ஆயிரக்கணக்கான கிரிம்சன் ரோஸ் (Crimson Rose) வண்ணாத்துப்பூச்சிகள் இந்தியாவின் தனுஷ்கோடி கடற்கரையில் இருக்கும் அனைத்து பூச்செடிகளையும் மொய்த்தன. தனுஷ்கோடியின் முனையிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலங்கையை நோக்கி வண்ணாத்துப்பூச்சிகள் தங்கள் இறுதிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு, அவை தேன் அருந்துவதற்கான இறுதி நிறுத்தமாக அது இருந்தது.
வண்ணாத்துப்பூச்சி இனங்களில் ஒன்றான கிரிம்சன் ரோஸ் (Crimson Rose) என்பது அதன் இறக்கைகள் மற்றும் உடலில் கருப்பு, வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிறங்களின் கலவையுடன் ஒரு பெரிய வண்ணாத்துப்பூச்சியாகும். இது இந்தியாவிலிருந்து கடல் கடந்து இலங்கைக்கு இடம்பெயர்வதற்கு பெயர் பெற்றது.
இவை தனுஷ்கோடியில் இருந்து சமீபகாலமாக அதிக அளவில் இடம்பெயர்வது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தி நேச்சர் அண்ட் பட்டர்ஃபிளை சொசைட்டி- The Nature and Butterfly Society (TNBS) நிறுவனத்தைச் சேர்ந்த போல்மதி வினோத் (Paulmathi Vinod) மற்றும் வினோத் சதாசிவன் (Vinod Sadasivan) மற்றும் சுயாதீன ஆய்வாளர் எஸ். சந்திரசேகரன் ஆகியோர் இந்நிகழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் நேரில் பார்த்தனர். அவர்களின் கூற்றுப்படி, வண்ணத்துப்பூச்சிகள் ஒவ்வொன்றாக கடற்கரையோரத்தை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஓர் பாதை போல பயன்படுத்திக்கொண்டு தமது பயணத்தைத் தொடர்ந்தன.
இந்த இடம்பெயர்வின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கண்ணைக் கவரும் சிறப்பம்சம் என்னவென்றால், வண்ணத்துப்பூச்சிகள் கடற்கரையில் பூக்கும் தாவரங்களில் அடிக்கடி நிறுத்தி தங்கள் பயணத்திற்கு எரிபொருளாக தேனை சேகரித்துக்கொண்டன என்று அவர்கள் கூறினர்.
கிரிம்சன் ரோஜாக்கள் கடற்கரையில் காணப்படும் ஐபோமியா மலர்களிலும் (Ipomea flowers), அரை இலைப் பூக்களிலும் (Half leaf flowers) தென்பட்டன. அவைகளின் மிகப் பெரிய கூட்டம் கடற்கரை அருகிலுள்ள ஒரே ஒரு தாவரமான ஒரு கலோட்ரோபிஸ் ஜிகாண்டியா (Calotropis gigantea ) தாவரத்தின் மீது இருந்தது. ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியும் சுமார் 30 வினாடிகள் தேன் அருந்திய பின்னர் இலங்கையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தன.
“இந்த சிறிய எரிபொருள் நிறுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் ஆச்சரியப்படுவதை நிறுத்த முடியவில்லை, ஏனெனில் இது ஒரு வெற்றிகரமான கடலைக் கடக்கும் பயணமாக அமையலாம் அல்லது ஒரு நடுக்கடலில் நடக்கும் ஓர் மிகப்பெரும் சோக சம்பவமாக இருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை குறிப்பதாக இருக்கிறது. வண்ணத்துப்பூச்சியின் பயணத்தில் பூர்வீகக் கடற்கரை தாவரங்களின் முக்கியத்துவத்தையும், கடற்கரைகளை அவற்றின் அசல் வடிவில் தொடர்ந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தக் கூட்டம் காட்டுகிறது,” என்கிறார் போல்மதி வினோத்.
TNBS இன் ஏ. பாவேந்தன் கருத்துப்படி, ஸ்வாலோடெயில்ஸ் (பாபிலியோனிடே) – -Swallowtails (Papilionidae) குடும்பத்தைச் சேர்ந்த கிரிம்சன் ரோஸ், அடிக்கடி கடலோரம் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து கடலைக் கடக்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடலை கடக்கும் கிரிம்சன் ரோஜாக்கள், இலங்கையில் இனங்காணப்பட்டு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அவதானிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு நிறுத்தம் உட்பட இடம்பெயர்வின் அளவு தெளிவாகக் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டதாகும். TNBS குழுவும் இதே போன்ற ஒரு நிகழ்வைக் கவனித்தது, ஆனால் கன்னியாகுமரி கடலோரக் பிரதேசங்களின் காணப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகளுடன் ஒப்பிடும்போது அது குறைந்த அளவில் காணப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இவ்இடம்பெயர்வுக்கான மற்றொரு குறிப்பிடத்தக்க காரணி என்னவென்றால், மிக இலகுவாக உடையும் கட்டமைப்பைக் கொண்ட இந்த உயிரினங்கள் இலங்கையிலிருந்து மிக நெருக்கமான அமைத்திருக்கும் இந்திய கடற்கரைகளில் ஒன்றான தனுஷ்கோடியிலிருந்து கடலைக் கடக்கத் தேர்ந்தெடுத்தன என்பதாகும்.
இது தொடர்பாக உயிரியலாளரும் ஆய்வாளருமான எச். பைஜு (H. Byju) கூறுகையில், 2016 ஆம் ஆண்டு முதல் கடல் கரையோரம் மற்றும் மன்னார் வளைகுடா தீவுகளில் இருந்து இலங்கையை நோக்கி கிரிம்சன் ரோஜாக்கள் பறப்பதை அவதானித்துள்ளதாக குறிப்பிடுகிறார். தமிழகத்தில் காணப்படும் சில வண்ணத்துப்பூச்சி இனங்களும் காலநிலை மாற்றம் மற்றும் உணவுத் தேவைக்கு ஏற்றவாறு இடம்பெயர்வதற்கு பெயர் பெற்றவை என்றார்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தொடங்குவதற்கு சற்று முன்பு, நிம்பாலிடேயின் (Nymphalidae) துணைக் குடும்பமான டானைனேயிலிருந்து (Danainae ) புலிகள் மற்றும் காகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளுக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது.
காமன் எமிக்ரண்ட் (Common Emigrant), காமன் அல்பட்ராஸ் (Common Albatross) மற்றும் லைம் பட்டர்ஃபிளை (Lime Butterfly) போன்ற வண்ணத்துப்பூச்சி இனங்களும் பெரிய அளவில் இடம்பெயர்வதாக அறியப்படுகிறது என்று திரு.பாவேந்தன் கூறினார்.
வில்சன் தோமஸ் (Wilson Thomas) என்பவரினால் இந்தியாவின் ஹிந்து (The Hindu) பத்திரிகையில் பெப்ரவரி 16இல் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.