்படையில் இரு இடங்களில் 200 மற்றும் 200 ஏக்கர் இடமாக கடலில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. அவ்வாறு கடலில் வழங்கப்படும் இரு பிரதேசமும் தரையில் இருந்து 500 மீற்றருக்கும் அப்பால் நடுக் கடலிலேயே இந்த இரு திட்டமும் இடம்பெறவுள்ளது.
தற்போது 5 ஆயிரம் ஏக்கருக்கு பண்ணைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுகின்றது. வருமானம் மாகாண சபைக்கு கிட்டும் எனச் சொல்லப்படுகின்றது.
மன்னாரில் தற்போது 56 ஏக்கர் பாமில் ஒரு வருடத்திற்கு 1 பில்லியன் வருவதனால் 60 வீத செலவீனம் வரும். மிகுதி இலபம். கரை வலை பாதிக்காது. கலங்கட்டிக்கு 300 மீற்றர் இடைவெளியிருக்க வேண்டும். அது போதுமானது. பாசி வளர்ப்பை நாடி பெரிய இன மீன் தேடி வரும். மீனவர்களை ஏமாற்றி வாங்கும் தரகர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவர்.
இவ்வாறெல்லாம் நெருக்கடி உள்ள எமது நாட்டில் வந்து தொழில் புரியும் சீனாவிற்கோ ஒரு பக்கமே கடலாக இருக்கும் நிலையிலும் கடல் உற்பத்திகளான அடைக்கப்பட்ட மீன் மற்றும நெத்தலிக் கருவாடு என்பவற்றை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாகவே உள்ளது.
Comments are closed for this post.