ஆதி வள்ளியப்பன்

இயற்கை அவதானிப்பு, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கு எடுத்துக் காட்டாகக் கூறக்கூடிய உலகின் சிறந்த பண்பாடுகளில் ஒன்றைக் கொண்டது தமிழ்ச் சமூகம். ஆனால், நவீன சூழலியல் கருத்துகள் உலகில் கவனம் பெறத் தொடங்கிய காலத்தில், தமிழ்நாட்டில் அதே அளவுக்குக் கவனம் பெற வில்லை. தன் வேர்களை இடையில் மறந்து விட்ட தமிழ்ச் சமூகம் புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகே மெல்லமெல்ல நவீன சூழலியல் கருத்துகள் சார்ந்து கவனம் செலுத்தத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் சூழலியல் அக்கறை பரவலாகிவருகிறது. ஆனாலும் இது போதாது.

ஏன் என்ன காரணம்? ஒருபுறம் இயற்கையை வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், அந்த வேர்களை மீட்டெடுக்கும் பயணத்தில் இருக்கிறது. அதே நேரம் கால மாற்றம் இத்துறை சார்ந்த நவீன – அறிவியல் புரிதல்களைக் கொண்டுவந்துள்ளது. இன்றைக்கு எந்த ஒரு செயல்பாட்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் தர்க்க நியாயங்கள் கவனப்படுத்தப்படுகின்றன. எந்த செயல்பாடும் மனிதக் குல லாபத்துக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறதா, அது இயற்கைச் சூழலை எப்படிப் பாதிக்கிறது என்பது சார்ந்து பொதுச் சமூகம் கொஞ்சம்கொஞ்சமாக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளது.

புதிய கருதுகோள்

நவீன சூழலியல் சார்ந்த புரிதல்கள் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் சிறுசிறு குழுக்கள் மூலமாக உருவாகிவந்தன. அப்போதுதான் தமிழகத்தில் சூழலியல் கோட்பாடு அறிமுகமாகத் தொடங்கியது. எந்த ஒரு புதிய அக்கறையும் கோட்பாடுகளும் தாய்மொழியில் விளக்கப்பட வேண்டும். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கைப் பாதுகாக்கும் இயக்கம் இதை முன்னெடுத்தது. தமிழகத்தில் மனித உரிமை அமைப்புகள் இது சார்ந்து கவனம் செலுத்தத் தொடங்கின. மறைந்த நெடுஞ்செழியன் ஒருங்கிணைப்பில் பல நண்பர்கள் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். மற்றொருபுறம் சு. தியடோர் பாஸ்கரன், பாமயன், பால் பாஸ்கர், ச. முகமது அலி உள்ளிட்டோர் சூழலியல் குறித்து எழுதத் தொடங்கினார்கள்.

புதிய கருதுகோள்களைத் தாய்மொழியில் விளக்குவது அவசியம். அதேநேரம், அது மிகவும் சவாலானது. ஒரு கருதுகோள் சார்ந்த புரிதலைப் பரவலாக்க, மக்களுடன் எளிதில் தொடர்புப் படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் நடை முறை உதாரணங்களுடன் விளக்க வேண்டும். அத்துடன் புதிய சொல்லாக்கங்களும் தேவை. தமிழில் இது மையப்படுத்தப்பட்ட வகையில் நடைபெறவில்லை என்ற போதிலும், சிறுசிறு முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன.

எழுத்து முயற்சிகள்

‘சவுத் விஷன்’ பாலாஜி, சமீபத்தில் மறைந்த ‘ஓயாசிஸ்’ பிரபலன் உள்ளிட்டோர் நடத்திவந்த பதிப்பகங்கள் சூழலியல் சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பதிலும் விற்பனை செய்வதிலும் ஆர்வம் காட்டின. ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’, வந்தனா சிவாவின் ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ போன்ற சூழலியல் செவ்விலக்கியங்கள் இப்படித்தான் தமிழுக்கு வந்தன. இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் கருத்தைப் பரப்புதலிலும் சூழலியல் என்கிற பொருளும் அது சார்ந்த களச்செயல்பாடுகளுமே மையமாக இருந்தன. தனிநபர்களோ, தலைமையோ, ஒற்றைமய சிந்தனைப் போக்கையோ பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் இப்படி வளர்ந்துவந்த சுற்றுச் சூழல் செயல்பாடுகளும் சூழலியல் எழுத்தும் இன்றைக்கு மிகவும் முக்கியமான புள்ளியை வந்தடைந்துள்ளன. சு. தியடோர் பாஸ்கரன், பாமயன், நக்கீரன், வறீதையா கான்ஸ்தந்தின் உள்ளிட்டோர் தமிழ்ச் சூழலியல் எழுத்துக்கு ஒரு முகத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ் மண், தமிழ்ப் பண்பாடு, காலம்காலமாக அது முன்மொழிந்தும் பின்பற்றியும் வரும் மதிப்பீடு களை முன்னிறுத்தக்கூடியதாக அவர்களுடைய எழுத்தும் வாதங்களும் அமைந்துள்ளன.

