கடந்த ஆண்டு டிசம்பர் 31 முதல் புத்தளம் மற்றும் கல்பிட்டி நீரேரிகளில் இழுவைமடி வலை தொழிலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதன் விளைவாக பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தும் உள்ளூர் மீனவர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இறால், மீன் மற்றும் நண்டு என்பன   குறிப்பிடத்தக்களவில் அறுவடை செய்யப்படுள்ளதென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 23 மீனவர் கிராமிய அமைப்புக்களைச்  சேர்ந்த குறைந்தது 3,000 மீனவக் குடும்பங்கள் கடல் நீரேரி  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி தமது அன்றாட வாழ்க்கையை தொடருகின்றனர்.

இழுவை மடிவலை மீதான தடை வருவதற்கு முன்னர், சுமார் 22 உள்ளூர் இழுவை மடி படகுகள் வில்பத்து ராம்சார் சதுப்பு நிலக் கூட்டத்தின் (Wilpattu Ramsar wetland cluster) ஒரு பகுதியாக உள்ளடக்கப்படுள்ள பகுதியில் இழுவை மடி மீன்பிடித்தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபட்டன.  ஈரநிலக் கூட்டத்தின் எல்லை நிர்ணய அளவீடுகளின்படி, அதன் மேற்கு எல்லையானது பட்டலங்குண்டுவ மற்றும் பள்ளியாவத்தை தீவுகளை உள்ளடக்கிய மேற்கு கடற்கரையிலிருந்து பத்து கிலோமீற்றர் வரை கடல் நீரேரியை உள்ளடக்கியுள்ளது.

சின்னக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் மீனவர்களில் ஒருவரான பாப்பை மரைக்கார் முஹம்மது பஷீர் இது தொடர்பில் கூறுகையில்,  இப்பிரதேசத்தில் உள்ள மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக சட்டவிரோத இழுவை மடி  தொழிலுக்கெதிராக  தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாரம்பர்ய மீன்பிடி முறைகளில் ஈடுபடும் உள்ளூர் மீனவர்கள், இழுவை படகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் ஒன்றான இழுவை மடியினால் தொடர்ந்து தொழில் செய்து வருவதால் தங்களது மீன்பிடி அறுவடை கணிசமாக  குறைந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

 “இந்த தற்காலிகத் தடையின் பிரதிபலிப்பை நாம் இப்போது அதிகளவில் அறுவடையாகும்  மீன்கள் மற்றும் இறால்களை ஒப்பிடுவதன் மூலம் கண்டுகொள்ளலாம். இத்தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, இப்போது நாம் பெறுவதில் மூன்றில் ஒரு பகுதியைக் கூட அப்போது எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை, ”என்று திரு. பஷீர், இழுவை மடி நிறுத்தப்படுள்ளதால் மீன் இனங்கள் மற்றும் இறால்கள் தமது இனப்பெருக்க நடவடிக்கைக்காக வழமையாக  கடற்கரையை அடையக்கூடியதாக இருந்தது என்று விளக்கினார். தற்போதுள்ள காலநிலை பருவத்தைப் கவனத்தில் எடுத்து உள்ளூர் மீனவர்கள் குறிப்பிட்ட சில மீன் இனங்களை  மட்டுமே அறுவடை செய்ய எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

விளக்கச்சித்திரம்: The Sunday Times

ராம்சார் பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசியப் பூங்கா பற்றிய ஆவணத்தின் பிரகாரம், ஆற்று முகத்துவாரங்களிலும் அதைச் சுற்றிலும், பூங்காவின் கரையோரத்தில் உள்ள ஆழமற்ற கடல் படுகைகளிலும், பட்டலங்குண்டுவ மற்றும் பள்ளியாவத்தை ஆகிய இரண்டு கடல் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரந்த கடல் புல் (seagrass ) திட்டுகள் பொதுவாகக் காணப்படுகின்றன.

வில்பத்து தேசிய பூங்காவின் ஆழமற்ற கரையோர நீர் எல்லையில் உள்ள கடற்பரப்பு பாத்திகள், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான கடல்சார் பாலூட்டியான Dugong (Dugong dugon) இன் முக்கியமான வாழ்விடமாகும்.

