சராசரியாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271
கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய பாராளுமன்றக்குழு அறிக்கை
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை(24) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மைக்காலமாக தினம் தோறும் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அண்மைக்காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. அத்துடன் யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவதாக இலங்கை காணப்படுகிறது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. படம்: பாறுக் ஷிஹான்
இம்மோதலை கட்டுப்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான முறையாக அடையாளம் காணப்பட்ட யானைகளுக்கு வேலி அமைக்கும் முறையின் கீழ் 2016 ஆம் ஆண்டுவரை 4211 கிலோ மீற்றர் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தபோதும் குறுகிய காலத்தில் அவற்றை முறையாக பராமரிக்கத் தவறியது கடுமையான பிரச்சினையாக உள்ளதை அறிந்து அவற்றை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில், யானை – மனித மோதல் தொடர்பில் பல வருடகால ஆராய்ச்சி ரீதியிலான அனுபவம் கொண்ட கலாநிதி பிரித்விராஜ் பெர்னாந்து குறிப்பிட்டார்.
இலங்கையில் யானை – மனித மோதல் காரணமாக சராசரியாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அத்துடன், யானை – மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 85ஆகக் காணப்பட்டதுடன், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பது பற்றிய தகவலும் இங்கு வெளியானது.
இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
இதற்கான சிறப்பான வினைத்திறனான வேலைத்திட்டத்தின் அவசியத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் . இந்த யானை – மனித மோதலைத் தீர்க்க 60 ஆண்டுகளாக முயற்சித்த போதிலும், எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் புதிய முறையில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் போது யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான முதல் படியாக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் விரைவில் இணைத்து ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அவர் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதனைவிட வினைத்திறனான வேலைத்திட்டத்துடன் செயற்படுவதன் அவசியத்தை குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த யானை – மனித மோதலைத் தீர்க்க 60 ஆண்டுகளாக முயற்சித்த போதிலும், எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் புதிய முறையில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான முதல் படியாக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் விரைவில் இணைத்து ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு கோபா குழு, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது.
யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகளை அமைக்கும்போது தமது காணிகளின் எல்லைகள் இழக்கப்படும் என சில பகுதிகளில் மக்கள் காண்பிக்கும் எதிர்ப்புக்களால் அவற்றை அதிகரிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பட்டிருப்பது குறித்தும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.இவ்வாறான விடயங்களை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் பொதுமக்களுக்கு உண்மையை விளக்கிக் கூறி சுமுகமான முறையில் இதனைத் தீர்க்க முன்வர வேண்டும் .
தற்போது யானைகளுக்குத் தடுப்பு வேலிகள் அமைப்பது மற்றும் அவற்றின் பராமரிப்பு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளபோதும் இது தொடர்பில் உரிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொள்ளப்படாமை பாரிய குறைபாடுகள் உள்ளதாக இது தொடர்பில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .
மேலும் யானை – மனித மோதல் காணப்படும் பகுதிகளில் உள்ள கிராமிய குழுக்களை மீள புனரமைப்பதன்ஊடாக இவ்வாறான மோதல்களை தவிர்ப்பதுடன் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மக்களுடன் நட்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் யானை மனித மோதலை தவிர்ப்பதற்கு பெரிதும் உதவும்.
அடுத்து யானைகளை காயப்படுத்துவதற்கும் கொலை செய்வதற்கும் காரணமானவர்களைத் தண்டிப்பதற்கும் இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குவதும் அவசியமானதாகும்.
மேலும் கடந்தாண்டும் இவ்வாண்டும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குள் 1000 த்துக்கும் அதிகமான தடவைகள் யானைகள் ஊடுருவியுள்ளன. அதில் 100க்கணக்கான முறை மிக ஆபத்தான சூழலில் யானைகள் மீண்டும் காடுகளுக்குள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் விரட்டப்பட்டுள்ளன. அம்பாறை பகுதியில் மட்டும் 50 தடவைகளுக்கு மேல் இவ்வாண்டு யானைகளின் ஊடுருவலால் வீட்டுத்தோட்டங்கள் வயல்நிலங்கள் நாசமாகியுள்ளதை கடந்த செய்தி அறிக்கைளில் அவதானிக்க முடிகின்றது.
