- MT New Diamond கப்பல் விபத்தினால் இதுவரை பெறப்படாத 3480 மில்லியன் ரூபாவை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு அறிவுறுத்தல்
- அதிகாரசபையின் சட்டப் பிரிவிலுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சின் செயலாளருக்குப் பரிந்துரை
- 2012 இல் மூழ்கிய “Thermophile” கப்பல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் 10 ஆண்டு கால தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரிந்துரை
நாட்டின் கடல்சார் சூழலை பாதுகாக்கும் பிரதான பொறுப்பை கொண்டுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டரீதியான அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் மறுசீரமைப்பை விரைவு படுத்துமாறு அண்மையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபையின் அலுவலர்கள் தெரிவித்ததுடன் இந்த சட்டத் திருத்தம் மிக அவசியமானது எனவும், தாமதமின்றி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எல்.எல்.ஏ. விஜேசிறி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு ஆலோசனை வழங்கியது. சட்ட விவகாரங்களில் ஈடுபடும் நிறுவனமாக அதன் சட்ட முகாமையாளர் உட்பட சட்டப் பிரிவின் வகிபாகம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய குழு உள்ளக சிக்கல்கள் காணப்படுமாயின் அவற்றை தீர்த்துக்கொண்டு விரைவாக செயற்படுமாறு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுரவுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
2020 செப்டம்பர் மாதம் ஈசான மூலை கடல் பகுதியில் விபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் தொடர்பில் அறவிடப்பட வேண்டிய நிதி தொடர்பில் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சட்டத்தின் 26 மற்றும் 38 பிரிவுகளுக்கு அமைய 12 மில்லியன் ரூபா நிதி அறவிடப்பட்டிருப்பதாக இதன்போது புலப்பட்டது. எனினும் சட்டத்தின் 24 ஆவது பிரிவின் கீழ் மதிப்பிடப்பட்ட தொகை 2480 மில்லியன் ரூபவாக இருந்தாலும், அந்த தொகை இதுவரை கிடைப்பெறவில்லை எனவும், கப்பலின் தீயை அணைப்பதற்கும் எண்ணெய் கசிவை தடுப்பதற்கும் மாத்திரம் 51.3 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளமை இதன்போது புலப்பட்டது.
இந்த 3480 மில்லியன் ரூபா மதிப்பீட்டுத்தொகை சிவில் பொறுப்புக்கூறலின் கீழ் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மீளமைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றின் ஊடாக பெறப்பட்ட மதிப்பீடு எனவும் அது தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து இந்தக் காலதாமதத்தை தடுத்து நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நிதியை துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை இதன்போது குழு வலியுறுத்தியது.
இந்த செயற்பாடுகளில் அதிகார சபையின் சட்ட முகாமையாளரின் ஈடுபாடு இதனைவிட அதிகமாக இருக்கவேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. MT New Diamond கப்பல் விபத்து தொடர்பான கோவை சட்ட முகாமையாளருக்கு வழங்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். அது தொடர்பில் சட்ட முகாமையாளரிடம் குழு வினவிய போது, அவ்வாறு நடந்தாக கூறுவதை மறுப்பதாகவும், அவருக்கு இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் குறைவாகும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான உள்ளக சிக்கல்கள் அதிகார சபையின் முன்னேற்றத்திற்கு பாரிய தடையாக உள்ளதால் இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
2021 மே மாதம் கொழுப்பு துறைமுகத்துக்கு தொலைவில் இடம்பெற்ற MV X-Press Pearl கப்பல் விபத்துடன் தொடர்புபட்ட இழப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சட்டத்தின் சிவில் பொறுப்புக்கூறலின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியைவிட பாரியளவு தொகை குறைவாக கிடைத்துள்ளமை தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது. சட்டத்தின் சிவில் பொறுப்புக்கூறலின் கீழ் 44 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் அந்த தொகையில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாத்திரமே தற்பொழுது கிடைக்கப்பெறுகின்றமை தொடர்பில் குழு நீண்ட நேரம் வினவியதுடன், நாட்டுக்கு கிடைக்கேவேண்டிய அதிகபட்ச இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ள கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதேபோன்று, துப்புரவு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட 823 மில்லியன் ரூபாவில் 18 மில்லியன் ரூபா தங்குமிடத்துக்காக செலவிடப்பட்டமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அந்த செலவினங்கள் தொடர்பில் முறையாக கணக்காய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது. அதேபோன்று, குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து அறவிடப்படவேண்டிய பணத்தை குறிப்பிட்ட கால எல்லையொன்றுக்குள் விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு அறிவுறுத்தியது. மேலும், அமைச்சும் இது தொடர்பில் திட்டமொன்றை தயாரித்து இதன் முன்னேற்றத்தை மாதாந்த அறிக்கை ஒன்றின் மூலம் பணிப்பாளர் சபைக்கு அறிவிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
2012 இல் மூழ்கிய “Thermophile” கப்பல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் 10 ஆண்டு கால தாமதம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. தேவையான அனைத்து தகவல்களும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க உடனடியாக தலையிட்டு திட்டமொன்றை தயாரித்து கோப் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
கொழுப்பு மாவட்டத்தில் மோதரை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் கடலுக்கு பாரியளவில் கழிவுகள் அகற்றப்படுவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் கண்டறிந்து 3 மாதங்களில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
அதிகார சபையின் பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் நிர்வாக பணிப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் பதில் பதவியாக இருப்பது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் வினவினார். இது சாதகமான சூழ்நிலையாக இல்லாததால் தேவையான நேர்முகப் பரீட்சைகளை நடத்தி ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுமாறு கோப் தலைவர் ஆலோசனை வழங்கினார். அதேபோன்று, நிர்வாக மற்றும் நிதி முகாமைத்துவப் பிரிவுகள் இரண்டும் ஒருவரின் கீழ் இருப்பது சிக்கலுக்குரியது என்பதால் மீண்டும் இந்தப் பதவிகள் அனைத்திற்கும் முறையான திட்டத்தைத் தயாரிக்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுமாறும் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு கோப் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதிகாரசபையின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் இரண்டு கூட்டங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்ட கோப் குழு, எதிர்காலத்தில் உரிய முறையில் இந்தக் கூட்டங்களை நடத்தி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முக்கியத்துவம் தொடர்பில் வலியுறுத்தியது.
இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, நாளக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே, மற்றும் எஸ். இராசமாணிக்கம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Comments are closed for this post.