சிறுத்தை – மனித முரண்பாடும் தொழில் பாதுகாப்பும்

க.பிரசன்னா

‘தினந்தோறும் இரவு சிறுத்தைகள் குடியிருப்புகளுக்கு வருகின்றது. அவ்வேளையில் நாங்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்கின்றன. மலைகளுக்கு தொழிலுக்கு செல்லும் போது எப்போதுமே எங்களுக்கு ஆபத்து இருக்கின்றது. வேலைத்தளங்கள் காடுகளாக மாறிவருவதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாங்கள் இதுவரை சிறுத்தை தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்றாலும், எப்போதுமே அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றோம். எங்களை சிறுத்தை தாக்கும் வரை தோட்ட நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. சிறுத்தை தாக்குதலில் இருந்து எங்களை பாதுகாத்து கொள்வதற்கு யாரிடம் முறையிடுவது என்பதுகூட தெரியது’ என பத்தனை கிரேக்லி பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான திருமதி வள்ளியம்மா தெரிரித்தார்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் மறுபுறும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் இடங்களில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் அட்டைக்கடி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு தோட்ட நிர்வாகமோ, அரசாங்கமோ எவ்வித நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. தினந்தோறும் அச்சத்துடனேயே தங்களது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக காலம் காலமாக பேசப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தொழில் சுமையானது அதிகரித்துவிட்டது என்பதைவிடவும் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு குறைந்து விட்டது என்பதையே கவனத்தில் கொள்ள முடிகின்றது. காடு, மலையேறி பல்வேறு தமது உழைப்பை கொடுப்பதுடன் மழை, பனி என பல்வேறு இயற்கை சூழலில் தொழில் புரிந்து வருகின்றனர். ஆனால் ஒருபோதும் இவர்கள் தமது தொழில் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொண்டு செயற்படவில்லை. அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு தொடர்பிலும் யாரும் விளக்கமளிக்கவும் இல்லை.

2018 ஆம் ஆண்டு ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் மதியம் சிறுத்தையொன்று தொழிலாளர்களை தாக்கியிருந்தது. இதில் ஏழுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சிறுத்தையினை பிடித்திருக்கவில்லை. இதுவே பெருந்தோட்டத் தொழிலானர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட சிறுத்தை தாக்குதலாக அமைந்திருந்தது. இதேபோலவே குளவிக்கொட்டுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி இலக்காகி வருகின்றனர். ஆனால் மலையகத்தில் இவ்வாறான தாக்குதல்களை தோட்ட நிர்வாகங்களோ வன ஜீவராசிகள் திணைக்களமோ கண்டுகொள்வதில்லை. மக்களை இடம்பெயர வைக்கவும் தேயிலை மலைகளை காடுகளாக்கவும் இவ்வாறான உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தொழிலாளர்களே அதிகம் ஆபத்தினை எதிர்கொள்கின்றனர்.

