இரண்டு ஆண்டுகளாகச் சற்று வெறிச்சோடியிருந்த தூத்துக்குடி விமான நிலையம், இப்போது ஊர்ச்சந்தை போலாகிவிட்டது. அதேபோல், நெல்லையில் எல்லா இடங்களிலும் அப்படி ஒரு கூட்டம். தாமிரவருணி படித்துறையில், நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில், அந்தோணியார் தேவாலயத்தில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்துக்கான அல்லோலகல்லோலக் கூட்டத்தில், புத்தகக்காட்சியில், பூப்புனித நீராட்டு விழாவில், தேநீர்க் கடைகளில், சிறிதும் பெரிதுமாக எக்கச்சக்கமாய் முளைத்திருக்கும் அனைத்து உணவு விடுதிகளிலும் ஏராளமான கூட்டம்.

சந்தித்த பல நண்பர்கள் கேட்ட ஒரே கேள்வி, ‘‘கரோனா அவ்வளவுதானே… இனி வராதில்ல?’’ தங்களின் ஊகம் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்கிற அசாத்திய நம்பிக்கையைத் தாண்டி, எதையும் ஆராய்வதில் யாருக்கும் விருப்பமில்லை. ‘‘நாலாவதெல்லாம் நமக்கு வராதுல. நாந்தான் அப்பவே சொன்னேம்லா’’ என இப்பவும் பரபரப்பாய்ப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மார்ச் 24-ல் வெளியான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் 4-ம் அலைக்கான ஆய்வறிக்கை சில செய்திகளைச் சொல்லியுள்ளது. அந்தக் கட்டுரையில் பேசியிருப்பது ‘டெல்டாக்ரான்’ எனும் கரோனாவின் புதிய வேற்றுரு பற்றி.

அந்தப் புதிய வேற்றுருவில், ஸ்பைக் புரதம் 36 வகை மாற்றங்களைக் கொண்டுள்ளதாம். இந்த 36-ல், 27 புரதக் கூறுகள் டெல்டா போல (AY.4 ), 4 புரதக் கூறுகள் ஒமிக்ரான் (BA.1) போல இருக்கின்றனவாம். மிச்சமுள்ள 5 கூறுகள் இரண்டின் தன்மைகளையும் கொண்டுள்ளனவாம். நவம்பர் 21 முதல் பிப்ரவரி 2022 வரை எடுத்துள்ள மாதிரிகள் அடிப்படையில் இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவன கோவிட் ஆய்வுக் குழுத் தலைவர் மரியா வான் கேர்கோவ் வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய வேற்றுரு, தீவிர நோய் நிலை அச்சத்தை இதுவரை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சில காலமேனும் இதுபோல் வேற்றுருக்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் தொற்றுப் பாதிப்பு உள்ள வேளைகளில், ஒரே உடலில் இருவகையான வேற்றுருக்களின் தாக்கம் நேரக்கூடிய நிலையில், புதிய வேற்றுரு உருவாகும் சாத்தியம் பற்றியும் அவர் கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் 75-90% வரை குறைந்தபட்சம் முதல் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இன்னும் ஆப்பிரிக்க நாடுகளில் 15% தடுப்பூசிதான் போடப்பட்டுள்ளது. உலகெங்கும் 70 சதவீதத்தினருக்கும் மேல் தடுப்பூசி போட்டு முடிக்கையில், தடுப்பூசியின் மூலம் அல்லது தொற்று பெற்றேனும் திரள் நோய்க் காப்பை (herd immunity) 60-70% எட்டும்போது மட்டுமே நாம் ஆசுவாசம் கொள்ள முடியும்.

கரோனா பல கற்பிதங்களை உடைத்திருக்கிறது. பல வலிகளைக் கொடுத்திருக்கிறது. பல விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது. சற்று ஆழமாக கரோனாவின் தடயங்கள் மீது பயணிக்கும்போது, நாம் ஆறறிவில்லா சேப்பியன்களாய் காலங்காலமாய்ச் செய்த பிழைகளுடன், செயற்கை நுண்ணறிவு வரை படைத்த அறிவாளிகளாக(?) இப்போதும் தொடர்ந்து செய்துவரும் பிழைகள் மட்டுமே இந்த வைரஸ் போருக்குக் காரணம் என்பது வெள்ளிடை மலை. 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசியத் தீவுகளிடை நீர்ச்சந்திகள் வழியாக நீந்தி, ஆஸ்திரேலியாவை அடைந்தபோது, அங்கு கோலோச்சிக்கொண்டிருந்த டைப்ரோடுடான் எனும் பேருயிரிக் கூட்டத்தைக் கூண்டோடு அழித்த கூட்டம்தான் மனிதர்களான நாம்.

