சட்டவிரோதமான முறையில் யானைத் தந்த முத்துகளை  வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட 5 சந்தேகநபர்களுக்கு ஏப்ரல் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவருக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (25) அம்பாறையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது மொன்டிரோ வகை வாகனம் ஒன்றில், 3 யானைத்தந்த முத்துகள், அடையாளம் காணப்படாத பெறுமதிமிக்க 5 கற்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, அதற்கான 8 தோட்டாக்கள் ஆகியன மீட்ககப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.