அமேசான் மழைக்காடுகள் அழிவின் விழிம்பை நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியே போனால், ஒட்டுமொத்த மரங்களும் அழிந்துபோய்விடும் என்கிறது ஓர் ஆய்வு.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகள், தற்போது வறட்சி, காட்டுத்தீ, காடழிப்பு ஆகியவற்றால் உருவாகும் சேதங்களிலிருந்து மீண்டு வருவதற்கான திறனை இழந்து வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அரிதாகவே காடுகள் கொண்ட சவான்னாவைப் போல, அமேசானின் பெரும்பகுதி நிலம் மாறக்கூடும். சவான்னா காடுகள் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சுவதில் வெப்பமண்டலக் காடுகளை விட குறைவான திறன் கொண்டவை.

அமேசான் போன்ற பெருங்காடுகள் கார்பனைத் தக்க வைக்கின்றன. அல்லாமல் போனால், அவை புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும். ஆனால், தற்போது அமேசான் காடுகள், அவை உறிஞ்சுவதை விட அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“மரங்கள் தங்கள் ஆரோக்கியத்தை இழந்து அழியும் நிலையை எட்ட வாய்ப்புண்டு. அதாவது, பெருமளவில் மரங்களின் இழப்பு இருக்கும்” என்கிறார் எக்செட்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் க்ரிஸ் போல்டன்.

கடந்த 3 தசாப்தங்களாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களின்படி, தற்போது, அமேசான் காடுகளின் ஆரோக்கியம் அபாயத்தில் இருக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

அதாவது, 75%க்கும் மேலான காட்டுப்பகுதி, தன் மீளும் திறனை இழப்பதற்கான அறிகுறிகளும் இதில் உள்ளன. இதன் விளைவாக, காலநிலை மாற்றம், காடழிப்பு, காட்டுத்தீ, வறட்சி உள்ளிட்டவற்றால் ஏற்படும் சேதங்களிலிருந்து மரங்கள் மீண்டு வருவதற்கான கால அளவு அதிகரிக்கும்.

“இந்தச் சுழற்சி தொடரும்பட்சத்தில் இது மரங்களின் `அழிவு நிலையின் தொடக்கத்தை` நோக்கித் தூண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் செயல்முறை (அழிவு) தொடங்கிவிட்டால், அமேசானின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி சவான்னாவாக மாறுவதற்கு இத்தனை தசாப்தங்கள் எடுக்கலாம் என்று ஆய்வாளர்களால் கணிக்கமுடியும். சவான்னா என்பது புல்வெளி மற்றும் மரங்கள் என கலவையாக இருக்கும் இயற்கை அமைப்பின் பெயர்.

அமேசான் காடுகள் தேக்கி வைத்துள்ள பெருமளவு கார்பன் வெளியிடப்பட்டு அது வளிமண்டலத்தில் கலந்தால் வெப்பநிலை அதிகரிக்கும். இது, எதிர்காலத்தில் புவி வெப்பமயமாதலின் அதிகரிப்புக்குக் காரணமாகலாம். காடழிப்பை நிறுத்துவது என்பது இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்கான ஒரு தீர்வாகவும் அமையும் என்கிறார் போல்டன்.

கூடுதலாக, “தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு மழைக்காடு ஏற்கனவே தொலைந்துவிட்டது” என்றும் தெரிவித்தார்.

எக்ஸெடர் பல்கலைக்கழகம், காலநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனம் (PIK) மற்றும் ம்யூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

காடழிப்பும் கால நிலை மாற்றமும்தான் இந்த சரிவுக்கு முக்கிய பங்காற்றுகின்றன என்கிறார் போட்ஸ்டாம் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்லஸ் போர்ஸ்.

இந்த வரிசையில், “இந்த முடிவுகள் எல்லாம் காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமண்டலக் காடுகளில் மனிதர்களின் சுரண்டல் ஆகிய இரண்டு அழுத்தங்களும் உலகின் மிகப்பெரிய மழைக்காட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களுக்கு ஒத்துப்போகும் விதமாக அமைந்துள்ளன” என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவான கிரந்தம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் போனி வாரிங்.

1991ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான செயற்கைக்கோள் தரவுகளின்படி வெளியான இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் சூழலியல் பருவ இதழில் வெளியானது. (நன்றி- பிபிசி தமிழ்)