சம்பூரில் 100 MW சூரிய மின்சக்தி ஆலை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் (NTPC) மற்றும் இலங்கை மின்சார சபை இடையிலான கூட்டு முயற்சியான திருகோணமலை பவர் கம்பனி லிமிட்டட் (Trincomalee Power Company Limited – TPCL) நிறுவனத்துக்கான கூட்டுமுயற்சி பங்குதாரர் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.

நிதி அமைச்சில் நடைபெற்ற இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வானது,  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  கோபால் பாக்லே, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  டி.வீ.சானக, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர்  துமிந்த திசாநாயக்க ஆகியோரது பிரசன்னத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

NTPC சர்வதேச வர்த்தக அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி நரிந்தர் மோகன் குப்தா, இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினான்டோ, TPCL தலைவரும் இலங்கை மின்சார சபையின் உப தலைவருமான என்.எஸ்.இலங்ககோன் உள்ளிட்டோர் இந்த முத்தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.   

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த வருடம் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தபோது, பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகளவான வேலை வாய்ப்புகளுக்கு பங்களிப்பினை வழங்கும் பல்வேறு துறைகளில், இலங்கையில் இந்திய முதலீட்டினை மேம்படுத்துவதற்கு இருதரப்பினர் இடையிலும் இணக்கம் காணப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த அடிப்படையில் சம்பூரில் அமைக்கப்படவிருக்கும் சூரிய மின்சக்தி ஆலை திட்டமானது முக்கிய படியாக அமைகின்றது.  இலங்கையின் முன்னுரிமை அடிப்படையிலான தேவைகளுக்கு பரந்தளவிலும் பரஸ்பர நலன்களின் அடிப்படையிலும் பதிலளிக்கும் இந்தியாவின் இயலுமையானது குறித்த கூட்டுமுயற்சி பங்குதாரர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் பிரதிபலிக்கின்றது.

இத்திட்டத்தினை துரிதமாகவும் வினைத்திறன் மிக்க வகையிலும் நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான ஊக்கத்தையும் வசதிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தியின் வகிபாகத்தை விரிவாக்கவும் தூய்மையான, பசுமையான, மற்றும் காலநிலைக்கான நெகிழ்வுத் தன்மையுடைய சமூகங்களை கட்டியெழுப்புவதற்கான ஆதரவை வழங்குவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டணி,  காலநிலை இசைவாக்கத்திற்கான அனர்த்த நெகிழ்திறன் உட்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற நிறுவக ரீதியான தீர்வுகளை இந்தியா சர்வதேச அளவில் முன்வைத்துள்ளது.

இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியினை அமுல்படுத்துவதன் மூலமாக இவ்விடயத்தில் இலங்கையுடனான எமது ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என இந்தியா எதிர்பார்க்கின்றது.

அதேபோல எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியத்தை உடைய புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில்  இருதரப்பு  தனியார் துறையினர் மத்தியில் கணிசமான ஆர்வம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.