காலநிலை மாற்றமும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் பெண்களும்

கேஷாயினி எட்மண்ட்

காலநிலை மாற்றம் (Climate Change)

உலகின் பாறைகள் ஏறத்தாழ 1600 ஆண்டுகஉலகின் பாறைகள் ஏறத்தாழ 1600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியவை என்றும் இவற்றின் படிவுகள் மீதான ஆய்வுகள் மூலம் காலநிலை மாற்றங்கள் நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருவதாகவும் விஞ்ஞானம் தெரிவிக்கின்றது. வறட்சி, வெள்ளம், சுழல் மற்றும் பருவக்காற்றுகள் என பல்வேறு மாற்றங்களை இப்பூமி கடந்திருக்கின்றது. இதற்கு உப்புத் தன்மையான பாறைப்படிவங்கள், நிலக்கரிப்படிவங்கள், மரங்கள் மீதான வளையங்கள், உயிர் படிமங்கள் என்பன சான்றுகள் ஆகும். அதேவேளை இத்தகைய மாற்றங்களின் காரணிகளாக பின்வருவனவும் முன்வைக்கப்படுகின்றன.

  1. சூரிய புள்ளிகள் (Sun Spot)

சூரிய மேற்பரப்பில் குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்கிடையில் அசாதாரண வெப்பம் வெளியிடப்படுகின்றது. இதற்கும் மழைவீழ்ச்சிக்குமிடையில் மிகநெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

  1. மையக்கவர்ச்சி

புவியின் சுற்றுவட்டப்பாதையாது நீள்வட்டபாதையில் பயணிக்கும் போது சூரியனுக்கும் புவிக்குமான தூரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் காலநிலை மாற்றங்கள் உருவாகும் வாய்ப்புண்டு. பல நூற்றாண்டு கால இடைவெளியில் இடம்பெறுகின்ற இம்மாற்றமானது தற்போது குறுகிய கால இடைவெளியில் இடம்பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  1. பூகோள வெப்பமாதல் (Global Warming)

தற்காலத்தின் மிகவும் பாரதூரமான காரணி இதுவாகும். சடுதியான வானிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இப்பூகோள வெப்பமடைதலால் ஏற்படுகின்ற சமநிலையற்ற காலநிலையே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் அதிகரித்துள்ள காபனீரொட்சைட், மெதேன், கந்தகவீரொட்சைட், குளோரோபுளோரோகாபன், நைதரசரொட்சைட் போன்ற பச்சைவீட்டு வாயுக்களால் வளிமண்டலச் சேர்க்கையில் சமனிலையின்மை ஏற்படுகின்றது.

தற்காலத்தின் மிகவும் பாரதூரமான காரணி இதுவாகும். சடுதியான வானிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இப்பூகோள வெப்பமடைதலால் ஏற்படுகின்ற சமநிலையற்ற காலநிலையே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் அதிகரித்துள்ள காபனீரொட்சைட், மெதேன், கந்தகவீரொட்சைட், குளோரோபுளோரோகாபன், நைதரசரொட்சைட் போன்ற பச்சைவீட்டு வாயுக்களால் வளிமண்டலச் சேர்க்கையில் சமனிலையின்மை ஏற்படுகின்றது.

காலநிலை மாற்றத்தில் பல ஏனைய காரணிகள் இருப்பினும் இம்மூன்றும் மிகமுக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. மேலும் மனித செயற்பாடுகளான

  • விரைவான நகரமயமாக்கல்
  • வளி, நீர், நில மாசடைவு
  • தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அவை சார்ந்த கழிவகற்றல்களும்
  • காடழிப்பு
  • மண்ணகழ்வு
  • இரசாயன ஆயுதங்கள் சார் பரிசோதனைகள்
  • யுத்தம் மற்றும் ஆயுத பாவனை
  • அசேதன உரப்பாவனை
  • இயற்கைக்கு இசைவற்ற பொருட்களின் பாவனைகள்( பொலீத்தீன்)

போன்ற காரணிகளும் இவற்றில் மறைமுகமான பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி அதன் மூலம் இயற்கைச் சமனிலையினைப் பாதிக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் என்பது இன்று உலக மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள மிகப்பெரியதொரு சவாலாகும். இம் மாற்றத்தினாலான பாதிப்புக்களிலிருந்து மீளுவது முதல் மீண்டும் இவ்வாறான இயற்கைப் பாதிப்புக்களை உண்டாக்காமல் வாழ்க்கை முறைமையை அமைத்துக்கொள்வது வரை பல்வேறு ஆய்வுகள், மாநாடுகள், பயிற்சிகள் என பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் யுத்தம் என்றாலும் காலநிலை மாற்றங்கள் என்றாலும் முதல் தரப்பிலும் இறுதித்தரப்பிலும் பாதிக்கப்படும் விளிம்பு நிலையினர் பெண்களாகவே இருக்கின்றனர். இதனை பல கடந்தகால சூழல் அனர்த்தங்களும் நிரூபித்திருக்கின்றன. உதாரணமாக