கரும்பு, தென்னை, பாக்கு, சோளம் பயிர்கள் யானைகளின் ஊடுவலால் நாசமாகியுள்ளதுடன் யானை-மனித மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டதக்கது.
இதேபோல் காட்டு எல்லைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலிகள் உள்ளிட்ட காரணங்களால் பல யானைகள் உயிரிழந்துள்ளன.
இதனால் யானை – மனிதன் மோதலுக்கு தீர்வு காண்பதில் இலங்கையில் இன்னும் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை. காலத்துக்கேற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கமும் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 5 வருடங்களில் யானை – மனித மோதலை குறைப்பதற்கான நிதி ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் ஒப்பீட்டளவில் யானை – மனித மோதலால் ஏற்படுகின்ற மரணங்கள் எண்ணிக்கை மற்றும் சொத்து இழப்புக்கள் குறைவடைந்துள்ளமை தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை.
எனவே இவ்வாறான பிரச்சினை உக்கிரம் அடைய மனிதர்கள் அல்லது யானைகள் அத்துமீறுகின்றனவா அல்லது அரசாங்கத்தின் திட்டங்கள் போதுமானதாக அமையவில்லையா என்ற கேள்விகளை தோற்றுவிக்கின்றது. எனவே யானை – மனித மோதலினால் ஏற்படுகின்ற இழப்புக்கள், அவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எவ்வாறாக அமைந்திருக்கின்றது? போன்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகும்.
யானை மனித மோதல் காரணமாக 2014 – 2018 வரையான காலப்பகுதியில் 1128 யாணைகள் மரணித்துள்ளன. இவற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளதலினால் 251, மின் தாக்கத்தினால் 117, வெடிகளுக்கு இலக்கானதால் 249, நஞ்சு உடலுக்குள் சென்றமையால் 28, புகையிரத விபத்துக்களினால் 57, வேறு அபாயங்களினால் 89, இனங்காணப்படாத காரணங்களினால் 235, இயற்கை காரணங்களினால் 133, வேறு காரணங்களினால் 125 போன்ற காரணங்கள் உள்ளடங்குகின்றன. அதனால் 2014 – 2017 வரையான காலப்பகுதியில் காட்டு யானைகளில் 60 வீதமானவை மனித நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானை – மனித மோதலுக்கான காரணங்கள் காரணங்களாக மனிதர்களால் முன்னெடுக்கப்படுகின்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் (அரச மற்றும் தனியார்), சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற காடழிப்புகளின் காரணமாக நிர அமைப்பில் ஏற்படகின்ற மாறுதல்கள், பயன்படுத்தக்கூடிய வளமான வாழ்விடங்கள் இல்லாமல் போதல் அல்லது குறைவடைதல், காட்டு யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுதல் மற்றும் யானைகளின் நடை பாதைகளை தடை செய்தல் போன்ற காரணங்களினால் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதோடு, அதனால் யானை – மனித மோதல் வெகுவாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கிராமத்துக்குள் நுழைகின்ற காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலின் காரணமாக இரு பகுதியினருக்கும் சேதங்கள் ஏற்படவது அதிகரித்திருக்கின்றது. அவற்றின் காரணமாகவே மனித மரணம், காட்டு யானை மரணம், உடல் ரீதியான சேதம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் என்பன பாரிய விளைவுகளாக இருக்கின்றன.
