நீண்டகாலம் நிலைத்திருக்ககூடிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை தொடர்ச்சியாக நிர்மாணிப்பதன் மூலம் இலங்கை மின்சார சபையினால் (இ.மி.ச) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சக்தி வலுக்கொள்கையின் பிரகாரம்  திட்டமிட்டவாறு 2050 இல் பூரண இயலளவினை அடைந்து கொள்ள முடியாது என்று தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆண்டுக்கான (2022) அறிக்கை கூறுகின்றது.

கணக்காய்வாளர், தலைமை அதிபதி W.B.C. விக்ரமத்னவின் ஒப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட  2022-2041 குறைந்த கிரயத்திலான நீண்ட கால உற்பத்தித் திட்டத்தின்படி, 2041  ஆம் ஆண்டு வரையிலும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி 50 சதவீதம் மாத்திரமாக இருந்ததுடன் மேலும் இரண்டு அனல் மின் நிலையங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை (2022)

மேலும் நிலைபேறான வலு அதிகாரச் சட்டம் மற்றும் தேசிய வலுக் கொள்கையின் அதிகரங்களுக்கமைவாக மயப்படுத்தப்பட்ட இணைப்பு வழிமுறையொன்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க வலு திட்டங்களை அனுமதிக்கும் சிக்கலான செயற்பாட்டிற்காக செலவிடப்படும் இரண்டு வருடத்திற்கும் கூடுதலான நீண்ட கால எல்லையினை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

நாட்டின் மொத்த வலுச்சக்தி தேவையில் அதிகளவில் மின்சக்தி தங்கியிருப்பதுடன் மொத்த மின் உற்பத்தியில்  63 சதவீதமான எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இதற்காக வருடாந்தம் அதிக அளவு அமெரிக்க டொலர்களை செலவிடுவதை காரணமாக கொண்டு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அந்நியச் செலாவணி பிரச்சனைகளுக்கு அவசர மின்வெட்டுகளுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலாதாரங்களுடன் தொடர்புபட வேண்டியதன் முக்கியத்துவம் தற்போது தெளிவாகின்றது.

2020 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலு (Renewable Energy) உற்பத்தி மொத்த வலு விநியோகத்தின் 37 வீதமாக காணப்படுவதுடன் புதிய புதுப்பிக்கத்தக்க வலு (New Renewable Energy – NRE) உற்பத்தி மொத்த வலு விநியோகத்தின் சுமர்ர் 12 வீதம் மாத்திரமாகும்.

இலங்கையின் புவியியல் ரீதியான அமைவின் அடிப்படையில் அதிகளவிலான காற்று மற்றும் சூரிய வலு வளம் காணப்படுவதுடன் தற்போதைய பயன்பாடானது ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவாகும். புதுப்பிக்கத்தக்க வலு பயன்பாட்டின் மூலம் பச்சைவீட்டு வாய் வெளியேற்றம் குறைத்தல், புவி வெப்பம் அதிகரித்தலை கட்டுப்படுத்தல் மற்றும் போஸில் (fosil) எரிபொருள் இறக்குமதி மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கும் என்று கணக்காய்வு அறிக்கை கூறுகின்றது. 

தற்போதைய அரச கொள்கைக்கமைவாக 2030 ஆம் ஆண்டளவில் மொத்த புதுப்பிக்கத்தக்க வலு உற்பத்தியை 70 வீதமாக அதிகரித்துக்கொல்வதற்கும் எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி நிலையங்களை தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி அடிப்படையிலான விலை முறைமையின் கீழ் தேசிய மின்சக்தி தொகுதிக்கு 2017 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை 1 மெகா வோட் (Mw) அளவிலான 13 திட்டங்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தன. காற்று வலு மின் சக்தி ஆலைகளின் அபிவிருத்தி தொடர்பாக தற்பொழுது 60  மெகா வோட் (Mw) இயலளளவு கொண்டவைகளிடமிருந்து மாத்திரமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சூரிய வலு யுகம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மெகா வோட் (Mw) 269 ஆகிய இயலளளவு மாத்திரம் மத்திய வலையமைப்புக்கு தொடர்புபடுத்தப்படிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. புதுப்பிக்கத்தக்க வலு விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மின்சாரத்திற்கான கொடுப்பனவுகள் தாமதமடைந்ததன் காரணமாக வட்டித்தொகை ஒன்றினை செலுத்த வேண்டி ஏற்படும் நிலையும் காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டமைக்கப்பட்ட கொள்கையின் கீழ் உலக வெப்பநிலை அதிகரிப்பினை 2C இற்கு குறைவாக வைத்துக்கொள்ளும் உலகளாவிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எரிபொருள் மின் நிலையங்களுக்குப் பதிலாக இரட்டை பயன்பாடு கொண்ட வாயு மின் நிலையங்களை (LNG) அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் ஒரு மின் நிலையமேனும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.