பல்லுயிர்தகமை இழப்பின் முக்கிய காரணிகளில் ஒன்றான ஆக்கிரமிப்பு பூச்சிகளால் நாடுகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் மொத்தமாக விளையும் விவசாயப்பயிர்களில் 40 சதவீதம் பூச்சியால் இழக்கப்படுகின்றன என்று சமீபத்திய ஒரு அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் (FAO) மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஆக்கிரமிப்பு பூச்சிகளினால் உலககின் பல்வேறு நாடுகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது 70 பில்லியன் டொலர் வரை செலவாகின்றன, மேலும் அவை பல்லுயிர் இழப்புக்கு முக்கிய உந்துதல் காரணிகளில் ஒன்றாகும்.
தாவரப்பூச்சிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிவியல் ஆய்வு என்ற தலைப்பில் இத்தாலியின் டுரின் (University of Turin) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரியா லோடோவிகா (Maria Lodovica) மற்றும் 10 இணை ஆசிரியர்களுடன் இணைந்து இவ்வாய்வு தயாரிக்கப்பட்டது. இது ஜூன் 2, 2021 இல் வெளியிடப்பட்டது.
தாவரப்பூச்சிகளினால் ஏற்படும் சேதமானது மில்லியன் கணக்கான மக்களை சாப்பிடப்போதுமான உணவு இல்லாமல் இருக்க ஏதுவாக அமைகிறது என்று FAO அமைப்பு அதன் ஆய்வில் தெரிவித்துள்ளது. இது கிராமப்புற ஏழை சமூகங்களின் முதன்மை வருமான ஆதாரமாக இருக்கும் விவசாய நடவடிக்கைகளை மேலும் மோசமாக பாதிப்படையச்செய்கின்றது.
இது தொடர்பாக FAO நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் கியூ டோங்யு (Qu Dongyu) கூறுகையில்:
“இந்த மதிப்பாய்வின் முக்கிய முடிவுகள் காலநிலை மாற்றம் எவ்வாறு பூச்சிகளின் தொற்று வீதம், அதன் பரவலாக்கும் தன்மை போன்றவற்றில் செல்வாக்கு செலுத்தும் என்பதோடு அவை எவ்வாறு கடுமையான உலகெங்கும் பரவும் ஓர் தொற்றாக மாறும் என்பது பற்றி நமக்கு எச்சரிக்கை செய்வதாக அமைய வேண்டும்,”
இந்த விஞ்ஞான ஆய்வானது 15 தாவர பூச்சிகளை பகுப்பாய்வு செய்து, காலநிலை மாற்றத்தின் விளைவாக விவசாய மற்றும் வனவியல் சுற்றுச்சூழல் அமைப்புகளில், குறிப்பாக குளிரான ஆக்டிக், வட துருவ மிதமான மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பூச்சிகள் பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டது.
ஆக்கிரமிப்பு குணம் கொண்ட பூச்சிகளின் உருவாக்கத்திற்கு ஒர் வழக்கத்திற்கு மாறாக சூடான குளிர்கால காலநிலை போதுமானதாக இருக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
மக்காச்சோளம், சோளம் மற்றும் தினை போன்ற பயிர்களில் தங்கி வாழும் சேனா கம்பளிப்பூச்சி என உள்ளூர் பேச்சுவழக்கில் அறியப்பட்ட வீழ்ச்சி இராணுவப்புழு (armyworm), டெஃப்ரிடிட்(Tephritid ) எனப்படும் பழ ஈக்கள் (பழம் மற்றும் பிற பயிர்களை சேதப்படுத்தும்) போன்ற ஒரு சில பூச்சிகள் ஏற்கனவே மிதமான வெப்பமான காலநிலை காரணமாக பரவியுள்ளன.
பாலைவன வெட்டுக்கிளிகள் (உலகின் மிகவும் அழிவுகரமான புலம்பெயரும் பூச்சிகள்) போன்றவை காலநிலை மாற்றத்தின் காரணமாக அவர்களின் இடம்பெயர்வு வழிகளையும் புவியியல் பரவலாக்கத்தையும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கி வரும் அனைத்து தாவர நோய்களிலும் பாதி உலகளாவிய பயணம் மற்றும் வர்த்தகத்தால் பரவுகின்றன, அவை கடந்த தசாப்தத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் காலநிலை இரண்டாவது மிக முக்கியமான காரணியாகும் என்று அறிக்கை கூறுகிறது. பொதுவாக இத்தகைய இயக்கங்கள் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன.
தாவரங்களை ஆரோக்கியமாக பேணுதல்
தாவரங்களின் ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க அறிக்கை பல பரிந்துரைகளை கோடிட்டுக் காட்டியது:
- பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும்போது, விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியதும் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஊக்குவிக்க வேண்டியதும் என்னவென்றால் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளைப் பயன்படுத்துவதாகும்.
- வளர்ந்து வரும் தாவர நோய்களில் பாதி பயணம் மற்றும் வர்த்தகம் மூலம் பரவுகிறது. வர்த்தகத்தை பாதுகாப்பானதாக்க, சர்வதேச தாவர சுகாதாரத் தரம் மற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது முக்கியம், அதாவது சர்வதேச தாவர பாதுகாப்பு மாநாடு (ஐபிசிசி/IPCC ) மற்றும் FAO ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. ஐபிபிசி என்பது 180 க்கும் மேற்பட்ட நாடுகளால் கையெழுத்திடப்பட்ட தாவர சுகாதார ஒப்பந்தமாகும்.
மேலும் ஆராய்ச்சி மற்றும் தேசிய தாவர சுகாதார அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான முதலீடு ஆகியவற்றின் அவசியத்தையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கமும் தங்கள் முடிவுகளை துல்லியமான தயார்படுத்தல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். தாவரங்களை தவறாமல் கண்காணித்தல் மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றிய முன்னெச்சரிக்கை தகவல்களைப் பெறுவது, அரசாங்கங்கள், விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தாவரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.
“நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தாவர ஆரோக்கியத்தை பாதுகாப்பது அடிப்படையாகும். தாவர ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவது என்பது மிகவும் திறமையான, அனைத்தையும் உள்ளடக்கிய, நெகிழ் திறன் கொண்ட மற்றும் நிலையான வேளாண் உணவு முறைகளை நோக்கிய எங்கள் பணியின் ஒரு பகுதியாகும் ”என்று டோங்யூ கூறினார்.
இவ்விஞ்ஞான ஆய்வானது சர்வதேச தாவர பாதுகாப்பு மாநாட்டின் செயலகத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு FAO ஆல் வழங்கப்பட்டது. இது தாவர சுகாதார சர்வதேச ஆண்டின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும், இது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடையும்.
ஐக்கிய நாடுகள் சபை 2020 ஆம் ஆண்டு தாவர சுகாதார ஆண்டாக அறிவித்தது. கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தொற்றுநோயால் இந்த ஆண்டு ஜூலை 1, 2021 வரை மேலும் நீடிக்கப்பட்டது.
Down To Earth இணையத்தளத்தில் “ At least 40% global crops lost to pests every year: FAO” என்னும் தலைப்பில் ஜூன் 3ம் திகதி வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.