இருப்பினும், சட்டப்பூர்வ உரிமம் இல்லாத இழுவை மடி விசைப்படகுகள், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரம் முழுவதும் மீன்பிடியில் ஈடுபட்டபோது, மீன் இனங்கள்  திசைமாறி அல்லது இழுவை வலையில் சிக்கியதால், உள்ளூர் மீனவர்களது வலையில் அகப்படுவது கணிசமாகக் குறைந்து போனது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு  இயந்திரங்களை கொண்டுள்ள  இவ்இழுவை படகுகள் ஒவ்வொன்றும் சுமார் பதினொரு டன்கள் வரை எடையும், 60-90 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் சுமார் 23 கடற்றொழிலாளர் சம்மேளனங்கள் கடல்நீரேரிகளில்  இழுவை மடித்தொழிலை தற்காலிகமாக நிறுத்துமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைத்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டிய பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 31 முதல் அவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.

கடந்த காலத்திலும் மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இதேபோன்ற தற்காலிக தடை 2018 இல் நடைமுறைக்கு வந்தது, ஆனால் பின்னர் அரசியல் செல்வாக்குடன் அது  நீக்கப்பட்டது என்று உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2017 ஆம் ஆண்டில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் இழுவை மடி மூலம் மீன்பிடியில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டது.

இச் சட்டத்தின்  பிரகாரம் இழுவை மடியில்  ஈடுபடும் படகில் இருந்து மீன்பிடிப்பது, இயக்குவது அல்லது சொந்தமாக அவ்வாறான படகுகளை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்த குற்றத்திற்கு ரூ.50,000 அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இழுவை மடித்தொழிலுக்காக  கருவிகளை இறக்குமதி செய்வதையும் இதன்மூலம்  சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மீனவர் கூட்டமைப்பு தலைவர் ஏ.டி.சுரஞ்சன் பெர்னாண்டோ இது தொடர்பில் கூறுகையில், மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ் இழுவை மடிதொழில் மீதான மீன்பிடித் தடையை தொடருமாறு தமது அமைப்பு கடற்றொழில் அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.

“எங்கள் மீனவர்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மீன்களைப் பெற்றுள்ளனர். கடல் வளங்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான  இழுவை படகுகளை அனுமதிப்பதை விட, உள்ளூர் பாரம்பரிய மீனவர்கள் பழையபடி மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்” என்று திரு பெர்னாண்டோ கூறினார்.

2020 ஆம் ஆண்டில், மீன்வள அமைச்சகத்தின் ஆராய்ச்சிப் பிரிவான தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA), உள்நாட்டில்  இயந்திரமயமாக்கப்பட்ட இழுவை படகுகள் மூலம் இழுவை மடித்தொழில் செய்ய அனுமதிக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில  கடல் பகுதிகளை பரிந்துரைத்ததற்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆரம்பத்தில், நாரா நிறுவனம் , இழுவைப் படகுப் பயிற்சிக்காக நாட்டின் கடல் பகுதியில் நான்கு கடல் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இடங்களில் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, மன்னாரில் பேசாலை, நீர்கொழும்பு மற்றும் வத்தளையில் ஹெந்தெல ஆகியவை அடங்கும். இப்பகுதிகளில், உள்ளூர் மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் விசைப்படகுகள் இழுவை மடித்தொழிலை மேற்கொள்கின்றன.

இறால் அறுவடைக்கு 1 கிலோமீட்டர் (கிமீ) மற்றும் 2 கிமீ நீளமான இழுவைமடி வலைகளின் திறனை ஒப்பிட்டுப் பார்க்க, “கல்பிட்டியில் இறால்களின் மாதிரிகளை எடுப்பதற்கான இழுவை நீளத்தை மேம்படுத்துதல்” (2009) என்ற தலைப்பில் நாரா ஓர் ஆய்வினை  மேற்கொண்டது.

இழுவை மடித்தளங்களில் மாதிரி எடுக்கப்பட்ட 45 தளங்களில் 41 இடங்களில் இறால் மீன்கள் பிடிக்கப்பட்டன, ஆனால் மீன்வள மேலாளர்கள் மீன்பிடிக்காத நீரில் இழுவை மடித்தொழில் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் தொடர்பாக மிகக்கவனமாக எடைபோட வேண்டும் என்ற விடயத்தை மிக அழுத்திக் கூறியிருந்தது.

சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பெப்ரவரி 20, 2022  அன்று வெளியான ஆக்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்