தார்மிக வலு

மற்றொருபுறம் சூழலியல் எழுத்தும் சுற்றுச் சூழல் செயல்பாடுகளும் இன்றைக்கு புதிய ஃபேஷனாக மாறிவருகின்றன. ‘சூழலியல் காவலர்’ என்கிற அடையாளத்துடன் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும் அது சார்ந்து கவனம் பெறவும் துறையில் புதிதாகக் கால்பதிப்பவர்கள் முயல்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக ஊடகங்கள், தொலைக் காட்சி விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மேம்போக்கான, ஆழமற்ற, அறிவியல் பூர்வமற்ற வகையில் சூழலியல் கருதுகோள்களைக் கவனப்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது.

சூழலியல் செயல்பாடு என்பது ஆழமானது, உணர்வுப்பூர்வமானது. எளிமையான வாழ்க்கை முறை, இயற்கையைக் குறைவாகச் சுரண்டுதல், ஒட்டுமொத்த அம்சங்களையும் கணக்கெடுத்துக் கொள்ளும் பார்வை போன்றவையே இதன் அடிப்படை. இந்த தார்மிக அடிப்படைகளைக் கொண்டே, யாராக இருந்தாலும் சூழலியல் பாதுகாப்பை முன்வைக்கவும் பேசவும் முடியும்.

ரேச்சல் கார்சன், மசானபு ஃபுகோகா, வங்காரி மாத்தாய், சுந்தர்லால் பகுகுணா போன்றோர் தங்கள் வாழ்க்கை முறையையே சூழலுக்கு இணக்கமானதாக, எடுத்துக்காட்டாக மாற்றிக்கொண்டு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள். சூழலியலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கான தார்மிக மனோபலம் அவர்களிடம் வலுவாக இருந்தது.

முரண்பட்ட பார்வை

இன்றைக்குச் சூழலியல் சிக்கல்கள் தீவிரமடைந்துவருகின்றன. நிதியுதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பல சூழலியல் அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாகச் சுற்றுச்சூழல் அமைப்புகளை நடத்திவரும் சில அரசியல் கட்சிகள், ஆன்மிக அமைப்புகள் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் நிதியுதவியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அதே வழியில் சில தன்னார்வ அமைப்புகள் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பிரசாரத்தை நிதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தற்போது நடத்திவருகின்றன.

இது போன்ற செயல்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காரில் வலம்வருவதும், குளிரூட்டப்பட்ட அரங்குகளில் சூழலைக் காக்கக் குரல் கொடுப்பதும் முரணாக உள்ளன. தொழிற்சாலை முதலாளிகளிடமும் எளிய மக்களிடமும் எப்படி ஒன்றுபோல் சூழலியல் பாதுகாப்பைப் பேச முடியும்? சூழலியலை சீர்கெடுப்பவர்களிடமும் அதன் மோசமான பலன்களை அனுபவிப்பவர்களிடமும் எப்படி ஒரே தீர்வுகளை எதிர்பார்க்கவோ, முன்வைக்கவோ முடியும்?

சூழலியல் ஆர்வத்தை வெளி அடையாளமாக முன்னிறுத்திக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அறுவடை செய்ய நினைப்பவர்கள் சூழலியல் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதும், தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கையில் சூழலுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதையும் பார்க்கும்போது இயல்பாகவே அது வசீகரமற்றதாக மாறிவிடுகிறது. இது ஒரு முரணான போக்கு.

ஒருபுறம் சூழலியல் சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் வணிக அமைப்புகள் பசுமை அடையாளத்தையும், பசுமைப் பாதுகாப்பையும் தங்கள் வெளி அடையாளமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இப்படிச் செய்வதன் பெயர் ‘பசுமைக் கண்துடைப்பு’. அதேபோல் சூழலியல் தன்னார்வச் செயல்பாடுகளும் பசுமைக் கண்துடைப்பாக மாறிவிடக் கூடாது.

தமிழ்ப் பசுமை எழுத்தும், தமிழ்நாட்டின் சூழலியல் களச்செயல்பாடுகளும் தம் தார்மிக வலுவில் வேர் பிடித்தவையாக, அடிப்படைகளில் உறுதிகொண்டவையாக இருக்க வேண்டும். சூழலியல் பாதுகாப்பு என்பது ஊருக்கு நல்லது சொல்வதுடன் நம் வாழ்விலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டியது. அப்போதுதான் பசுமைப் பாதுகாப்பு வீறு கொண்டு எழும்! (நன்றி: இந்து தமிழ்)