“2004 இல் உலகை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் போது ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். காரணம் அனர்த்தத்தின் போது தம்முடைய குடும்ப பொறுப்பு மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு தப்பித்துவிட முடியாத மனோநிலை போன்றவற்றினால் அதிகளவு உயிர்ச்சேதம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது” – 22nd United Nations Framework Convention on Climate Change Conference

“ 2015 இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக நெருக்கடிகளாலும் பொருளாதார பிரச்சினைகளாலும் சிறுமிகள் இளவயது திருமணம் அதிகரித்துள்ளது” – Report by UNICEF on Child marriage -2020

“2016 இல் ஹைட்டியில் ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளினால் பாலியல் தேவைகளுக்காக பெண்களைக்கடத்துதல் அதிகரித்துள்ளது” UNFPA

“உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 71 சதவீதமான பெண்கள் நீர் சார் பணிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான நிர்வாகப்பணிகளிலும் அங்கம் வகிக்கின்றனர். மேலும் அபிவிருத்தியடைந்த வருகின்ற மற்றும் வறிய நாடுகளில் 10 பெண்களில் 08 பெண்கள் குடும்பத்திற்கான குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் கடமையை எதிர்கொள்கின்றனர்”

பூகோள வெப்பமடைதல் மற்றும் பச்சைவீட்டு விளைவுகளினால் 2030 இல் 1.5 செல்ஸியஸ் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக ஐபிசிசி (ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு) இன் அண்மைய அறிக்கை குறிப்பிடுகின்ற நிலையில் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள விடயங்களும்; பெண்களது வகிபாகங்கள் குறித்து காலநிலை மாற்றங்கள் விடயங்களில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணிகளாக

  1. பெண்களது குடும்பம் மற்றும் உறவுகள் சார் பற்றுதல் மற்றும் தார்மீக கடமைகள் குறித்த கூருணர்வுகள்
  2. பால்நிலை சார் சமமற்ற வளப் பகிர்வுகள்
  3. வளங்கள் சார் தொழில்முயற்சிகளில் பெண்களது குறைந்த பங்களிப்பு அல்லது பங்களிப்பின்மை
  4. வளங்கள் சார் தொழில்முயற்சிகளில் தீர்மானங்களை மேற்கொள்ளலில் பெண்களின் குறைந்தளவான பங்களிப்பு
  5. அனர்த்தங்களின் போது பெண்கள் மீதி பிரயோகிப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள்
  6. விவசாயம் மற்றும் மீன்பிடி சார் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் அல்லது குடும்பத்தினர் மீது ஏற்படுகின்ற பொருளாதார சுமைகள்
  7. பொருளாதார ரீதியான அழுத்தங்களால் ஏற்படுகின்ற உளம்சார் பிரச்சினைகள் மற்றும் சிறுவயது திருமணங்கள்
  8. நுண்கடன் பிரச்சினைகளாலும் கடன்களாலும் ஏற்படுகின்ற சமூக பொருளாதார, மன அழுத்தங்கள் மற்றும் தற்கொலைகள்
  9. பால்நிலை சார் சமூக பார்வைகள்

போன்றவற்றினை குறிப்பிடலாம். மேற்கூறிய மேற்கோள்கள் கடந்த கால சூழல் பாதிப்புகளைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆய்வுகளின் மூலம் அறிக்கையிடப்பட்ட விடயங்களாகும். இத்தகைய விடயங்களினால் பெண்கள் பின்வரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

காலநிலை மாற்றங்களும் உளவியல் பிரச்சினைகளும்

டேவிட் வாலன்ஸ் வெல்ஸ் (David wallace wells) ஊடகவிலயாளர் மற்றும் காலநிலை மாற்றங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பில் ஆர்வலராகவும் செயற்படும் ஒருவராவார். இவரது பின்வரும் கருத்தானது இத்தலைப்பின் கீழ் விபரிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்த தார்ப்பரியத்தினை எமக்கு உணர்த்தக்கூடியது

“காலநிலை மாற்றம் குறித்து நீங்கள் அறிந்து கொள்வீர்களாயின் அதனை நீங்கள் என்றும் மறந்திடமுடியாது” 

இன்று காலநிலை சார் விடயங்களை விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும் ஆய்வுசெய்துகொண்டிருக்கும் வேளை இக்காலநிலை மாற்றத்தினால் உருவாகியுள்ள மற்றும் எதிர்காலத்தில் உள பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் உளவியல் நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