சைபீரியாவின் கொடும்பனிக்கு இடையே கொத்துக்கொத்தாக வாழ்ந்துவந்த உலகின் மாபெரும் உடலமைப்பைக் கொண்டிருந்த மாமூத் யானைகள் மடிந்து அற்றுப்போனதும் நம் காலடி அங்கு பட்டபோதுதான். இன்னும் அலாஸ்காவின் தேன்கரடி, மடகாஸ்கரின் யானைப் பறவை போன்றவை அழிந்ததும் மனித வரவால்தான் என்பதை யுவால் நோவா ஹராரி உள்ளிட்ட மனிதகுல ஆய்வாளர்கள் பலர் தரவுகளுடன் நிறுவுகின்றனர். இன்னும் எத்தனை உயிரிகளை நான் அழித்திருக்கிறோம் என்பது முழுதாகத் தெரியாது. ஆனால், இப்போது ஈழத்திலும் உக்ரைனிலும் சொந்த இனத்தையே கொல்லும் கொடூர இரைகொல்லிகளான மனித இனம், நிச்சயம் அன்று சுயலாபத்துக்காகப் பிற உயிரிகளைக் கொன்றழித்திருக்கும் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

கரோனாவின் வேற்றுருக்களைப் பற்றி யோசிக்கும்போது, அன்றும் சரி, இன்றும் சரி… சேப்பியன்களான நாம் தொடர்ந்து செய்த அட்டூழியங்களை ஆராயாமல் இருக்க முடியவில்லை. அன்று நெருப்பு கொடுத்த சக்தி, இடையில் வேளாண்மை தந்த பேராசை எனக் கூராயுதங்களுக்கான படிநிலைகள் நமக்குப் படிப்படியாக வந்துசேர இப்போதும் வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் வன்முறைகள்தான் விலங்குவழி தொற்றும் வைரஸ் இனங்களை உசுப்பிவிடுகின்றன. போலியோவைப் போல, பெரியம்மை ஏற்படுத்தும் வைரஸ்போலத் தடுப்பூசிகளால் மட்டும் உலகை விட்டு கரோனா வைரஸை ஒழித்துக்கட்டிவிட முடியாது.

விலங்குவழித் தொற்று மனிதரிடமிருந்து விரட்டப்பட்ட பின், வேறு உயிரினங்களில் ஒளிந்துகொள்ளும். மறுபடி நடத்தப்படும் சூழலியல் சிதைவில் மறுபடி வூஹானிலோ ஒட்டன்சத்திரத்திலோ வேறு வடிவில் பிறக்கலாம். உடனே வரிந்துகட்டிக்கொண்டு, ‘‘அதனாலதான் அன்றைக்கே தடுப்பூசி வேண்டாம்’’ எனத் தட்டையாகத் தர்க்கம் செய்ய வந்துவிட வேண்டாம். காய்தல் உவத்தலின்றி, எஸ்.ருக்மிணியின் ‘ஹோல் நம்பர்ஸ் அண்டு ஹாஃப் ட்ரூத்ஸ்’ உள்ளிட்ட கள உண்மைகளுடன் பகிரப்படும் அத்தனை கோவிட் நூல்களையும், ஆய்வுகளையும் வாசியுங்கள். கோவிட் மரணங்களைப் பேரளவில் குறைத்ததில் தடுப்பூசிகளின் பங்கு அளப்பரியது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்போதைய கேள்வி, இனி விலங்குவழி வைரஸ்களின் தாக்கம் மோசமாக இல்லாதிருக்க, அன்றைய சேப்பியன்கள் அழித்தொழித்த உயிரிகளின் புதைபடிவங்கள்போல நாமும் மாறிவிடாமல் இருக்க ஒரே வழி ‘ஒற்றை நலம்’ எனும் சிந்தனை மட்டுமே. இனி நலம் என்பது, என் கணையம் மட்டும் ஒழுங்காய்ச் சுரந்து நலமாயிருப்பதல்ல. என் மூச்சுப் பயிற்சியினால் என் ஆழ்மனம் அமைதியுடன் இருப்பதல்ல. நான் நின்றுகொண்டிருக்கும் நிலத்தின் அடியில் நெளிந்து ஊரும் மண்புழு நலமாயிருக்க வேண்டும்.

பக்கத்துத் தோட்டத்தில் நிற்கும் பூவரசு மரத்துப் பூவில் சுரக்கும் தேன் கலப்படமாகாமல் நலமாய் இருக்க வேண்டும். அதை உறிஞ்சும் தேனீயோ தேன்சிட்டோ நலமாக இருக்க வேண்டும். வானில் பறக்கும் இருவாச்சியோ குளத்தின் ஓரம் நிற்கும் நாரையோ வயிற்றுவலியுடன் அவதிப்படக் கூடாது. அதன் வாயில் இருக்கும் மீனில் ரசாயனக் கழிவு எஞ்சியிருக்கக் கூடாது. மீன், நாரை, மண்புழு, தேன்சிட்டு எல்லாம் நலமாக இருந்தால் மட்டும்தான் நாம் அனைவரும் நலமாயிருக்க முடியும். இந்த அத்தனையின் நலத்தில்தான் கரோனாவின் முடிவும் இருக்கிறது. (நன்றி: இந்து தமிழ்)

– கு.சிவராமன், சித்த மருத்துவர், தமிழக அரசின் கோவிட் கட்டுப்பாட்டு உயர்மட்டக் குழு உறுப்பினர்