சிறுத்தைகளை பாதுகாப்பதற்காகவும் மனித – சிறுத்தை முரண்பாடுகளை தீர்க்கவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டாலும் சிறுத்தைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் தாக்குதல் வேளைகளை திட்டமிட முடியாமையினால் பெருந்தோட்ட மக்கள் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகும் நிலையினை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெருந்தோட்டங்களில் சிறுத்தை தாக்குதல் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக இலங்கையில் சிறுத்தைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவதற்கான ஆவணங்கள் பேணப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்தளவான சிறுத்தை – மனித முரண்பாடுகளினால் அதிகமான சிறுத்தை மரணங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அதிகமான சிறுத்தைகள் மனித நடவடிக்கைகள் மூலம் இறப்பதாகவும் மனித முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறுத்தைகளின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான ஆவணங்கள் திணைக்களத்தினால் பேணப்படவில்லை.  வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல்களின்படி, 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊவா, மத்திய, கிளிநொச்சி, அநுராதபுரம், கல்லோயா,  திருகோணமலை, தெற்கு, மேற்கு, கிழக்கு வலயங்களில் 61 சிறுத்தைகள் உயிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 2015 ஆம் ஆண்டு நான்கு சிறுத்தைகளும் 2016 ஆம் ஆண்டு 12 சிறுத்தைகளும் 2018 ஆம் ஆண்டு 12 சிறுத்தைகளும் 2019 ஆம் ஆண்டு 10 சிறுத்தைகளும் 2020 ஆம் ஆண்டு 14 சிறுத்தைகளும் 2021 ஆம் ஆண்டு ஒன்பது சிறுத்தைகளும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் 2017 ஆம் ஆண்டு எவ்வித சிறுத்தைகளும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடங்கள் பெரும்பாலானவை அவர்களுக்கு ஆபத்தானவையாகவே இருக்கின்றன. இதேவேளை ஊடகத் தகவல்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2015 – 2021 (ஜூலை) வரையான காலப்பகுதியில் ஹட்டன், பொகவந்தலாவ, கொட்டகலை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, நோர்வூட், சாமிமலை பகுதிகளில் இடம்பெற்ற சிறுத்தை தாக்குதல்களில் 24 பேர் காயமடைந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாவர். அத்தோடு கொல்லப்பட்ட அல்லது இறந்த நிலையில் 23 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருடன் 11 சிறுத்தைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. எனவே இவை தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளாக இருக்கின்ற நிலையில் இவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதில் யாரும் இதுவரையும் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளர்கள் சிறுத்தைகளால் தாக்கப்படுவதும் காயமடைவதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதும் வீடு திரும்புவதும் மீண்டும் அதே தொழிலுக்கு செல்வதும் வாடிக்கையான விடயமாக இருக்கின்றது.

இறந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைகளின் உடல்கள் நஞ்சூட்டப்பட்ட நிலையிலும் பொறிகளில் சிக்கிய நிலையிலும் ஏனைய பல்வேறு காரணங்களினாலும் இறந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சிறுத்தை தாக்குதலினால் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் தொழில் செய்யும் இடங்களிலேயே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது சிறுத்தை நடமாடும் பகுதிகள் சுமார் 200 வருடங்களாக தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடங்களாக காணப்படுகின்றன. விவசாய நிலையங்களை விஸ்தரிக்கும் வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் நிலங்களை விஸதரிக்க முடியாது. எனவே சிறுத்தைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் நிலை இங்கு காணப்படவில்லை.

எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. சிறுத்தை தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதும் தெரியவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயத்தை விடவும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கே சிறுத்தைகள் வருகை தருகின்றன. யானை – மனித முரண்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வேலிகள் மற்றும் யானை வெடிகள் போன்றன பயன்படுத்துவது போல சிறுத்தைகள் மனித வாழ்விடங்களை ஆக்கிரமிக்காமல் தடுப்பதற்கு மேற்கூறிய விடயங்களை பயன்படுத்த முடியாது. யானைகளை இலகுவில் அடையாளம் காண்பது போல சிறுத்தைகளை இலகுவில் அடையாளம் காணமுடியாது. அவற்றின் வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த முடியாது. இலங்கையில் சிறுத்தைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக அடையாளம் காணப்பட்டாலும் அவற்றின் தாக்குதலில் இருந்து மனிதர்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதலாவது சிறுத்தை மரணம் கண்டி, நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிட்போட் பகுதியில் வெள்ளியன்று ( 25) பதிவாகியுள்ளது. முற்பகல் தொழிலுக்கு சென்றவர்களால் சிறுத்தையின் சடலமொன்று இருப்பதாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டபின்பு, தனியார் தோட்டப்பகுதியிலிருந்து இறந்த நிலையில் சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க  ஓர் ஆண் சிறுத்தையின் சடலம்  மீட்கப்பட்டது.

சிறுத்தையின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ரந்தனிகலவிலுள்ள வனவிலங்கு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

மத்திய மாகாணத்தின் ஹோர்ட்டன் சமவெளிகளில் (Horton Plains) காணப்படும் சிறுத்தைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட கலாநிதி இனோகா குடாவிதானகே, மனிதன்- சிறுத்தை மோதல் இன்று நேற்று உருவானதன்று, அது மனிதன் மலைக்காடுகளை அழித்து, தோட்டங்களையும், பண்ணைகளையும் உருவாக்கியதிலிருந்து தொடர்ந்து வருவதாக குறிப்பிடுகின்றார்.

