ந.லோகதயாளன்
வைத்தியசாலைகளில் ஏற்படும் மருத்துவக் கழிவுகளை சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் விவசாய நிலங்களை அண்டியும் வாழ்விடங்களை அண்டியும் புதைக்கபடுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெறும் சுகாதாரத் துறையினரின் சூழல் மாசுபடுத்தலிற்கு தனியார் வைத்தியசாலைகளைவிடவும் அரச வைத்தியசாலைகளே அதிக பங்காற்றுகின்றனர். இதில் மத்திய, மாகாண வைத்தியசாலைகள் இரண்டுமே இதனையே செய்கின்றனர். இவற்றிற்கு உதாரணமாக 2021 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி அரியாலை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்குள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் டிப்பர் வண்டிகளில் ஏற்றி வந்து புதைத்தமையுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் பங்கு இருப்பதற்கான எழுத்து மூல கடிதம்வரை வெளிவந்தபோதும் எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
இதன்போது போதனா வைத்தியசாலையில் பயன் படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , ஊசிக் கழிவுகள் என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாணத்தில் ஜே.சி.பி்இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு கொண்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் செம்மணியில் விவசாயம் செய்யும் 61 வயதான நாகரத்தினம் திவ்வியநாதன் என்பவர் கருத்து தெரிவிக்கையில் மனிதன் மருந்துகளை குடித்தால் நஞ்சு எனக் கூறும் வைத்தியர்களே இவ்வாறான நஞ்சுகளையும் எந்தக் காலத்திலும் உக்கமுடியாத போத்தல்களையும் நிலத்தில் இட்டு மூடினால் இந்த விவசாய நிலம் எதற்கு உதவும் அதன்பின்பு இந்த நிலத்தில் விளையும் பயிரும் என்ன தன்மையில் வரும் அது எவ்வாறு ஏற்படுகின்றது என இந்த மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யவும் எமது பணம் வீண்டிக்கப்படும் என்றார்.
மத்திய அரசின் நிர்வாகம் இப்படி என்றால் மாகாண சுகாதார அமைச்சும் இதற்கு குறைவில்லை. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தை ஓர் இரவு அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் பாரிய குழி ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் காலாவதியான பல்லாயிரக் கணக்கான மருந்துகள் டப்பாக்களுடன் தீயிட்டு அழிக்க முற்பட்ட போது. படம்: ந.லோகதயாளன்
அதற்கான காரணம் மாகாண சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்தில் பாரிய குழி ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் காலாவதியான பல்லாயிரக் கணக்கான மருந்துகள் டப்பாக்களுடன் தீயிட்டு அழிக்க முற்பட்ட நிலையில் அதில் இருந்த எழுந்த துர் நாற்றம் காரணமாக அயலில் இருந்த மக்களிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏதும் அறியாத மக்கள் சுற்றுச் சூழலை அவதானித்த சமயம் சுகாதார அமைச்சின் வளாகத்தில் இருந்து தீ எழுவது அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து யாழ். மாநகர சபைக்கு அறிவித்த சமயம் சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு உத்தியோகத்தர்களும், மாநகர சபை உறுப்பினர்களும் சென்றதோடு பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சுகாதாரத் திணைக்களத்தில் இருந்தோ அல்லது சுகாதார அமைச்சினதோ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவருமே அந்த இடத்திற்கு வருகை தரவில்லை.
பொறுப்பற்றவகையில் இவ்வாறு செயல்ப்படுபவர்களை நம்பித்தான் இந்த மாகாண சுகாதார நிலமை உள்ளதனை எண்ணி வெட்கப்படுகின்றோம் என மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்திருந்தார்.
இவை இரண்டு சம்பவத்திற்கும் இன்றுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை ஏனெனில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுய அதிகாரிகளிற்கு மேல் நிலை அதிகாரிகளே இக் குற்றங்களிற்கான காரண கத்தாக்களாக இருப்பதனால் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
இதேநேரம் இந்த ஆண்டு யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பரேமேஸ்வராச் சந்தி தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழிவுகளை இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மருத்துவக் கழிவுகளை தேக்கி வைத்து டிசம்பர் 25 ஆம் திகதி பல்கலைக் கழக சூழலில் வெற்றுக் காணியில் கொட்டி தீ வைத்த சமயம் மாநகர சபையால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் 2022-01-03 அன்று பொதுச் சுகாதார அதிகாரி உதயபாலாவினால் யாழ்ப்பாணம் மேலதீக நீதவான் நீதமன்றில் 7 குற்றச் சாட்டின் கீழ் தனியார் வைத்தியசாலைக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதீக நீதவான் நளினி சுபாகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிராளி தரப்பு சட்டத்தரணியாக மாநகர சபை உறுப்பினர் ஒருவரான சட்டத்தரணி மு.றெமீடியஸ் ஆயரானதோடு எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் 7 குற்றங்களிற்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் செலுத்த வேண்டும். குற்றப்பணத்தை செலுத்த தவறினால் 7 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டு இனிமேல் இவ்வாறு எரியூட்டக் கூடாது எனவும் கடும் எச்சரிக்கையுடன் விடுக்கப்பட்டார்.
இவ்வாறு பதிவிற்கு அல்லது பிடிக்கப்பட்ட சம்பவங்கள் மட்டுமே வெளித் தெரியவருகின்றபோதும் வெளியே தெரிய வராமல் பல அரச தனியார் வைத்தியசாலைகள் இதனையே மேற்கொள்கின்றன.