இவர்களது ஆய்வுகளிற்கமைய “மனசிதைவு (Schizophrenia) பாதிப்பானது பெரும்பாலும் உயர் வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களில் அதிகரித்துள்ளதுடன் மதுபாவனைப்புழக்கமும் இவ்வாறான காலநிலையுள்ள இடங்களில் அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ச்சியான வறட்சி, வெள்ளம் மற்றும் காலநிலை பாதிப்புக்களுக்குள்ளான இடங்களில் இருப்பவர்கள் மூர்க்கத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கின்றார்கள். இதனால் குடும்ப வன்முறைகளும், பெண்கள் மீதான வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அத்துடன் இயற்கைப்பேரழிவுகள், அதனால் ஏற்படகின்ற அங்கவீனம், இறப்புக்கள், உடைமையிழப்பு என்பன ஒருவரடைய உளநிலையை நீண்டகால பாதிப்புக்குள்ளாக்கும். இதனை பாதிப்புக்களுக்கு பின்னரான அழுத்த முரண்நிலை (Post Traumatic Stress Disorder) எனலாம். அவ்வாறே அனர்த்தத்தினால் தன்னுடைய நெருக்கமானவர்கள் இறக்கும் பட்சத்தில் குற்ற உணர்வும் (Survivor Guilt) எற்படுகின்றது. இதன் பாதிப்பு அதிகரிக்கும் போது தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவுகளும் பெரும்பாலும் குழந்தைகளையும் பெண்களையும் பாதிக்கின்றன

காலநிலை சார் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வாளர்கள், ஆர்வலர்களையும் இரக்கச் சோர்வு (Compassion Fatigue) பாதிக்கின்றது” என தெரிவிக்கப்படுகின்றது.

பரிந்துரைகள்

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியின் 17 அம்சங்களில் 13 ஆவது காலநிலைசார் செயற்பாடுகள் குறித்த விடயமாகும். இதன் கீழ் காலநிலை மாற்றங்களை சீர்செய்வதற்கான செயற்பாடுகள், விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • காலநிலைசார் விடயங்கள் மற்றும் விவாதங்களில் பெண்களது பிரதிநிதித்துவத்தினை அதிகரித்தல்
  • காலநிலை விழிப்புணர்வு திட்டமிடல் செய்முறைகளில் பெண்களை உள்ளீர்த்தல்
  • தேசிய மற்றும்  சர்வதேச ரீதியிலான கட்டமைப்புக்களை சமூகத்தின் அடிமட்ட நிலையிலுள்ள பெண்களது தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்குதல்
  • பாதிப்புக்குள்ளாகும் பெண்களது தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை சேகரித்தலும் அத்தகவல்களை இலகுவில் பரிமாற்றவும் உபயோகிக்கவும் கூடிய வகையில் ஆவணப்படுத்தல்
  • காலநிலை மாற்றங்கள் மற்றும் அதனாலான விளைவுகள் தொடர்பான அறிவூட்டல்களை முன்னெடுத்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
  • எளிய மற்றும் இலகுவில் அணுகக்கூடிய வகையிலான திட்டங்களை முன்னெடுத்தல்
  • பெண்பிரதிநிதிகளை அதிகளவில் தன்னார்வலர்களாக இணைத்தல்
  • பின்தங்கிய நிலையில் அல்லது பிரதேசங்களில் ஊக்குவிப்புத்தொகை வழங்கும் திட்ட முன்மொழிவுகளை உருவாக்குதல்
  • தமது பகுதியில் ஏற்படுகின்ற மாற்றங்களை தாமே உள்ளெடுத்து அவற்றினை குறைப்பதற்கான முன்மொழிவு வரைபுகளை அப்பகுதி பெண்களை வைத்தே உருவாக்குதல்
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கிடையேயான வலையமைப்புக்களை உருவாக்குதல். இதன் ஊடாக சமூக மற்றும் உள பலத்தினை அதிகரித்தல்
  • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உளவள ஆலோசனைகள், திட்டங்களை முன்னெடுத்தல்
  • பால்நிலை விடயங்கள் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்
  • பருவகால மாற்றங்கள் மற்றும் காலநிலை மாறுதல்கள் தொடர்பான ஆவணப்படுத்தல்களுக்கு ஊக்குவித்தல்

இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொரு விடயம் யாதெனில் 2019 ஆம் ஆண்டு மார்ச் இல் ஐ.நாவின் சுற்றுச்சூழல் பேரவையின் நான்காவது அமர்வானது நைரோபியில் இடம்பெற்றது. இதன் போது காலநிலை மாற்றங்களால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது ஆதாரபூர்வமான நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும், புள்ளிவிபரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் இது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளமையையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளதுடன் இது குறித்த நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் உணர்த்தி உள்ளது.

கேஷாயினி எட்மண்ட்

உசாத்துணை இணைப்புக்கள்