ந.லோகதயாளன்

இலங்கையில் அதிக காடுகளை கொண்ட முதல் 3 மாவட்டங்களில் இரு மாவட்டங்கள்  வடக்கு மாகாணத்திலேயே கானப்படுவதனால் வன விலங்குகளின் பாதிப்புக்கள் நிறைந்த மாவட்டங்களாகவும் இந்த மாகாணமே கானப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் மன்னார் , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வன விலங்குகளினால் பாதிக்கப்படும் மக்களின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. இவற்றில் மிக முக்கியமாக யானை , கரடி , பாம்பு , சிறுத்தை  ஆகியவற்றினால் இந்த மூன்று மாவட்டங்களும் அதிகமாகவே பாதிக்கப்படுகின்றது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில், காட்டு யானை தாக்கியதால் 122 மனித உயிர்கள் பறிபோனது.  407 காட்டு யானைகள் இறந்துள்ளதாகவும் இந்த 2020 ஆம் ஆண்டின் முதல்   எட்டு மாதங்களில் 62 மனித உயிர்கள் இழந்துள்ள அதேநேரம்  200 யானைகள் இறந்ததாகவும் வனஜீவராசிகள் திணைக்களம்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்தனர். 

வடக்கு மாகாணம் இவ்வாறு பாதிப்புக்களை சந்தித்தாலும் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவு , வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு , செட்டிகுளம் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே  அதிக இழப்பினை சந்திக்கின்றனர். மன்னாரில்  விளாத்திகுளம் , இரணைஇலுப்பைக்குளம் , சின்னபண்டிவிரிச்சான் , பெரியபண்டிவிரிச்சான் , பெரியபதகுகுளம் மடு தேவாலய சூழல் என அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் , கரடி , சிறுத்தை  அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளாக கானப்படுகின்றதோடு   இதனை அண்டிய பகுதியில் வாழும் 2 ஆயிரத்து 500ற்கும் அதிகமான குடும்பங்கள் பொருளாதார ரீதியலும் உயிர் ரீதியாகவும் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்குகின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் , செட்டிகுளம் பிரதேசங்கள் அதிக பாதிப்பை சந்தித்தாளும் நெடுங்கேணி , பழம்பாசி , ஒலுமடு , நைனநாமடு , கரப்புக்குத்தி , விஞ்ஞானகுளம் , ஓமந்தை சன்னார் பகுதிகளிலுப் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு , மாங்குளம் , கரிப்பட்டமுறிப்பு , ஒதியமலை, கூழாமுறிப்பு  போன்ற இடங்களில் எல்லாம் யானைகள் தினமும் வந்து செல்லும் விருந்தாளிகள் போன்று ஆகிவிட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதில் மன்னார் மாவட்டம் மடுப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் யானைகளை கட்டுப்படுத்த  மாதம் ஒன்றிற்கு 300 யானை வெடிகள்கூட போதாமல் இருப்பதாக  பிரதேச செயலாளர்  தெரிவிக்கின்றார்.

மன்னார் மாவட்டம் முழுமையாக 2002.07 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட மாவட்டம். அதாவது  2 லட்சத்து206.74 கெக்டேயர் அல்லது 4 லட்சத்து 94 ஆயிரத்து 767.25 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டது4 லட்சத்து ஆயிரத்து 407 ஏக்கர் நிலங்கள்  திணைக்களங்களின் பிடியில் உள்ளது.
எஞ்சிய 93 ஆயிரத்து 360 ஏக்கர் நிலம் மட்டுமே மக்களின் வாழ்விடம் , வாழ்வாதாரம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளிற்காக இந்த நிலங்களே  உள்ளபோதும் இந்த மாவட்டத்தில் யானைப் பாதுகாப்பு வேலிகள்  கிடையாது. இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கு மட்டும் 190 கிலோ மீற்றர் நீளமான யானை பாதுகாப்பு வேலி அமைத்தாளே அப்பகுதியை யானையிடம் இருந்து பாதுகாக்க முடியும் என பிரதேச செயலகத்தால் ஏற்கனவே  அறிக்கையிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மட்டும்  2 லட்சத்து 97 ஆயிரத்து 407 ஏக்கர் நிலம் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது.

