• யால தேசிய பூங்காவை பகல் நேரத்தில் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்குப் பதிலாக ஒரு மணித்தியாலமாகக் குறைக்கத் தீர்மானம்
  • சிறுத்தைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் விசேட நிலையத்தைப் பொலன்னறுவையில் அமைப்பதற்கு நடவடிக்கை
  • பொதுமக்களின் பாரம்பரிய காணிகளை கையகப்படுத்துவதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை

தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவாது வாசிப்புக்காக முன்வைக்க வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி நேற்றுமுன்தினம் (22) இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்னாயக மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக ஆகியோரின் தலைமையில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடியது. இதற்கமைய இந்தச் சட்டமூலம் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஆபத்துக்கு உட்படக்கூடிய காட்டு விலங்குகளின் சர்வதேச வியாபாரத்தின் மீதான சமவாயத்துக்கு (CITES) பயன்கொடுப்பதற்கு ஒழுங்குவிதிகளைத் தயாரிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம்  வழங்கப்படும். ஜீ.எஸ்.பி சலுகையைப் பெற்றுக்கொள்ளும்போது கவனத்தில் கொள்ளப்படும் இந்தத் திருத்தம் 15 வருடகாலமாகக் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இறுதியாக இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு சுற்றாடலுக்கு நட்பான சுற்றுலாத் துறையை (Eco tourism) அபிவிருத்தி செய்வது, சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இலங்கை சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.இதன்படி பொலன்னறுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் சிறுத்தைகள் ஆய்வுநிலையமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல வருடங்களாக சேவையாற்றி இதுவரை நியமிக்கப்படாத தொண்டர் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

யால தேசிய பூங்கா பகலில் இரண்டு மணித்தியாலங்கள் மூடப்படுவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் கவனம் செலுத்திய இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, தேசிய பூங்காவை பகல் வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் மூடவதை ஒரு மணித்தியாலமாகக் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகபட்ச நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், காணிகளை சுவீகரிக்கும்போது மக்கள் வாழும் பாரம்பரிய காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். அதேநேரம், யானை மனித மோதல்கள், யானைகளுக்கு வேலைகளை அமைத்தல், சரணாலயங்களில் காணப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இந்த நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கபில அத்துகோரள, சாமர சம்பத் தசநாயக, குமாரசிறி ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.