இலங்கையில் யானை – மனித மோதல் பிரதானமாக எட்டு மாகாணங்களில் 58 பிரதேச செயலகப் பிரிவுகளில் பரந்து காணப்படுகின்றது. இவற்றுள் அதிக மோதல் காணப்படும் பிரதேசமாக வெள்ளவாய, லுணுகம்வெஹர, அம்பாறை, உருணை, போரதீவுப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, மகியங்கணை, தெஹிஅத்தகன்டிய, வில்கமுவ, திம்புலாகல, வெலகந்த, தெகிராவை, பளுகஸ்வெவ, கல்கமுவை, கொட்டவெஹெர மற்றும் தில்வெரட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வனத்தினுள் உணவுத் தட்டுப்பாடு காரணமாக தற்போது நாட்டினுள் குப்பைகளைக் கொட்டும் 54 இடங்களில் காட்டு யானைகள் 300 இற்கும் அதிகமான அளவில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதோடு காட்டு யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்வதன் காரணமாக பல்வேறு நோய்களுக்குள்ளாகி மரணமடைவதோடு மரண பரிசோதனையில் யானைகளின் வயிற்றினுள் உக்காத பொலித்தீன் பை, ஷொப்பின் பை, பிளாஸ்டிக் போத்தல் போன்ற பல்வேறு பொருட்கள் காணப்படுவதாக கால்நடை மருத்துவர்களின் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு சிறந்த உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டப்பளம் அஸ்ரப் நகரில் கொட்டப்படும் குப்பைகளை சுமார் நூற்றுக்கணக்கான யானைகள் உண்ண வருவதும் பின்னர் குறித்த குப்பைகளில் உள்ள பொலித்தீன் பொருளை உண்டு மரணிப்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே யானை – மனித மோதலை குறைப்பதற்கு யானைகளைக் பேணும் தேசிய முக்கியத்துவத்தை அறிந்து காட்டு யானைகளைப் பேணுவதற்காக அமைச்சரவையினால் “இலங்கையில் காட்டு யானைகளைப் பேணுதல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கை” எனும் தலைப்பில் கொள்கை கோவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திணைக்களத்திற்கு 2006 செப்டெம்பர் 20 ஆந் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய காட்டு யானைகளைப் பேணல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையினுள் பின்வரும் 06 கொள்கைகள் அடங்கியுள்ளன.
யானைகள் வாழும் இடங்களை பேணும் பூமி வலயமாக அறியப்பட்ட வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்குரிய காப்பகம் போன்று யானைகளை பேணும் மகாவலிக்குரிய பிரதேசங்களையும் கண்டறிந்து யானைகளை பேணும் பிரதேசங்களை அமைக்கவும் பிரேரணை செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வகையினுள் ஐந்து யானைகளைப் பேணும் பிரதேசங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அறியப்பட்டு யானைகள் பேணும் பிரதேசமாக பெயரிடப்பட்டிருந்தது.
யானைகள் வாழும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி காப்பகத்திற்கு மேலதிகமாக காடுகளாக தனியார் நிலங்களையும் உள்ளடக்குவதாக முகாமைத்துவப்படுத்திய பாதுகாப்பகம் அமைக்க இதன் மூலம் பிரேரிக்கப்பட்டிருந்தது.அதற்கமைய தற்போது இலங்கையில் முகாமைப்படுத்தப்பட்ட யானைகள் பாதுகாப்பமாக மத்தள யானைகள் முகாமைத்துவ காப்பகம் மட்டுமே அறியப்பட்டுள்ளதாக, இது முன்னோடி செயற்றிட்டமாக தென் மாகாணத்தில் செயற்படுத்த பிரேரிக்கப்பட்டுள்ளது.
யானை – மனித மோதலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவற்றை முறையாக அமுல்படுத்தப்படாமை மற்றும் மேற்பார்வை செய்யப்படாமை காரணமாக யானை – மனித மோதலின் இழப்புக்களை குறைப்பது இன்று வரையும் முடியால் உள்ளமை வெளிப்படையாகும்.
இதனால் குறித்த மோதலினால் யானைகளும் மனிதர்களும் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றனர். எனவே மனிதன் மற்றும் யானைகளை காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்
இவ்வாறு தொடர்ச்சியாக யானை மற்றும் மனித மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும் அவற்றினை நிவர்த்திப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Comments are closed for this post.