இவ்வாறு மாநகர சபை பிரதேசத்திற்குள் பாரிய சுற்றுச் சூழல் பாதிப்பினை வைத்தியசாலைகள் மேற்கொள்வதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பாலமுரளியை தொடர்புகொண்டு கேட்டபோது,
தனியார் வைத்தியசாலைக்கு எதிராக நேரடியாக வழக்குத் தாக்கல் செய்தோம் மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கும் உடனடியாக சுற்றுச் சூழலிற்கு பொறுப்பான பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் எனப் பதிலளித்தார்.
இதேநேரம் அரச தனியார் வைத்தியசாலைகளில் ஏற்படும் மருத்துவக் கழிவுகளை அகற்ற என்ன நடமுறை அவற்றை எவ்வாறு அகற்றுகின்றனர் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதாரத் திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விபரம் கோரியபோது அரச வைத்தியசாலைகள் தெல்லிப்பளை வைத்தியசாலையின் எரியூட்டியிலும் தனியார் வைத்மியசாலைகள் வருடாந்தம் அனுமதியை புதுப்பிக்கும்போது தனியார் நிறுவனம் ஊடாக அவற்றை அகற்றுவதாக கழிவு அகற்றல் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதங்களை வைத்தே அனுமதியை பெறுகின்றனர். இதேநேரம் தனியார் வைத்தியசாலைகள் பணம் செலுத்தி அழிக்கின்றனர். குடாநாட்டில் எந்த வைத்தியசாலை எவ்வளவு பணம் செலுத்தி ஒரு ஆண்டு மருத்துவ கழிவு அகற்றியுள்ளனர் என்ற பட்டியலையும் சமர்ப்பித்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 2019ஆம் ஆண்டு குடாநாட்டில் இயங்கும் 23 வைத்தியசாலைகளும. பருத்தித்துறையில் அரச வைத்தியசாலையில் நிதி செலுத்தி எரியூட்டியபோதும் 2020ஆம் ஆண்டு எரிக்கவில்லை என பருத்தித்துறை வைத்தியசாலையின. பதில் பணிப்பாளர் வி.கமலநாதன் அறிக்கையிட்டுள்ளார் இருந்தபோதும் 2020ஆம் ஆண்டு யாழ் நகரில் இயங்கும் மதர் கெயார் வைத்தியசாலை பணம் செலுத்தி யாழ்ப்பாணம் மாநகர சபையின் கோம்பையன்மணல் மயாணத்தில் உள்ள மின் தகன மேடையில் மருத்துவ கழிவுகளை எரியூட்டியுள்ளனர். ஏனைய வைத்தியசாலைகள் தொடர்பில் பதிவுகள் இல்லை.
இந்த நிலமையில் கழிவு அகற்றலை முகாமை செய்த தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் எச்எஸ்எம் பிரிவு அரச வைத்தியசாலைகளில் மருத்துவக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவக் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவ செயற்திட்டத்தின் செயலாற்றலை மதிப்பீடு செய்து HSM-E-MH-5-2019-26 இலக்க கணக்காய்வு அறிக்கையிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டும் நாளாந்தம் மருத்துவக் கழிவு மற்றும் கூரான கழிவுகளாக நாளாந்தம் 750 கிலோ தேங்குவதாக குறிப்பிடுகின்றது. இதனை அகற்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 171,802 லீற்றர் டீசல் செலவிட்டதாகவும் இதற்கு ஒரு கோடியே 77 லட்சத்து 37 ஆயிரத்து 725 ரூபா செலவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் 2019ஆம் ஆண்டில் யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள எரியூட்டி இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்டத்தின் சுற்றுச் சூழல் பல வரிகளிலும் அழிவடையும் நிலமையில் சுகாதாரத்துறையின் பெயரிலும் சுற்றுச் சூழல் பெரிதும் அழிக்கப்படுகின்றதா என இதன்மூலம் ஐயப்பட வைக்கின்றது.
இதேநேரம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து காங்கேசன்துறை சீமேந்து ஆலைக்கு முன்னர் கல் அகழப்பட்ட குழுகளில் கொட்டப்படும் வைத்தியசாலைக் கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகளும் காணப்படுகின்றன. இந்த கழிவுகளில் இருந்து பொலித்தீன் உள்ளிட்ட உக்காத கழிவுகளுடன் கால்நடைகள் உணவாகவும்கொள்ளும் அவலமும் இடம்பெறுகின்றது.
இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் ஓர் எரியூட்டி அமைக்க திட்டமிடப்பட்டு மன்டைதீவில் மக்கள் வாழ்விடம் குறைவான பகுதியெனத் தேர்வு செய்து மக்கள் அபிப்பிராயத்திற்குச் சென்றபோது மாவட்டத்தின் நகரம் 3 கிலோ மீற்றரில் உள்ளது நகரம் மேலும் வளர்ச்சியடைய இப்பகுதியும் நகரமாக வேண்டும் என்பதே எமது விருப்பம் மாறாக நகரத்தில் தேங்கும் குப்பையை அகற்ற எமது பகுதியை நாடாதீர்கள் என உறுதியாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் சுகாதாரத் திணைக்களத்தினர் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் ஓர் இடத்தைக் கோரிநிற்கின்றனர்.
Comments are closed for this post.