சூழலியல் மற்றும் பாதுகாப்பு உயிரியலில் மூத்த விரிவுரையாளராக சப்ரகமுக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கலாநிதி குடாவிதானகே, அண்மைக்காலங்களில் மழைக்காடுகள் மற்றும் அவை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்ட கணிசமான மாற்றம் மற்றும் அழிப்பு காரணமாக சிறுத்தைகள் இரை தேடி குடியிருப்புக்கள் மற்றும் தோட்டப்பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளதாக கூறினார்.

அண்மைக்காலங்களில் பெரும்பாலான சிறுத்தை மரணங்கள் காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்படும் கண்ணிகளில் மற்றும் பொறிகளில் சிக்கியே நிகழ்ந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: ” சிறுத்தைகள் என்னும்போது மக்கள் மனதில் உள்ள பொதுவான விம்பம் ஆபத்து என்பதுதான். கடந்த காலங்களில் இடம்பெற்ற சிறுத்தை உயிரிழப்புக்களை பொறுத்தவரையில் அநேகமானவை பொறியிலோ அல்லது நஞ்சு வைத்து கொல்லப்பட்டுள்ளன. அவற்றினை உடல் ரீதியாகக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே பரவலாக உள்ளது,”

“இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கான ஒரே வழி, மனிதன் -சிறுத்தை ஒருங்கிணைந்து வாழ்வதற்கான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதுதான். மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றார்.

அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 23 இல் ஒவ்வொருவரும் வேலை செய்யும் உரிமை, சுதந்திரமாக வேலை தேர்ந்தெடுக்கும் உரிமை, வேலையின்மையிலிருந்தான பாதுகாப்பு, நியாயமான சாதகமான தன்மையிலிருந்தான வேலை உரிமையை கொண்டுள்ளனர். உறுப்புரை 25 (2) இல், தாய், குழந்தை, விசேடமான பாதுகாப்பு உதவியையும் தொழில் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள உரிமையுடையோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 07 ‘நியாயமான சம்பளத்துடனான ஆகக்குறைந்த சம்பளம், கௌரவமான வாழ்க்கைத் தராதரம், பாதுகாப்பான, சுகாதாரமான வேலைச் சூழல், தொழில் மேம்பாட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மட்டுப்படுத்தப்படும் வேலை நேரம், ஓய்வு கொடுப்பனவுடனான விடுமுறை என்பவற்றை ஒவ்வொருவரும் அனுபவிக்க உறுதிசெய்தல் வேண்டும்’ என கூறுகிறது. ஆனாலும் அவை வெறுமனே சட்ட ஏற்பாடுகளாகவே காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை அரச நிறுவனங்களுக்கே உண்டு.

பெருந்தோட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளமைக்கு பயிர்ச்செய்கை நிலங்கள் கைவிடப்பட்டுள்ளமையும் காடுகளாக்கப்பட்டுள்ளமையும் பிரதான காரணங்களாக இருக்கின்றன. பயிர்செய்கை நிலங்களை முகாமைத்துவம் செய்வதற்கோ, மீள்நடுகைக்கு உற்படுத்துவதற்கோ எவ்வித நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்படுவதில்லை. பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் எவ்விதமான இன்னல்களுக்கும் அரசாங்கம் பொறுப்பு கூறும் நிலையிலிருந்து விலகியுள்ள நிலையில் தோட்ட நிர்வாகமும் அவற்றை செயற்படத்துவதில்லை. சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள பகுதிகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை மனி வாழ்விடங்களுக்கு நுழையாது தடுக்கும் வேலைத்திட்டங்களை வனஜீவராசிகள் திணைக்களமே மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான வேலைத்திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை. தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்படுவதில்லை.

நாட்டில் யானை – மனித முரண்பாடுகள் எந்தளவுக்கு பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றதோ அந்தளவுக்கு சிறுத்தை – மனித முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் தடுக்கப்படாமையினால் பொறிகள் மற்றும் நஞ்சூட்டல் என்பவற்றின் மூலம் சிறுத்தைகளும் கொல்லப்படுகின்றன. எனவே இழப்புகள் இருபக்கமும் பொதுவானதாக இருக்கும் நிலையில் அவற்றை தடுத்து சிறுத்தைகளின் நடமாட்டங்களை குறைப்பதற்கும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.