சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் புகைப்படத்தை அமெரிக்காவின் நாசாவிண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட்சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரம் ஆண்டுதோறும் ஒரு செ.மீ. உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சர்வதேச சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நேற்று வெளியிட்டது. இந்த புகைப்படம் குறித்து நாசா வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை புதிய கோணத்தில் படம் பிடித்துள்ளோம். சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்திய, ஐரோப்பியஆசிய தட்டுகள் ஒன்றிணைவதால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் ஆண்டுதோறும் ஒரு செ.மீ. உயர்ந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

நாசா வெளியிட்ட எவரெஸ்ட்புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை இதுவரை 3.58 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர். (நன்றி: இந்து தமிழ்)