இலங்கையில் நெற் செய்கைக்கான ரசாயன உரம் மற்றும் களை நாசினிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் அவை – பன்மடங்கு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த போகத்தின் போது, இயற்கை வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுமாறு அரசு திடீரென அறிவித்ததோடு, ரசாயனப் பசளை மற்றும் நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு தடையினையும் விதித்தது.

இதன் காரணமாக, நெற் விளைச்சலில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டதோடு, இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெல்லுக்கான விலையும் அதிகரித்தது. தற்போதைய நிலையில் தனியார் சந்தையில் 66 கிலோ எடையுள்ள நெல் மூடையொன்றின் விலை 7200 ரூபாவாக உள்ளது.

இவ்வாறான நிலையில், அரசின் இயற்கை வேளாண்மைத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே பாரிய எதிர்ப்பு ஏற்பட்டதோடு, ரசாயன உரம் மற்றும் நாசினிகளை வழங்குமாறு விவசாயிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பின் காரணமாக, இயற்கை வேளாண்மை திட்டத்திலிருந்து பின்வாங்கிய அரசு; ரசாயன உரம் மற்றும் நாசினிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தனியாருக்கு வழங்குவதாக கடந்த வருட இறுதியில் அறிவித்தது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சிறுபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில், ரசாயன உரம் மற்றும் களை நாசினிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதோடு, கறுப்புச் சந்தையில் அவை பன்மடங்கு அதிக விலைகளில் விற்கப்படுகின்றன.

பத்து மடங்கு அதிக விலையில் பசளை

உதாரணமாக, 2015ஆம் ஆண்டுவரை 350 ரூபாவுக்கும், பின்னர் 1500 ரூபாவுக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட 50 கிலோகிராம் எடைகொண்ட யூரியா உரப் பையொன்று, தற்போது அம்பாறை மாவட்டத்தில் 35 ஆயிரம் ரூபா வரையில் கறுப்புச் சந்தையிலே விற்கப்படுகிறது.

நெற் செய்கையின் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்தப்படும் களை நாசினிகளும் பல மடங்கு அதிக விலைகளில் விற்பனையாகின்றன. 6,290 ரூபா விலை குறிக்கப்பட்டுள்ள 01 லீட்டர் அளவான களை நாசினி போத்தலொன்று கறுப்புச் சந்தையில் 13 ஆயிரத்து 500 ரூபா வரையில் விற்கப்படுகிறது. 400 மில்லி லீற்றர் அளவுள்ள மற்றொரு களை நாசினி போத்தலொன்றில் அதிகபட்ச விற்பனை விலை 4850 ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அது 9500 ரூபாவுக்கு கறுப்புச் சந்தையில் விற்பனையாகின்றது.

இலங்கையில் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும். நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் இம்மாவட்டம் 20 சதவீதம் பங்களிப்புச் செய்கிறது.

இந்த நிலையில் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 69 ஆயிரம் ஹெக்டயர்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உரம் மற்றும் நாசினிகள் போதியளவில் இறக்குமதி செய்யப்படாமையினாலேயே, அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதிக விலைகளுக்கு அவை விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏக்கர் ஒன்றில் நெற் செய்கை மேற்கொள்வதற்கு சாதாரணமான காலங்களில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரையில் செலவாகும் என்கின்றனர் விவசாயிகள். ஆனால், தற்போது ரசாயன உரம், களை மற்றும் பீடை நாசினிகள் பன்மடங்கு அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றமையினால், 150,000 தொடக்கம் 02 லட்சம் ரூபா வரையில் செலவிட வேண்டி வரும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பன்மடங்கு அதிகமாக செலவு செய்து – நெற் செய்கையில் ஈடுபடும் போது, அதிலிருந்து லாபத்தைப் பெற்றுக் கொள்வது கேள்விக்குரியதாகும் என, அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மைகளுக்கான ரசாயன உரம் மற்றும் நாசினிகளை விற்பனை செய்யும் கடையொன்றினை நடத்தி வருகின்ற நிசார் கூறுகின்றார்.

ரசாயனம் பயன்படுத்தினால் அரச உதவி இல்லை

இது இவ்வாறிருக்க, அரசு தொடர்ந்தும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாகவும், சேதன முறையிலான நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு திண்மப் பசளை (கூட்டெரு), திரவப் பசளை, உயிர்ப் பசளை உள்ளிட்டவற்றை அரசு இலவசமாக வழங்குவதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் மேலும் கூறினார்.

அதேவேளை, ரசாயன உரம் மற்றும் நாசினிகளைப் பயன்படுத்தி, நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு அரசு எவ்வித மானியங்களையோ, நஷ்ட ஈடுகளையோ வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சேதன நெற் செய்கையின் போது நஷ்டம் ஏற்படுமாயின் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதற்கிணங்க, கடந்த போகத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை எதிர்கொண்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான மதிப்பீடுகளை கமநல சேவை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்டப் பணிப்பாளர் கலீஸ் தெரிவித்தார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில், ஒரு ஹெக்டயருக்கு 05 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இருந்த போதும், கடந்த போகத்தில் 3.9 மெட்ரிக் டொன் விளைச்சலே கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த போகம் இயற்கை நெற்செய்கையில் ஈடுபடுமாறு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சில தவறுகள் நிகழ்ந்து விட்டன. சேதனப் பசளைகளை விவசாயிகளுக்கு வழங்கிய தனியார் கம்பனிகள், அவற்றினை எந்தளவு, எந்தக் காலப்பகுதியில், எந்த அடிப்படையில் பயிர்களுக்கு பிரயோகிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கத் தவறி விட்டன. விவசாய உத்தியோகத்தர்களுக்குக் கூட – இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை” எனவும் கலீஸ் கூறுகின்றார்.

“ஆனால், இம்முறை சிறுபோகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விவசாய உத்தியோகத்தர்களுக்கு சேதன நெற்செய்கை பற்றிய விழிப் பூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இதுபற்றிய அறிவூட்டலை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்” என தெரிவித்த அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ்; “நெற் செய்கையில் ரசாயன உரம் மற்றும் நாசினிகள் பயன்படுத்தப்படுவதை, நாம் ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம்” என்கிறார். (நன்றி -பிபிசி தமிழ்)