இதில் தற்போது மடு தேசிய பூங்காவிற்காக 2015ஆம் ஆண்டில் 63 ஆயிரத்து 67 கெக்டேயர் அரச இதழ் வெளியிடப்பட்ட நிலையில் இப் பகுதியில் உண்மையில் 29 ஆயிரம் கெக்டேயர் பிரதேசமே 1938ஆம் ஆண்டு முதல் குறித்த திணைக்களத்தினால் ஆளுகை செய்யப்பட்டது. அவ்வாறானால் போரிற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் 82 ஆயிரத்து 330 ஏக்கர் நிலம் மட்டுமே கானப்பட்டது.  போரின் பின்னர் 2 லட்சத்து 15 ஆயிரத்து 77 ஏக்கர் நிலம் அரச இதழ் வெளியீட்டின் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் மத்தியில் இந்தப் பகுதியில் வாழும் மக்களும் வாழ்வாதார கால் நடைகளும் தினமும் வன விலங்குகளின் தாக்குலிற்கு இலக்காகிய வண்ணமே உள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மட்டும் 2020ஆம்  ஆண்டு யானையின் தாக்குதலில் இருவர் உயிரிழந்த அதேநேரம் 6 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று கரடியின் தாக்குதலில. ஒருவர் உயிரிழந்து 19பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த  உயிரிழப்பும் காயமும் மடு பிரதேச செயலாளர் பிரிவிலேயே ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கரடியின் தாக்குதலிற்கு அகப்பட்டு தற்போது ஒரு காலை இழந்த்தோடு ஒரு கையிலும் பலமான காயங்களுடன் வாழும் நவரத்தினம் – யோகேஸ்வரன்.  கரடியின் தாக்குலிற்கு இலக்கான நிலையில் எதுவுமே இயலாத நிலையில் இன்று ஓர் பிள்ளை மேசண் தொழிலாளியாகவும் மனைவி கூலி வேலைக்கும் சென்றே குடும்பத்தைச் சுமக்கும் நிலையில் உள்ளனர்.

கரடியுடன் நீண்டநேரம் போராடி தோத்த நிலையில் ஓர் காலையும்  கையையும் பறிகொடுத்த  நிலையில் உயிர் மீண்டார். அதேபோன்று இரணைஇலுப்பைக்குளம. பகுதியில் வசிக்கும் சிவகுரு – சிவராஜசிங்கம் என்னும் 45 வயது குடும்பஸ்தர் இப் பகுதியில் இருந்து முள்ளிக்குளத்தில் உள்ள தமது வயலிற்கு காலை 10 மணிக்கு  2019-07-24 அன்று மைத்துநருடன் சென்று வயலில் பணியாற்றுக்கொண்டிருந்த சமயம் வயலோரம் இருந்த காட்டில் இருந்து அப்பகுதிக்கு வந்த கரடி தாக்கியபோது மைத்துநரின் உதவியுடன் தப்பியபோதும் ஒரு கண்ணை முழுமையாக இழந்த்தோடு மேலும் பல காயங்களிற்கு இலக்கானார்.

இவ்வாறு நீண்டு செல்லும் பட்டியல்    மடு றோட்டில் பண்ணை வெட்டுவான் பகுதியில் வசிக்கும் ஜோசப் -வேலு என்னும் 50 வயதினையுடைய 3 பிள்ளைகளின் தந்தை 2019 மே மாதம் 25 ம் திகதி கரடியிடம் அகப்பட்டு தப்பி வந்த நிலையில் தனது நிலமை தொடர்பில் விபரிக்கின்றார்.

எனது குடும்பம் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றோம். கரடியிடம் அகப்பட்ட அன்று எனது மாடுகள் காட்டுத் திசையை நோக்கிச் சென்றன. அவ்வாறு சென்றதனால் சிறுத்தைகளிடம் அகப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக பகல் 3 மணியளவில் நானும் மேலும் இருவரும்  மாடுகளை கரையை நோக்கி விரட்டச் சென்றோம்  அந்த நேரம் வித்தியாசமான மிருகத்தின் சத்தம் காரணமாக யானை வருது என எண்ணி என்னுடன் வந்தவர்களை ஓடுமாறு கூறிவிட்டு எனது வயதின் காரணமாக அதிகம் ஓட முடியாத காரணத்தினால்  மரத்தின் மீது ஏற முயன்றேன்  கரடி திடீரெனப் பாய்ந்து காலில் கவ்வி இழுத்தது கரடியிடம் இருந்து காலை பறித்தெடுத்த சமயம் கால் கிளிந்தே மீண்டேன்.

இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயம் மாறியபோதும் இன்று வரை நடக்க முடியவில்லை. இதனால் 3 பிள்ளைகள் , மனைவி நான் வாழ்வாதாரத்திற்கே பெரும் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளோம். என்றார்.

இதேபோன்று 2019  யூலை மாதம் 15ம் திகதி சின்னவலையன்கட்டு மன்னாரைச் சேர்ந்த நடராசா- மோகனதாஸ் வயது 41 என்பவரும் அவரது நன்பரெம் இணைந்து காலை 10 மணிக்கு தேன் எடுக்கச் சென்ற சமயம் கரடி முதலில் நண்பரையே தாக்கியது இதனால் நண்பரை மீட்கும் மீயற்சியில் மோகனதாசும் இணைந்தார். காட்டில் இருந்த ஓர் தடியை எடுத்து கரடியை பலமாக தாக்கியபோது கரடி இருவரையும் கடித்துக் குதறியது.

இருவருடனும் கரடி தனியாக அரை மணி நேரம் மோதலில் ஈடுபட்டது. இதனால் இருவருக்குமே கையில் பெரும் காயங்கள் ளற்பட்டன. இதனால் தற்போது எந்த தொழிலும் மேற்கொள்ள முடியவில்லை. என 3 பிள்ளைகளின் தந்தை தெரிவித்தார்.

வன விலங்குகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு உச்ச பட்சம் 5 லட்சமும் காயமடைந்தவர்களிற்கு ஒரு தொகைப் பணமும் வழங்கப்படுவதுடன் அரசு கையை விரிக்கின்றது. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இங்கே காடுகளை தேடிச் செல்பவர்களிற்கு மட்டும் இழப்பு ஏற்படவில்லை தற்போது ஆபத்து கிராமங்களைத் தேடியும் நகர்ந்துவிட்டது.
அதாவது வாழ்வாதாரத்திற்கான கால் நடைகளும் காவு கொள்ளப்படுகின்றன. 2020  ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஆடு , மாடுகள் 49ஐ சிறுத்தைப் புலிகள் உணவாக்கியுள்ளதோடு மேலும் 41 கால் நடைகள் காயங்களுடன் தப்பியுள்ளது.

மன்னாரில் நிலை இதுவெனில் முல்லைத்தீவு மாவட்டத்துலே 2016ஆம் ஆண்டிற்கு பின்பு யானையின் தாக்குதலில் மூவர் உயிரிரக்க 9 பேர் படுகாயமடைய மூன்று வீடுகளும் முழுமையாக நாசமடைந்துள்ளதோடு 140 ஏக்கர் வயலும் அழிவடைந்ததாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

இவற்றின் காரணமாக காடுகளில் நிலவிய அச்சம் தற்போது மக்களின் குடியிருப்பையும் அண்மித்தபோதும் அரச இயந்திரமும் வன திணைக்களங்களும் மந்த கதியிலேயே நகர்கின்றதோடு வெறுமனே தரவுகளை திரட்டும் செயலகங்களாகவே இயங்குகின்றன.

வவுனியாவில் விலங்குகளின் தாக்குதலிற்கு இலக்காவோர் தொகை அதிகரிக்கின்றது.
வவுனியா மாவட்டத்தில் விலங்குகளின் தாக்குதலிற்கு இலக்காகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தரவுகளின் பிரகாரம் 2018ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையினை விடவும் 2019ஆம் ஆண்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கக அதிகமாகவே கானப்படுகின்றது. இதன் அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் ஆயிரத்து 631 பேர் விலங்குகளின் தாக்குதலிற்கு சிகிச்சை பெற்ற நிலையில் 2019இல் 2 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இது 18 ஆம் ஆண்டினைவிடவும் 55வீதம் அதிகரித்துள்ளது.

இதே நேரம் 2020ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ஆயிரத்து 100பேர் விலங்குகளின் தாக்குதலிற்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு விலங்குகளின் தாக்குதலிற்கு இலக்காகி சிகிச்சை பெறும் எண்ணிக்கையானோரில் 95 வீதம் தாண்டிய எண்ணிக்கை தெரு நாய் கடிக்கு இலக்காவோரும் எஞ்சிய தொகையினர் யானை , கரடி , குரங்கு உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தாக்குதலிலும் காயமடைந்துள்ளனர்.

இதேநேரம்  குறித்த எண்ணிக்கையில் பாம்புக் கடிக்கு இலக்காவோர் எண்ணிக்கை உள் அடக்கப்படுவதில்லை எனவும் மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.